சக்தி டிவைன் - அஷ்டாவக்ரர்

 சக்தி டிவைன்


அஷ்டாவக்ரர் 













"தன்னை உணராமையால் உலகு தோன்றும்; தன்னையுணரின் உலகு தோன்றாது. கயிற்றை காணாமையால் அரவு தோன்றும்; காணின்  அரவு தோன்றாது.

- அஷ்டாவக்ர கீதை (அத் 2; சுலோ: 7)



பொதுவாக நம் அனைவருக்கும் தெரிந்த போதனை நூல் என்றால் அது 'பகவத் கீதை' தான். ஆனால் பகவத் கீதையை போன்றே 40க்கும் மேற்பட்ட கீதைகள் இந்து மத தத்துவ களஞ்சியத்தில் உண்டு என்றால் நம்ப முடிகிறதா ?


ஆம். நாற்பதுக்கு மேற்பட்ட போதனை நூல்கள் இந்து மத தத்துவ நூல்களாக இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் அஷ்டாவக்ர கீதை. 


அஷ்டாவக்ரர் என்பவர் இந்த போதனை நூலை எழுதியதால் (அ) உபதேசித்ததால் இதற்கு அஷ்டாவக்ர கீதை என்று பெயர்.


பகவத் கீதையை கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான். அஷ்டாவக்ர கீதையை அஷ்டாவக்ரர் ஜனக மஹாராஜாவிற்கு உபதேசித்தார். 


இந்த அஷ்டாவக்ரர் என்பவர் யார் ? பார்க்கலாம்.


 "அஷ்ட" என்றால் எட்டு, "வக்ர" என்றால் கோணல் என்று பொருள். இவர் பிறக்கும்போதே தனது உடலில் எட்டு இடங்களில் கோணல்களுடன் (வளைவுகளுடன்) பிறந்ததால் இப்பெயர் பெற்றார்.


கஹோலர் மற்றும் சுஜாதா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் தான் அஷ்டாவக்ரர். 


தன் தந்தை வேதங்களை ஓதும்போது தாயின் கருவில் இருந்தபடியே அவர் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டினார். இதனால் கோபமடைந்த தந்தை இவருக்குக் கொடுத்த சாபத்தின் காரணமாகவே இவர் கோணலான உடலுடன் பிறந்தார்.


சிறு வயதிலேயே வேத விற்பன்னராகத் திகழ்ந்த அஷ்டாவக்ரர்  மிதிலா நாட்டை ஆண்ட ஜனக மன்னனின் அரசவையில் நடைபெற்ற தத்துவ விவாதத்தில், அப்போதைய பெரும் அறிஞரான வந்தியை வாதத்தில் தோற்கடித்தார்.


ஜனக மன்னனுக்கு இவர் அளித்த ஆன்மீக உபதேசங்களே 'அஷ்டாவக்ர கீதை' (அல்லது அஷ்டாவக்ர சம்ஹிதை) என்று அழைக்கப்படுகிறது. 


இது அத்வைத தத்துவத்தின் மிக உயர்ந்த நூலாகக் கருதப்படுகிறது. உடல் வேறு, ஆன்மா வேறு என்ற உயர்ந்த தத்துவத்தை இது விளக்குகிறது.


அஷ்டாவக்ரர் சிறு வயதிலேயே மிகச்சிறந்த அறிஞராகத் திகழ்ந்தார். மிதிலா நாட்டு மன்னனான ஜனகர், ஆன்மீக ஞானத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர். 


ஜனக மன்னர் ஒருமுறை அரசவையில் தனது ஆஸ்தான பண்டிதருடன் வேத விவாதங்களில்  ஈடு பட்டிருந்தார். அப்போது ஒரு புராதன வேதாந்த சாஸ்ரத்தில்-


“குதிரையேறும் ஒருவன் சேணத்தின் ஒரு சுவட்டில் காலூன்றி, மற்றொன்றில் கால் எடுத்து வைக்கும் நேரத்திற்குள் ப்ரும்ம ஞானம் பெறலாம்” -


எனும் மஹா வாக்கியம்  இருந்தது.


