ஜெய் ஹனுமான்
சக்தி டைரீஸ்
ஜெய் ஹனுமான்
நான் மன்னார்குடியில் அம்மா வழி பாட்டி வீட்டில் வளர்ந்தேன். என் வாழ்வின் முக்கியமான கால கட்டங்களை நான் மன்னார்குடியில் இருந்தபோது தான் கடந்தேன்.
பாட்டி மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 04:00 மணிக்கெல்லாம் எழுந்து நகரசங்கீர்தனம் சென்று விடுவார்.
1980, 90களில் மன்னார்குடியில் சத்ய சாயிபாபா சமிதி ரொம்ப ஆக்டிவ் ஆக இருந்தது. அந்த அதிகாலை குளிரிலும் குறைந்தது 20 பேராவது கண்டிப்பாக நகர சங்கீர்த்தனத்துக்கு வருவர்.
பாட்டி அதிகாலை 03:45க்கு எல்லாம் என்னை எழுப்பி விட்டுவிடுவார்.
நான் எழுந்து பல் தேய்த்து என் சைக்கிளில் பாட்டியை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு வீட்டில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த கைலாச நாதர் கோவிலுக்கு கொண்டு சென்று விடவேண்டும்.
பாட்டிக்கு ஒரு நல்ல குணம். தன் விருப்பு வெறுப்பு ஆசாபாசங்களை மற்றவர் மீது திணிப்பதில்லை.
நான் அப்போது மார்க்ஸ், ஏங்கெல்ஸ், மாவோ என்று திரிந்து கொண்டிருந்த நேரம். கைலாச நாதர் கோவிலில் இறங்கியதும் என்னை அனுப்பி விடுவார். என் கொள்கை கோட்பாடு தெரியுமென்பதால் என்னை இருக்க சொல்லி கட்டாயப்படுத்த மாட்டார்.
நான் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிவிடுவேன். திரும்பும் வழியில் பஸ் ஸ்டாண்டுக்கு எதிர்புறம் திறந்து இருக்கும் ஏதேனும் ஒரு டீ கடையில் தேநீர் அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன்.
அதன் பின்னர் தூக்கம் வராது. டேப் ரிக்கார்டரில் இளையராஜா கேஸட்டுகளில் ஏதாவது ஒன்றை போட்டு பாட்டு கேட்டுக் கேட்டுக் கொண்டே புத்தகங்கள் படிப்பேன்.
பஜனை முடிந்ததும் பாட்டி அவராகவே அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் நடந்து வீட்டுக்கு வந்துவிடுவார்.
அது போல தான் ஒரு நாள் திரும்பி வரும் வழியில் கீழ ராஜவீதியில் அர்பன் பேங்க்குக்கு எதிர்புறம் இருந்த தெற்கு பார்த்த ஆஞ்சநேயர் கோவிலில் எனக்கு திருமணம் ஆக பாட்டி வேண்டிக் கொண்டு வந்தார்.
அன்று மார்கழி மாத அமாவாசை நாள். ஹனுமத் ஜெயந்தி.
எனக்கொன்றும் அபபோது பெரிதாக வயதாகிவிடவில்லை. ஜஸ்ட் 24 தான்.
நான் வழக்கம் போல் ஆபீஸ் கிளம்பி வந்துவிட்டேன். துணைப்பதிவாளர், மன்னார்குடி சரக அலுவலகத்தில் அப்போது வேலை.
மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன்னர் நண்பன் தாஜ் அலுவலகத்திற்கு வந்தான். தாஜ் என்னும் தாஜுதீன் எங்கள் பக்கத்து வீட்டுக் காரன்.
பாட்டி அர்ஜென்ட் ஆக உன்னை அழைத்து வரச் சொன்னார் என்றான். வேறு விவரம் எதுவும் சொல்லவில்லை. அவனுக்கும் விவரங்கள் தெரியவில்லை.
வீட்டுக்கு வந்த பிறகு தான் தெரிந்தது என் வருங்கால மாமனார் தன் மகளுக்கு என்னை சம்பந்தம் பேச விஜயவாடாவில் இருந்து மன்னார்குடிக்கு என் மாமியாருடன் வந்திருக்கிறார் என்பது.
எனக்கு ஒரு மாதிரி ஷாக் ஆக இருந்தது. பாட்டி எனக்கு கல்யாண பேச்சு வார்த்தைகளை அதற்குள் துவக்கி விடுவார் என்று நான் நினைத்ததேயில்லை.
நான் வேறு அப்போது தில்லுமுல்லு ரஜினி மாதிரி மீசையை எடுத்துவிட்டு 'ஞே' என்று இருந்தேன்.
மன்னார்குடியில் எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் அப்போது விஜயவாடா இந்தியன் வங்கியில் பணிமாற்றலில் சென்று பணிபுரிந்து கொண்டிருந்திருக்கிறார். தெலுங்கு தெரியாத அவருக்கு என் மாமனார் குடும்பம் நிறைய உதவி செய்திருக்கின்றனர்.
தன் மகளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கும் விஷயத்தை அந்த நண்பரிடம் தெரிவித்த என் மாமனார் கண்டிப்பாக மாப்பிள்ளை பையன் தமிழ் பையனாகத் தான் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
பல ஆண்டுகளாக விஜயவாடாவில் செட்டில் ஆகி இருந்தாலும் தன் மகளுக்கு தமிழ் நாட்டை சேர்ந்தவர் தான் கணவனாக வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.
