சக்தி லைஃப் - கரப்பான் பூச்சி
சக்தி லைஃப்
கரப்பான் பூச்சி
நெடுநாளாய் பூட்டிக்கிடந்த ஒரு அழகிய வீடு. சுத்தம் செய்யப்படாததால் வீட்டிற்குள் குப்பையும் கூளமும் சேர்ந்து கிடந்தன. சுவரெங்கும் ஒட்டடை படிந்து தோரணம் ஆடிக்கொண்டிருந்தது. சிலந்திப்பூச்சிகள் வலை பின்னி ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்க , தரையெங்கும் கரப்பான் பூச்சிகள் சுற்றி திரிந்து கொண்டிருந்தன. சுவர்களில் பல்லி ஊர்ந்துகொண்டிருந்தது.
திடீரென்று கதவை திறந்துகொண்டு ஒரு குடும்பம் நுழைந்தது. வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தனர் குடும்பத்தினர். ஒட்டடைகள் தட்டப்பட்டு குப்பை கூளங்கள் அள்ளப்பட்டு வீடு சுத்தமாக்கப்பட்டது. குழந்தைகள் கரப்பான் பூச்சி இருந்த இடங்களில் ஓடி ஓடி சென்று மருந்து அடித்து சாகடித்தனர். இரண்டொரு நாட்களில் புதிய குடும்பம் அந்த வீட்டிற்கு குடி வந்தது.
ஒரே ஒரு கரப்பான் பூச்சி மட்டும் தப்பியது.
மெல்ல அந்த கரப்பான் பூச்சி வெளியே வந்தது. சுவற்றில் ஒட்டிக் கொண்டிருந்த பல்லியிடம் சென்றது.
எங்களை மட்டும் துரத்தி துரத்தி மருந்தடித்து கொல்கிறார்களே ... உங்களை ஒன்றும் செய்வதில்லையே ஏன்? எனக் கேட்கிறது.
பல்லி சொன்னது, சாக்கடைகளில் கிடைக்கும் கழிவுகளை தின்று நீங்கள் செல்லும் இடங்களிலெல்லாம் நோயை கொண்டு செல்கிறீர்கள். நீங்கள் மனிதர்களை கடிக்கும்போது அவர்களுக்கு நோய் வருகிறது. சுத்தமில்லாத இடங்களில் வாசம் செய்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள், அதனால் தான் உங்களை மனிதர்கள் கொல்கிறார்கள் என்றது.
பல்லிகளான நாங்கள் மனிதர்களை ஒன்றும் செய்வதில்லை. உங்களை போன்று மனிதர்களுக்கு தொல்லை கொடுக்கும் சிறு சிறு பூச்சிகளை தேடி தேடி தின்று தீர்க்கிறோம், நற்பலன்களையும், தீய பலன்களையும் முன்கூட்டியே மனிதர்களுக்கு சொல்கிறோம்.
அதுமட்டுமில்லாமல் பல்லி சொல்லும் பலன்கள் என்று பஞ்சாங்கத்திலேயே மனிதர்கள் போட்டிருக்கிறார்கள். அதனாலேயே தான் வீடு பார்க்க வரும்போது பல்லி இருக்கும் வீடுகளை பார்த்தால் 'வாழும் பல்லி' இருக்கும் வீடு என்று குடி வந்துவிடுகிறார்கள்.
நன்மை செய்பவர்களைத் தான் எல்லோருக்கும் பிடிக்கும் தெரிந்து கொள்... என்று அந்த பல்லி சொன்னது.
ஓ.. அப்படியா.. சரி, வருகிறேன் நண்பா.. என்றபடி சிலிண்டருக்கு அடியே புகுந்துகொண்டது கரப்பான் பூச்சி.
~
இனி கரப்பான் பூச்சி.
இந்த வார்த்தையை கேட்டாலே சிலர் பதறியடித்து துள்ளுவார்கள். ஆனால் இந்த கரப்பான் பூச்சிகளின் வாழ்வில் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமே இல்லை.
டைனோசர்களின் காலத்திற்கு முன்பிருந்தே உலகில் வாழ்ந்து வரும் ஒரு சில பூச்சி இனங்களில் கரப்பான் பூச்சியும் ஒன்று.
நம் வீட்டில் காணும் கரப்பான் பூச்சிகள் ஆப்பிரிக்காவை பூர்விகமாக கொண்டவை. மனிதன் இடம்பெயரும்போது கரப்பான் பூச்சிகளும் அவனுடன் சேர்ந்து உலகம் முழுவதும் பரவியது.
கரப்பான் பூச்சிகளில் 4500க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன.
நம்முடன் சாதாரணமாக வீடுகளில் இருக்கக் கூடிய கரப்பான் பூச்சிகள் பல நோய்களை பரப்பும் ஒவ்வாமை பூச்சிகள் ஆகும்.
நம் வீட்டில் கரப்பான் பூச்சிகள் வருவதற்கு முக்கிய காரணம் ஈரப்பதம், உணவுக் கழிவுகள் மற்றும் இருண்ட இடங்களாகும். இதனாலேயே கரப்பான் பூச்சிகள் எளிதில் சமையலறை மற்றும் குளியலறையை நோக்கி ஈர்க்கப்படுகின்றன.
கரப்பான்களின் உடலமைப்பு அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தலை துண்டிக்கப்பட்ட ஒரு கரப்பான் பூச்சியால் ஒரு வாரத்துக்கு மேல் உயிர் வாழ முடியும்.