இமைப்பொழுதில் ஞானம் பெறமுடியும் என்ற அந்த வசனம் அவர் நெஞ்சில் ஒட்டிக்கொண்டு விட்டது.


குதிரை கொண்டு வரச் சொல்கிறேன். அந்த அனுபவத்தை பெறலாமா? என்று பண்டிதரிடம் கேட்டார் மன்னர். 


குழம்பி போன பண்டிதர் தன்னால் அந்த ஞான அனுபவத்தை நிரூபிக்க முடியாது என்று சொன்னார். 


அப்படியென்றால் அந்த வாக்கியம் பொய்யா? என்று மன்னன் கோபம் கொண்டான். 


என்னால் நிரூபிக்க முடியாது என்பதனால் அந்த வாக்கியம் எவ்வாறு பொய்யாக போகக்கூடும்.. அனுபவித்து உணர்ந்த பெரியோரின் வாக்கு அது..  என்றார் பண்டிதர். 


கோபம் கொண்ட மன்னன் அந்த பண்டிதரை சிறையிலடைத்தான். நாட்டில் உள்ள பண்டிதர்கள் அனைவரையுமே அழைத்து அந்த ஞான அனுபவத்தை தனக்கு வரவழைக்குமாறு கேட்டான்.


எவரிடமும் பதில் கிடைக்காமல் போகவே எல்லோரையும் சிறையில் அடைத்தான். 


நாட்டில் உள்ள கற்றறிந்த பண்டிதர்கள் அனைவரும் சிறையில். 


நாடே துயரத்தில் மூழ்கியது.


இவ்விவரம் அறிந்த வயதில் சிறிய அஷ்டாவக்ரர் நேராக மன்னன் அவைக்கு சென்றார். 


மன்னனை பார்த்து பண்டிதர்கள் அனைவரையும் விடுதலை செய்தால் தன்னால் மன்னனின் சந்தேகத்தை போக்க முடியும் என்று உறுதிபட தெரிவித்தார்.


மன்னர் ஜனகருக்கு  அவரின் உறுதியைக் கண்டு அவரால் நிச்சயம் தன் ஐயத்தைத் தீர்த்துவைக்கமுடியும் என்று தோன்றவே, சிறைப்பட்ட எல்லோரையும் விடுவிக்க உத்தரவிட்டார்.


மன்னன் அடுத்த நொடியே அஷ்டாவக்ரரிடம், “குதிரையைக் கொண்டு வரச் சொல்லவா?” என்று ஆவலுடன் கேட்க, சிரித்தபடியே, “ அரசே! அவசரப்படவேண்டாம். நாம் இருவருக்கும் யாருமற்ற தனிமைதான் இப்போது தேவை. அங்கே உமக்கு அறிந்துகொள்ள வேண்டிய உண்மையை உரைப்பேன்” என்றார்.


ஒரு பல்லக்கில் அஷ்டாவக்ரரும், அரசன் குதிரையிலுமாக எல்லோரும் சூழக் காட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். 


வனத்தை அடைந்ததும் அரசரிடம், ”உடன் வந்த பரிவாரங்கள் அனைத்தையும் திரும்பிப் போகச் சொல்லுங்கள். நாம் இருவர் மட்டும் தனித்திருக்கலாம்” என்று வேண்டிக்கொண்டார்.


மன்னனும் எல்லோரையும் அனுப்பிவிட்டு, குதிரையின் சேணத்தில் ஒரு காலும், தரையில் மறுகாலுமாக தயாராக நின்றபடி, “இன்னும் தாமதிக்கவேண்டாம் முனிவரே! உண்மையை எனக்கு அருளத் தயை புரிய வேண்டும்” என்றார்.


அஷ்டாவக்ரர் அமைதியாக , அரசே! நீங்கள் அறிய விரும்பும் இந்த உண்மை, குருவினால் ஒரு சீடனுக்கு அருளப்பட வேண்டியது என்று கூறப்பட்டுள்ளது! நாம் இருவரும் அப்படி சம்பந்தப்பட்டிருக்கிறோம் என்பது உண்மைதானா? என்று கேட்டார்.


