அமானுஷ்யம் - IV - பழையனூர் நீலி கதை
அமானுஷ்யம் - IV
பழையனூர் நீலி கதை
சுஜாதாவின் "கரையெல்லாம் செண்பகப்பூ" வில் ஒரு சின்ன பார்ட்டாக வரும் "பழையனூர் நீலி கதை" யை முழுக் கதையாக பாலகுமாரன் தனது "புருஷவதம்" நாவலில் புனைந்திருப்பார்.
~
செய்துகொடுத்த சத்தியத்துக்காக ஒட்டுமொத்த கிராம ஆண்களும் தீமூட்டி அதில் குதித்து உயிர்நீத்த நிஜ வரலாறு இது.
நம் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்தது.
~
இனி பழையனூர் நீலி :
சுமார் 2500 ஆண்டுகளுக்கும் முன்பு தமிழ்நாட்டில் பழையனூர் என்னும் இடத்தில் நடந்த சம்பவம் இது.
பழையனூர் திருவள்ளூர் மாவட்டம், திருவலங்காட்டிற்கு அருகாமையில் உள்ள சின்ன கிராமம்.
~
தரிசனன் என்பவனை நீலீ என்ற பேய் துரத்திக்கொண்டிருந்தது. நீலி வேறு யாரும் இல்லை, தரிசனனின் மனைவியாக போன ஜென்மத்தில் வாழ்க்கைப்பட்டு அவனால் ஏமாற்றப்பட்டு நயவஞ்சகமாக கொல்லப்பட்டு பேயாகிப் போனவள்.
நீலி தரிசனனை ஜென்ம ஜென்மமாக பழிவாங்கத் துடித்தாள். அதனால் அவனைத் துரத்தினாள்.
தரிசனன் வியாபார விஷயமாக பழையனூர் வந்தான். பின்தொடந்து நீலியும் வந்தாள். இரவாகிவிட்டது.
பேய் அழகான பெண் உருவம் எடுத்து, இடுப்பில் குழந்தையுடன் தரிசனனை விரட்டியது. பயந்துபோன தரிசனன் பழையனூர் மக்களிடம் முறையிட்டான்.
நீலியோ தான் உண்மையிலேயே தரிசனனின் மனைவி என்று வாதிட்டாள். இடுப்பில் உள்ள குழந்தை தரிசனனின் குழந்தை என்றும் தங்களை புறக்கணித்து தரிசனன் ஓடிவிட்டான் என்றும் அழுது புலம்பி கண்ணீர் விட்டாள். தரிசனனுடன் தன்னையும் குழந்தையையும் சேர்த்து வைக்குமாறு ஓலமிட்டாள்.
நீலிக்கண்ணீர் என்பது இது தான்.
பழையனூர் மக்களும் அதை நம்பி அவர்கள் இருவரையும் அன்று இரவு தங்கள் ஊரிலேயே தங்க அறிவுறுத்தினர். என்னவாக இருந்தாலும் விடிந்தபின் பார்த்துக் கொள்ளலாம் என்றனர்.
தனிமையான இரவு அவர்களுக்குள் இருக்கும் பிணக்கை தீர்க்கும் என்று அவர்கள் நம்பினர்.
தரிசனன் பயந்து அலறினான். அவள் தன் மனைவி அல்ல என்றும் பெண் உரு கொண்ட பேய் என்றும், அவளிடமிருந்து தன்னை காக்குமாறும் கதறினான். அவளுடன் தன்னை தனிமையில் விட்டால் அவள் தன்னை கொன்று விடுவாள் என்று அரற்றினான்.
தரிசனனின் உயிருக்கு தாங்கள் 70 பேரும் உத்திரவாதம் என்று சாட்சிபூதேஸ்வரர் என்ற கோவிலில் வாக்குறுதி அளித்தனர் (இன்றளவும் இந்த கோவில் இருக்கிறது).
தரிசனன் பயந்த விபரீதம் நிகழ்ந்தே விட்டது.
காலையில் பார்த்தால் தரிசனன் இறந்து கிடந்தான். நீலியைக் காணவில்லை. ஊரெங்கும் அவளின் கொடூர சிரிப்பொலி கேட்டது.
தவறு செய்துவிட்டோம் என்று உணர்ந்த 70 வேளாள மக்களும் தாங்கள் செய்த சத்தியத்தை காப்பாற்ற முடியாமல் போனதால் பெரிய தீயை மூட்டி அதில் அனைவரும் குதித்து உயிர்விட்டனர்.
விடிவதற்கு முன் வயலுக்கு சென்றுவிட்ட வேளாளன் ஒருவன் மட்டும் மொத்த ஊரிலும் உயிருடன் மிஞ்சிய ஒரே ஆண்மகன்.
70 பேரும் தீயில் குதித்த இடத்தில் சிறிய மண்டபம் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது. அந்த மண்டபம் சாட்சிபூதேஸ்வரர் கோவிலுக்கு எதிரிலேயே உள்ளது.
இந்த மண்டபத்தில் தீக்குளித்த 70 பேர்களின் உருவங்கள் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
~
நீலி, தரிசனன் விவகாரம் சங்க இலக்கியங்களில் இடம்பெற்று இருக்கிறது. சத்தியத்திற்காக உயிர்விட்டவர்களைப் பற்றி கேள்விப்பட்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் அனைவரும் பழையனூருக்கு வந்தார்களாம்.
கடந்த 2500 ஆண்டுகளில் எத்தனையோ அரசாங்ககங்கள், மாடமாளிகைகள், கோபுரங்கள் தோன்றி மறைந்தன. ஆனாலும் சத்தியத்திற்காக கட்டப்பட்ட மண்டபமும், அதன் நிகழ்வுகளும் இன்றளவும் அழியாமல் மக்கள் மத்தியில் நின்று கொண்டிருக்கிறது.
~
பெண் பாவம் பொல்லாதது. எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் விரட்டி விரட்டி பழி தீர்க்கும்.

Comments
Post a Comment