சக்தி ஸ்டோரீஸ் - விக்கிரமாதித்தன் வேதாளம் கதைகள்
சக்தி ஸ்டோரீஸ்
விக்கிரமாதித்தன் வேதாளம் கதைகள்
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் முருங்கை மரத்தில் ஏறி வேதாளத்தை பிடித்து தன் முதுகில் சுமந்து கொண்டு, அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தான். திடீரென விழித்துக்கொண்ட வேதாளம், விக்ரமாதித்தா நான் உனக்கு ஒரு கதை சொல்கிறேன் அந்த கதையின் இறுதியில் கேட்கப்படும் கேள்விக்கான பதிலை கூறவேண்டும். பதில் தெரிந்தும் மௌனமாக இருந்தால் உனது தலை சுக்குநூறாக வெடிக்கும் என கூறி கதை சொல்ல ஆரம்பித்தது.
இப்படி ஆரம்பிக்கும் வேதாளம் விக்கிரமாதித்தனுக்கு சொன்ன கதைகளை நம்மில் பலர் எவ்வளவு ஆர்வமாக நமது பால்ய வயதில் படித்திருப்போம்.
எங்கள் பாட்டி வாங்கி வரும் அந்த அம்புலிமாமா புத்தகத்திற்காக அப்படி காத்து கிடப்போம். புத்தகம் வந்ததும் நானும் என் தம்பியும் சண்டை போடுவோம் யார் முதலில் படிப்பது என்று.
ஒவ்வொரு முறையும் எங்கள் சண்டையை பார்த்து தலையை பிய்த்துக் கொள்ளும் பாட்டி கடைசியாக ஒரு உபாயம் செய்தார்.
அது அம்புலிமாமா வாங்கும்போது கூடவே ரத்னமாலாவும் சேர்த்து வாங்குவது. இப்பொழுது ஆளுக்கொரு புத்தகம் கிடைத்துவிடும். சந்தோஷமாக ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து படிக்க ஆரம்பிப்போம்.
அம்புலிமாமாவில் விக்கிரமாதித்தன் வேதாளம் என்றால், ரத்னமாலாவில் போஜராஜனுக்கு பதுமை சொல்லும் கதைகள்.
இரண்டு தொடர்களுமே மிக சுவாரஸ்யமாக இருக்கும். இரண்டு கதைகளுமே ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை தான்.
பாரத நாடு கலாச்சார செழுமையும், பண்பாட்டு முழுமையும் அமைந்த நாடு. எத்தனை எத்தனை கதைகள். அவை மூலம் எத்தனை எத்தனை உபதேசங்கள்.
கதை சொல்லிகளால் நிரம்பி வழிந்த/வழியும் நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை நினைத்தாலே பெருமை தான்.
விக்கிரமாதித்தன் மற்றும் வேதாளம் கதைகள் (வேதாள பஞ்சவிம்சதி) 11-ஆம் நூற்றாண்டில் காஷ்மீரிக் கவிஞர் சோமதேவ பட்டர் என்பவரால் சமஸ்கிருதத்தில் முதன்முதலில் தொகுக்கப்பட்டன.
இவை அவருடைய புகழ்பெற்ற பெரிய இலக்கிய படைப்பான கதாசரித்சாகரம் ("கதைகளின் சரித்திர சமுத்திரம்") என்பதன் ஒரு பகுதியாக எழுதப்பட்டவை ஆகும்.
எழுதப்பட்ட காலத்திலேயே மிகவும் புகழ்பெற்ற இக்கதைகள் பல்வேறு இந்திய மொழிகளில் பிற்காலத்தில் மொழி பெயர்க்கப்பட்டன.
விக்கிரமாதித்தன் வேதாளம் கதைகளில் சுவாரஸ்யமான அம்சமே அக்கதைகளின் இறுதியில் வேதாளத்தால் எழுப்பப்படும் கேள்விகளில் அமைந்த புதிர்கள் தான்.
ஒவ்வொரு கதையிலும் வரும் அந்த புதிர் கேள்விகள் விசித்திரமானவை மற்றும் ஆச்சரியகரமானவை.
மனிதர்களின் உறவுகள், கடமைகள் மற்றும் தார்மீக நெறிகளைச் சோதிக்கும் நெருக்கடி மிகுந்த புதிர்கள் இவை (Moral Dilemmas).
இப்புதிர்களில் மிகப்பிரபலமான ஒரு புதிரை பார்க்கலாம் :
கதை:
ஒரு போரின் காரணமாக ஒரு தாயும் மகளும் காட்டில் தஞ்சம் புகுகின்றனர். அங்கு வரும் ஒரு மன்னனும் அவனது மகனும் இவர்களுடைய கால் தடங்களைக் காண்கின்றனர். பெரிய கால் தடம் உள்ளவளை மன்னனும், சிறிய கால் தடம் உள்ளவளை இளவரசனும் திருமணம் செய்வதாக முடிவெடுக்கின்றனர். ஆனால், எதிர்பாராதவிதமாக தாய்க்குச் சிறிய பாதமும், மகளுக்குப் பெரிய பாதமும் இருக்கிறது. விதிப்படி, மகன் தாயையும், தந்தை மகளையும் திருமணம் செய்து கொள்கின்றனர்.
வேதாளத்தின் புதிர்:
இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குள் என்ன உறவு முறை இருக்கும்?
ஒரு வெற்றிகரமான தமிழ் திரைப்படம் இப்புதிரின் அடிப்படையில் அமைந்தது. சமூகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இப்புதிருக்கான விக்கிரமாதித்தனின் பதில் என்னவாக இருக்கும். கண்டிப்பாக உங்களுக்கு தெரிந்திருக்கும். தெரிந்தாலும் இப்போது சொல்லிவிடாதீர்கள்.
ஏனெனில், இக்கதைகளை உங்களுடன் சேர்ந்து நானும் மறுவாசிப்பு செய்யலாம் என்று எண்ணியுள்ளேன்.
உங்களுக்கு ஓக்கே தானே ?
வரும் பகுதிகளில் ஒவ்வொரு கதையாக நாம் மறுவாசிப்பு செய்வோமா ?
உங்களின் ஆதரவைப் பொறுத்து 'சக்தி ஸ்டோரீஸ்' என்னும் இப்பகுதியில் "விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் சொன்ன கதைகள்" தொடரும்.
நன்றி



Comments
Post a Comment