ஜனகரும் முனிவரை வணங்கி, நான் இப்போது முதல்  உங்கள் சீடன். அருள் புரியுங்கள் என்றார். 


மறுபடியும் முனிவர், ஜனகா! உண்மையான சீடன் என்பவன் தன்னையும், தன் உடமைகளையும் குருவுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டுமே? என்று கேட்டார்.


மன்னன் ஜனகரும், அப்படியே அர்ப்பணிக்கிறேன் என்று தன்னையும், தன் உடமைகளையும் குருவாய் ஏற்றுக்கொண்ட அஷ்டவக்ரருக்கு அர்ப்பணம் செய்தார். 


அஷ்டவக்ரரும், அப்படியே இருப்பாயாக என்று சொல்லி, அடுத்த கணம் மறைந்து போனார்.


மன்னர் ஜனகர் மரம் போல அசையாமல் நின்றார். சூரியன் மறையும் வரையும், மறைந்த பின்னும் அந்த இடத்திலேயே தன்னை குருவுக்கு  அர்ப்பணித்தபடியே நின்றுகொண்டிருந்தார்.


நீண்டநேரத்துக்குப் பின்னும் அரசன் திரும்பவில்லையே என்ற கவலை கொண்ட அரசனின் பரிவாரங்கள் அவரைத் தேட ஆரம்பித்தார்கள். காட்டுக்குள் மரம் போல நிற்கும் அரசரைக் கண்டு அவர்கள் திடுக்கிட்டார்கள்.


மன்னரோ தன்னைச் சுற்றியிருந்தவர்களையோ, அவர்களின் கேள்விகளையோ கவனித்தவராய் இல்லாமல் அப்படியே உறைந்திருக்க, மக்கள் வேதனையுடன் அஷ்டாவக்ரரைத் தேடினார்கள். 


அவரையும் காணாது போகவே, பெருத்த கோபமும், ஏமாற்றமும் சூழ அந்தக் கோலத்திலேயே மன்னனைப் பல்லக்கில் ஏற்றி, அரண்மனைக்குத் தூக்கி வந்து பள்ளியணையில் படுக்க வைத்தார்கள்.


மறுநாள் விடியலும் ஏமாற்றம் அளித்தது. மன்னனிடம் ஒரு மாறுதலும் தென்படாதது கண்டு, அஷ்டாவக்ரர் ஒரு மாயாவியாய் இருக்கக்கூடும் என்றும், அவரைத் தேடிக் கண்டுபிடித்து சிறையில் அடைக்கவேண்டும் என்றும் மந்திரிமார்கள் முடிவு செய்தனர். 


அவரைத் தேடிக் கண்டுபிடிக்க நாட்டின் எல்லாப் பாகங்களுக்கும் தூதர்களை அனுப்பினார்கள்.


அன்றைய நாள் முடிந்து.  இரவு பிறந்த வேளையில் அஷ்டாவக்ரர் தென்பட்டார். அவரைத் தூதர்கள் அரசவைக்குக் கூட்டிவந்தார்கள். 


முதன்மந்திரிக்கு அவரைக் கண்டதும், கட்டுக்கடங்காத கோபம் வந்தது. இருந்தாலும்  காரியம் கெட்டுவிடக் கூடாது என்று தன் கோபத்தை அடக்கிக்கொண்டு நடந்ததை எல்லாம் விபரமாக அஷ்டாவக்ரரிடம் எடுத்துச் சொல்லி, மன்னரை மறுபடியும் சுயநினைவுள்ளவராக ஆக்கவேண்டும். அரசரின் இந்த நிலைக்குத் தாங்கள்தான் காரணம்.  கண்டிப்பாகக் காட்டில் என்ன நடந்தது என்று எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்.


அஷ்டாவக்ரர் “ஜனகா” என்று கூப்பிடவும், “ஸ்வாமி! வரவேண்டும்” என்று வணங்கினார் மன்னர்.


அமைச்சர்களுக்கு பலத்த ஆச்சர்யம்.


