அலோகா
சக்தி லைப்
அலோகா
சில வருடங்களுக்கு முன் நான் சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அங்கு எனக்கு ஓட்டுனராக இருந்தவர் மணிவண்ணன்.
ஒருமுறை அவருடன் பயணம் செய்தபோது சுவாரஸ்யமான ஒரு நிகழ்வை கூறினார். மணிவண்ணன் ஒவ்வொரு ஆண்டும் நண்பர்களுடன் சென்னையில் இருந்து நடைப் பயணமாக திருப்பதி சென்று வருவார். ஒருமுறை அப்படிச் செல்லும்போது இரவு தங்குவதற்காக திருவள்ளூர் தாண்டி ஒரு மண்டபத்தில் ஹால்ட் போட்டனர். அங்கு அவர்களுடன் வந்து சேர்ந்துகொண்டது ஒரு தெரு நாய். இரவு இவர்கள் அந்த நாய்க்கு உணவளித்துவிட்டு அதிகாலை புறப்படுவதற்காக சீக்கிரமே படுத்துக் கொண்டனர். அதிகாலை குரூப்பாக கிளம்பி நடைப் பயணத்தை தொடரும்போது தான் கவனித்தனர் அந்த நாயும் அவர்கள் கூடவே வருவதை. இவர்களுடனேயே நடந்து இவர்கள் தங்கும் இடத்தில் தங்கி மீண்டும் இவர்களுடனேயே புறப்பட்டு இரண்டு ஸ்டேட் தாண்டி திருப்பதி வரை வந்த அந்த பைரவர் இவர்கள் மலை ஏறும் தருவாயில் காணாமல் போய் விட்டராம். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதை வீட்டில் நான் கூறும்போது என் பெரிய பையன் இதுபோன்ற நிகழ்வுகள் திருவண்ணாமலை கிரிவலத்தில் நிறைய நடப்பதாகத் தெரிவித்தான். ~ சரி, இப்போ “அலோகா” மேட்டருக்கு வருவோம். 19 முதல் 24 தேரவாத புத்த துறவிகள் “Walk for Peace” என்று டெக்ஸாஸில் இருந்து புறப்பட்டு வாஷிங்டன் DC நோக்கி தற்போது சென்று கொண்டிருக்கிறார்கள். மொத்த தூரம் 3700 கிமீ. கிட்டத்தட்ட 120. நாட்கள் இந்த ப்யணம். அமைதிக்கான பிரார்த்தனை, கருணை மற்றும் உலக மக்களின் ஒற்றுமைக்காக இந்த அமைதிப் பயணம் அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரிசையாக ஒருவர் பின் ஒருவராக இத்துறவிகள் நடந்து வருவது பார்க்க அழகாக இருக்கிறது. இணையம் எங்கும் இவர்களின் பயண விடியோ விரவிக் கிடக்கின்றது இப்போது. செல்லும் வழியெங்கும் அமெரிக்கர்கள் இவர்களுக்கு அன்பான வரவேற்பை வழங்குவது ஆச்சரியமாக இருக்கிறது. வழியில் மக்கள் மனமுவந்து வழங்கும் உணவை ஏற்கிறார்கள். இந்தப் பயணத்தில் ஆச்சரியம் என்னவென்றால் ஒரு இந்திய நாட்டு நாய் (Indie stray dog) இவர்களோடு இவர்களுக்கு இணையாக நடந்து வருவது தான். இதற்கு முன் இதைப்போல் இந்தியாவில் இத்துறவிகள் நடைப் பயணம் மேற்கொண்டபோது இவர்களோடு வந்து சேர்ந்தது தான் அந்த நாய். இவர்களோடு கூடவே இந்த பைரவர் நடந்துவந்த போது வழியில் கார் விபத்து ஒன்றில் சிக்கியது. அடிபட்டும் கூட துறவிகள் கூட நடந்து வருவதை இவர் நிறுத்தவில்லை. இந்த நிகழ்வு துறவிகளை நெகிழச் செய்தது. இந்த பைரவரை துறவிகள் தத்தெடுத்து கொண்டனர். அப்போது முதல் அவர்கள் கூடவே எங்கு சென்றாலும் தொடர்ந்து வருகிறார் இந்த நாயகர். இத்துறவிகள் அவருக்கு வைத்த பெயர் “அலோகா”. சமஸ்கிருதப் பெயரான “அலோகா” என்பது “ஒளி” அல்லது “தெளிவு” என்பதைக் குறிக்கிறது, துறவிகளால் பெயரிடப்பட்ட இந்த “அலோகா” விசுவாசம், மனவலிமை மற்றும் இரக்கம் ஆகியவறுடன் கூட இனங்களையும், எல்லைகளையும், மதங்களையும் தாண்டிச் செல்ல முடியும் என்ற எண்ணத்தைக் குறிக்கும் ஒரு அடையாளமாக விளங்குகிறார். எனவே “அலோகா” வை Peace Dog/Peace Ambassador என மக்கள் செல்லமாக அழைக்கின்றனர். துறவிகள் இன்று 70வது நாள் நடையை தொடர்கிறார்கள். ~ வாழ்க்கை தான் எவ்வளவு அழகானது. எல்லையற்ற ஆச்சரியங்களையும் சுவாரஸ்யங்களையும் வழி நெடுக வழங்கிக் கொண்டே இருக்கிறது.



Comments
Post a Comment