அந்த இந்தியன் வங்கி குடும்ப நண்பருக்கு டக்கென்று என் நினைவு வர, என்னைப் பற்றி கூறியிருக்கிறார்கள்.
ஆண்டுக்கொரு முறை குலதெய்வமான சுவாமிமலை முருகன் கோவிலுக்கு வரும் என் மாமனார் அப்படியே மன்னார்குடிக்கு வந்து விட்டார்.
என் பாட்டியிடம் பரஸ்பர குடும்ப விவரங்களை பகிர்ந்து கொண்ட என் மாமனார் தங்களுக்கு பையனை பிடித்து விட்டது என்பதை தெரிவித்து சம்பிரதாயமாக பெண்ணின் ஜாதகத்தை கொடுத்தார்.
ஜாதகம் கொடுத்த கையோடு " நான் ஜாதகம் பார்ப்பதில்லை, உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் பொருத்தம் பார்த்து முடிவு சொல்லுங்கள்" என்றார்.
இது ஆஞ்சநேயர் அனுக்கிரஹம். இன்று காலை தான் ஆஞ்சநேயர் கோவில் சென்று வந்தேன். மனப்பொருத்தம் இருக்கும்போது ஜாதக பொருத்தங்கள் எதற்கு..? நாங்களும் பார்க்கப்போவதில்லை" என்று சட்டென்று என் பாட்டி சொல்லிவிட்டார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பாட்டி தன்னளவில் கடுமையான ஆச்சாரசீலர்.
உடனேயே திருமணம் நிச்சயம் ஆயிற்று. இருவரின் ஜாதகங்களும் ஆஞ்சநேயர் சன்னதியில் வைத்து பிரார்த்தனை செய்யப்பட்டன.
விஜயவாடாவில் திருமணம்.
ஒரு கம்பார்ட்மெண்ட் முழுக்க உறவினர்கள் நிரம்பி இருக்க கிட்டத்தட்ட 50 பேர் ஹௌரா மெயிலில் விஜயவாடா கிளம்பினோம்.
திருமணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு. ஏதாவது ஒரு கோவிலில் இருந்து மாப்பிள்ளையை காரில் அழைத்துக் கொண்டு கல்யாண மண்டபம் வரவேண்டும்.
எனக்கு தேர்வு செய்த கோவிலை பார்த்ததும் பயங்கர ஆச்சரியம்.
ஆஞ்சநேயர் கோவில் அது.
நம்ம ஊர் மாதிரி மாப்பிள்ளை அழைப்புக்கென பிரத்தியேக கார் கிடையாது அங்கே. சாதாரண அம்பாஸடர் கார் தான்.
கோவிலில் கிளம்பிய அந்த கார் செம ஸ்பீடில் அடுத்த சில நிமிடங்களில் மண்டபத்தை அடைந்துவிட்டது.
திருமணம் மிக விமர்சையாக நன்றாக நடந்தது.
மறுநாள் காலை ரிடர்ன் நவஜீவன் எக்ஸ்பிரஸில். உறவினர்கள் அனைவரும் என்ஜாய் செய்தார்கள் அந்த ட்ரிப்பை.
அதுபோல் ஒரு ஜாலியான பயணத்தையும் திருமணத்தையும் இன்று வரை பார்க்கவில்லை என்று என் உறவினர்கள் இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.
திருமணம் முடிந்தது. இரண்டு மகன்கள். என் வாழ்க்கை நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது இன்றுவரை.
வருத்தங்கள் ஏதுமில்லை.
~
சில ஆண்டுகள் கழித்து என் மாமனார் விஜயவாடாவில் இருந்து குடும்பத்துடன் திருவாரூருக்கே வந்துவிட்டார். எங்கள் வீட்டிற்கு அருகிலேயே வீடு பார்த்து கொடுத்து குடியமர்த்தினேன்.
என் மனைவியின் இரு தங்கைகளுக்கும் திருமணம் முடிக்க அவருக்கு பேருதவியாக இருந்தேன்.
என் மீது அதீத பாசத்துடன் இருந்த என் மாமனார் கடைசி வரை என்னை தன் மகனாவே எண்ணினார்.
நான்கு பெண்களை பெற்று, வளர்த்து, திருமணம் செய்து கொடுத்து, பேரன் பேத்திகள் வளர்க்கும் பேறு பெற்று, மூத்த மகள் வயிற்று பேரன் பேத்திகளின் திருமணத்தை கண்ணார கண்டு வாழ்வாங்கு வாழ்ந்த என் மாமனார், 2006 *ஹனுமத் ஜெயந்தி* அன்று அவருக்கு ரொம்பவும் பிடித்த என் இல்லத்தில் தனது 78 வது வயதில் காலமானார்.
~
இன்று மார்கழி மாத அமாவாசை. ஹனுமத் ஜெயந்தி. என் மாமனாரின் நினைவு நாள்.
கடந்த வருடம் ஹனுமத் ஜெயந்தி அன்று இருந்த என் மாமியார் இந்த வருடம் இல்லை. பெரும் சோகம்.
என் மாமியார் ஆண்டுதோறும் என் மாமனாருக்கு கொடுத்து வந்த திதியை இன்று அவர் இல்லா நிலையில் நாங்கள் தொடர்கிறோம்.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்
ஜெய் ஸ்ரீராம்



Comments
Post a Comment