ஜனகா! நான் உன்னைப் பரிதாபமான நிலமைக்குக் கொண்டுவந்து விட்டதாகவும், நான்தான் உன்னைப் பழைய நிலைக்குக் கொண்டுவரவேண்டுமென்றும் சொல்கிறார்களே? இது உண்மைதானா? நீயே சொல்! என்றார்.


யார் அப்படி அபாண்டமாகச் சொன்னது? சொல்லுங்கள் என்று வெகுண்டார் மன்னர்.


அரசனின் கோபத்தைக் கண்டு அரசவையே நடுங்கிற்று. அஷ்டாவக்ரரிடம், அரசரை எப்படியாவது சகஜ நிலைக்கு மீட்டுத் தாருங்கள் என்று அமைச்சர் உட்பட அரசவையில் இருந்த அனைவரும் விண்ணப்பித்தார்கள்.  


அப்படியானால் நீங்கள் அனைவரும் வெளியேறுங்கள். மன்னனுடன் நான் தனியாக இருக்கவேண்டும் என்றார் அஷ்டாவக்ரர்.


எல்லோரும் சென்றபின் அஷ்டாவக்ரர் , ஜனகா! நீ எப்படி இருக்கிறாய்? என்ன நடந்தது? வழக்கம் போல இல்லையே நீ? என்று கேட்டார்.



முனிவரே! நான் என்னையே உங்களுக்கு அர்ப்பணித்துவிட்டேன். உங்கள் ஆணைப்படி இனி நடப்பேன் என்று சொன்னார்.


ப்ரும்ம ஞானம் என்பது நன்கு பக்குவம் பெற்றவர்களுக்கே உபதேசிக்க உகந்தது. இதுவரை நான் உன்னை சோதித்தேன். இரவு உணவுக்குப் பின் நாம் சந்திக்கலாம்  என்று சொல்லி, தனது கிரமங்களை முடித்து இரவு அரண்மனைக்கு திரும்பினார் அஷ்டாவக்ரர். 


ஜனகரின் அந்த இரவு அதற்கு முந்தைய இரவுகளைக் காட்டிலும் நீண்ட இரவாய் அர்த்தம் பொதிந்த இரவாய் அமைந்ததிருந்தது. 


ப்ரும்ம நிலை மற்றும் அதை அடையும் வழி யாது? என்ற ஜனகரின் கேள்விக்கு, 


ப்ரும்மம் என்பது நீயே அன்றி வேறில்லை. அதை உணர தேசம், காலம் எதுவும் இல்லை. அது எதுவோ அதுவே நீ. அதுவே எல்லையில்லா பரிபூர்ண ஆத்மா என்று உபதேசித்தார் அஷ்டவக்ரர். 


அன்றிரவு முழுவதும் அவ்விருவருக்கும் நடுவே இடம்பெற்ற உரையாடல்களே அஷ்டாவக்ர கீதையாய்ப் பரிணமித்தது.


மறுநாள் மன்னர் இயல்பாய்த் தன் அரசவைக்கு வந்து, தன் அலுவல்களில் ஈடுபட்டதைக் கண்டு அனைவரும் மகிழ்வுற்றனர்.


அஷ்டாவக்ரரும், கண நேரத்தில் ஞானம் உறுவது குறித்த உன் சந்தேகம் தெளிவு பெற்றதா? உன் அனுபவத்தைக் கற்றறிந்த இந்த சபையோருக்கும்  சொல் என்று வேண்டினார்.


ஜனகரும், என் முதிர்ச்சியின்மையினாலேயே சாஸ்த்ர வாக்யத்தைத் தவறாய்ப் புரிந்துகொண்டேன். உங்களால் நான் தெளிவுபெற்றேன். அந்த வாக்யத்தின் ஒவ்வொரு எழுத்தும் உண்மையே  என்று ஒப்புக்கொண்டார்.

~


அஷ்டாவக்ர கீதை என்பது அத்வைத வேதாந்தத்தின் உச்சகட்ட தத்துவமாகக் கருதப்படுகிறது. இதன் முக்கிய தத்துவங்கள் பின்வருமாறு:


நீ உடலல்ல, ஆன்மா.  மனிதன் என்பவன் சதை மற்றும் எலும்புகளால் ஆன உடல் அல்ல; அவன் என்றும் அழியாத, தூய்மையான அறிவு வடிவிலான ஆன்மா (Pure Consciousness).