கரப்பான் பூச்சிக்கு முறையான circulatory system கிடையாது. அதன் நரம்பு மண்டலம் மையப்படுத்தாமல் அதன் உடல் எங்கும் பரவலாக விரிந்திருக்கிறது. இதனாலேயே கரப்பான் பூச்சியின் தலை துண்டிக்கப்பட்டால் கூட அவற்றால் ஒரு வாரம் வரை உயிர்வாழ முடியும்.
தலை இல்லாமல் அவை இறப்பதில்லை, ஆனால் தலையை இழப்பதன் மூலம் அவற்றின் வாய் இல்லாமற் போவதால் தண்ணீர் குடிக்க முடியாமல் தாகத்தால் அவை இறக்கின்றன.
கரப்பான் பூச்சிகளால் தண்ணீருக்கு அடியில் 30 முதல் 40 நிமிடங்கள் வரை மூச்சை அடக்கி உயிர் வாழ முடியும்.
மிகச் சிறிய அதிர்வை கூட உணரும் ஆற்றல் பெற்ற கரப்பான் பூச்சி நொடிக்கு ஒரு மீட்டர் ஓடும் திறன் பெற்றிருக்கின்றன. சிறுத்தையின் வேகத்தை விட இது அதிகமாகும்.
தாவரங்கள், விலங்கினங்களின் கழிவுகள் முதல் பசை, காகிதம் என எதையும் உண்ணும் தன்மை கொண்டவை கரப்பான் பூச்சிகள்.
உணவு இல்லாமல் ஒரு மாதமும், தண்ணீர் இல்லாமல் இரண்டு வாரங்களும் இவற்றால் உயிர்வாழ முடியும்.
வீடுகளில் உணவுப் பொருட்கள், பாத்திரங்களில் ஏறி உணவு நச்சு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களைப் பரப்புகின்றன.
கரப்பான் பூச்சிகளின் எச்சம், உமிழ்நீர் மற்றும் உதிர்ந்த தோல் ஆகியவை வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளைத் தூண்டுகின்றன.
அணுகுண்டு வெடிப்பினால் சர்வமும் அழிந்தாலும் கூட கரப்பான் பூச்சிகள் சாவதில்லை என்னும் ஒரு கருத்து இப்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
இக்கருத்து ஓரளவு தான் உண்மையானது. மனிதன் தாங்கும் கதிர்வீச்சின் அளவை விட ஆறு மடங்கு அதிக கதிர்வீச்சை தாங்கும் சக்தி அவற்றிற்கு உண்டு என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், இக்கருத்து கரப்பான் பூச்சிகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து வகை பூச்சிகளுக்கும் பொருந்தும் என்றும் கூறுகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் ஆஸ்திரேலிய தினத்தில் கரப்பான்பூச்சி பந்தயம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
அமெரிக்காவில் சில பகுதிகளில் கரப்பான் பூச்சி தேநீர், டெட்டனஸ் போன்ற நோயைக் குணப்படுத்தும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
கரப்பான் பூச்சிகள் குறித்து பயம் கொண்டவர்களை katsaridaphobes என்றழைக்கிறார்கள்.
செல்லப்பிராணிகளைப் பழக்குவது போல கரப்பான்பூச்சிகளையும் பழக்க முடியும் என்கிறது ஓர் ஆய்வு.
மற்ற ரோபோக்களை விட அதிவேகமாக நகரும் ஆறு கால் கொண்ட ரோபோவை வடிவமைத்த கலிஃபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் ஃபுல் (Robert full) அந்த ரோபோவின் வடிவமைப்புக்கு உந்துதலாக இருந்தது கரப்பான் பூச்சி என்கிறார்.
"ஒருமுறை கரப்பான்கள் நகர்வதை உன்னிப்பாகக் கவனித்தேன் நீளமான உருண்டை வடிவம் கொண்ட உடலை ஆறு சுழலும் கால்கள் தாங்கி நிற்கின்றன. கடினமான இடங்களில்கூட அவை நகர்கின்றன. அதுதான் என்னைத் தூண்டியது" என்கிறார் அவர்.
சமீபமாக சீன விவசாயிகள் கரப்பான் வளர்ப்பை அதிக முதலீட்டில் தொடங்கியுள்ளனர். இந்தப் பண்ணைகளில் அறுவடை செய்யப்படும் கரப்பான் பூச்சிகளைப் பெரும் தொகை கொடுத்து வாங்குகின்றனர் சீன மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்.
அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பிலும், பாரம்பர்ய சீன மருத்துவத்திலும் கரப்பான் பூச்சிகள் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் கரப்பான் பூச்சிகளுக்கான தேவை சீனாவில் அதிகரித்துள்ளது.
சீன அழகு சாதன பொருட்கள் வாங்கும் முன் அதிலுள்ள அடக்கத்தை அறிந்து கொள்வது கரப்பான் பூச்சி அலர்ஜி உள்ள பெண்களுக்கு நல்லது.
சீனா, தாய்லாந்து மற்றும் பர்மாவின் பாரம்பர்ய உணவுப் பட்டியலில் கரப்பான் பூச்சிகளும் உண்டாம்.
இத்தினியூண்டு ஒரு சின்ன பூச்சி தான் பெரும்பாலான நம் இல்லத்தரசிகளை அலற விட்டுக்கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும் போது தான்.....



Comments
Post a Comment