மனிதன் தன்னை ஏதோ ஒரு பிணைப்பில் (பந்தத்தில்) இருப்பதாக நினைத்துக் கொள்கிறான். ஆனால் உண்மை என்னவென்றால், ஆன்மாவிற்கு எந்த பந்தமும் இல்லை; நீ இப்போதே, இந்த கணத்திலேயே சுதந்திரமானவன் (ஜீவன்முக்தன்).


கனவில் காணும் காட்சிகள் எப்படி விழித்தெழுந்தவுடன் மறைந்து விடுகிறதோ, அதுபோலவே இந்த உலகியல் வாழ்க்கையும் தற்காலிகமான ஒரு மாயத் தோற்றமே ஆகும்.


இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி என எதற்கும் மனம் கலங்காமல், அனைத்தையும் ஒரு சாட்சியாக நின்று வேடிக்கை பார்க்கப் பழக வேண்டும்.


ஆசைகளையும், வெறுப்புகளையும் முழுமையாகக் கைவிடுவதன் மூலமே ஒருவனால் உண்மையான அமைதியையும் ஆன்ம ஞானத்தையும் அடைய முடியும்.

 ~


அஷ்டாவக்ர கீதை மொத்தம் இருபது அத்யாயங்கள் கொண்டதாய் அமைந்திருக்கிறது. பதினொரு அத்யாயங்களில் அஷ்டாவக்ரரின் உபதேசங்களும், அவரின் உபதேசத்தால் ஜனகர் பெற்ற அனுபவங்களின் சாரமாக ஒன்பது அத்யாயங்களுமாக இதன் வடிவம் இருக்கிறது.


மொத்தமாக 298 வசனங்களில் நிறைவடையும் இந்த கீதையின் வியப்பில் ஆழ்த்தும் அம்சம், மிக எளிமையும், சிக்கனமான மொழி அமைப்பும், மிக ஆழமான உண்மைகளும்தான்.

~


ராமகிருஷ்ண பரமஹம்ஸரும், பின்னால் விவேகானந்தரும் இந்த கீதைக்கு மிக உயர்வான ஓரிடம் அளித்திருந்தார்கள். 


ரமண மகரிஷியின் வாழ்க்கையிலும் அஷ்டாவக்ர கீதைக்கு முக்கிய இடமுண்டு. பல இடங்களில் அஷ்டாவக்ர கீதையிலிருந்து மேற்கோள்கள் காட்டியிருக்கிறார்.


இந்த அஷ்டாவக்ர கீதை தமிழில் 1937ல் திரு. ரா. விஸ்வநாதனால் சமஸ்கிருதத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட போதே பகவான் ரமணரால் பார்வையிடப் பெற்றது. 


ஓஷோவும் இந்தப் புராதன போதனைக்குப் பல விரிவான விளக்கங்கள் அளித்து மிகச் சிறப்பான இடம் கொடுத்திருந்தார்.


உண்மை நிலை என்பது என்றும் எவர்க்கும் இயல்பாய் உள்ளது என்றும், 

அதைப் பெற பிற முயற்சி ஒன்றும் வேண்டியதில்லை என்றும், 

நினைப்புக்கு எட்டாத அந்த நிலை எதையும் நினையாது 

சும்மா இருப்பதினாலேயே விளங்கும் , 


என்று சொல்லும் இந்த கீதையின் தளம் வேதாந்த விஷயத்தில் உண்டாகும் சந்தேகங்களுக்கெல்லாம் மருந்தென்றே சொல்லலாம். 

~


தன்னை உணராமையால் உலகு தோன்றும். தன்னை உணரின் உலகு தோன்றாது. கயிற்றைக் காணாமையால் அரவு தோன்றும். காணின் அரவு தோன்றாது.


- அஷ்டவக்ர கீதை (அத் 2; சுலோ: 7)


Comments