சக்தி லைஃப் - தேடலின் சுவாரஸ்யம்


சக்தி லைஃப் - தேடலின் சுவாரஸ்யம்


முன்பு இந்தியாவில் இயங்கி வந்த எஸ்ஸோ நிறுவன பெட்ரோல் பங்க்குகளைப் பற்றிய சுவாரஸ்யமான ஒரு பதிவினை நியாண்டர்ச்செல்வனின் டைம்லைனில் இன்று படித்தேன். அதில் கோவையில் Esso என்றொரு பேருந்து நிறுத்தம் இருப்பதாகவும் அதன் காரணத்தை தான் பிரான்ஸில் அறிந்துகொண்டதாகவும் தெரிவித்திருந்தார். 


எஸ்ஸோ  போலவே கால்டெக்ஸ் பெட்ரோலிய பங்குகளும் எழுபதுகள் வரை இந்தியாவில் இயங்கி வந்தன. இப்போது அந்த பங்குகள் இல்லையென்றாலும் மயிலாடுதுறையில் நகரின் பிஸியான பகுதியில் கால்டெக்ஸ் என்றொரு பேருந்து நிறுத்தம் இன்றும் இருக்கிறது. 


பல நாட்கள் எனக்கு எதற்கு இந்த பேருந்து நிறுத்தத்திற்கு இந்த பெயர் வந்தது என்பது புரிபடவேயில்லை. நான் நாகப்பட்டினத்தில் பணியாற்றிய காலத்தில் மயிலாடுதுறை செல்லும் போதெல்லாம் அங்குள்ளவர்களிடம் இப்பெயரின் பின்னணி பற்றி கேட்டிருக்கிறேன்.


ஒரு பெரியவர் குன்சாவாக அப்பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் ஒரு பங்க் இருந்ததாகவும் அதனால் அப்பெயர் வந்ததெனவும் ஒருமுறை தெரிவித்தார். அத்துடன் அதனை விட்டுவிட்டேன். 


இன்றைய நியாண்டர் செல்வன் அவர்களின் பதிவைப் பார்த்ததும் கோவையில் எப்படி எஸ்ஸோ என்னும் பேருந்து நிலையம் இருக்கிறதோ அதே போல் தான் மயிலாடுதுறை கால்டெக்ஸ் நிறுத்தமும் என்று தோன்றியது. அந்த நிறுத்தத்திற்கு அருகில் HP பெட்ரோல் பங்க் ஒன்று இயங்குகிறது. 


எஸ்ஸோ, கால்டெக்ஸ், பர்மா ஷெல் போன்றவை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்த சில பன்னாட்டு பெட்ரோல் நிறுவனங்கள் மற்றும் அதன் விற்பனை நிலையங்கள் (பங்க்) 


எஸ்ஸோ, அதாவது Esso என்பது Standard Oil Company என்னும் அமெரிக்க எண்ணெய் நிறுவனம் ஆகும். அதுபோலவே கால்டெக்ஸ் Caltex என்பதும்  கலிபோர்னியா டெக்ஸஸ் ஆயில் கம்பெனி ஆகும். 


இந்நிறுவனம் பெட்ரோலிய பொருட்களை உலகமெங்கும் விநியோகம்/விற்பனை செய்ய 1930களில் அமெரிக்காவில் துவக்கப்பட்டது.  Chevron மற்றும் Texaco என்ற இரண்டு நிறுவனங்கள் இணைந்து உருவானது தான் caltex.  


இந்நிறுவனம் வளைகுடா நாடுகளில் எடுக்கப்படும் கச்சா எண்ணெயினை வாங்கி பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலைகள் அமைத்து உலகெங்கும் பெட்ரோலை விற்பனை செய்து வந்தது. 


துவங்கப்பட்ட கொஞ்ச காலத்திலேயே ஆசியா,ஆப்ரிக்கா,ஆஸ்திரேலியா கண்டங்களின் நம்பர் ஒன் பெட்ரோல் மற்றும் துணைப்பொருட்கள் விற்பனை மையமாக மாறியது கால்டெக்ஸ். 


1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின்போது, இந்தியாவில் இயங்கி வந்த அமெரிக்காவின் எஸ்ஸோ, கால்டெக்ஸ்  மற்றும் பர்மா ஷெல் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், கம்யூனிஸ்ட் நாடான சோவியத் யூனியனிடம் இருந்து இந்தியா வாங்கிய கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்க மாட்டோம் எனப் பிடிவாதமாக மறுத்துவிட்டன. 


போர்ச் சூழலில் நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான எரிபொருளைச் சுத்திகரிக்க முடியாது என இந்த நிறுவனங்கள் கைவிரித்தது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.


இந்த பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடு அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்குக் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது. ஒரு நாட்டின் அவசர காலத் தேவையின்போது இப்படி மறுப்பது என்பது, இந்தியாவின் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு விவகாரங்களில் ஒரு பன்னாட்டு நிறுவனம் நேரடியாகத் தலையிடுவதற்குச் சமமானது என்று அவர் கருதினார்.


இதனால், போர் முடிவடைந்ததும் இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்த இந்திரா காந்தி, அந்த நிறுவனங்களை முழுமையாகத் தேசியமயமாக்கினார். இதன் மூலம் அந்தப் பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவை விட்டு வெளியேற்றிவிட்டு, அவற்றை இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய இந்திய அரசு நிறுவனங்களாக மாற்றினார்.


இதன்மூலம் கால்டெக்ஸ் நிறுவனம் மற்றும் எஸ்ஸோ நிறுவனம் ஆகிய அமெரிக்க  பெட்ரோலிய கம்பெனிகள்  ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆக மாறியது. பர்மா ஷெல் பாரத் பெட்ரோலியம் ஆக மாறியது. 


ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு பெயர் வந்ததற்கான காரணத்தை தேடித் போனால் ஒரு வரலாறே வெளியே வருகிறது. 

~


சென்னையிலும்  நிறைய பேருந்து நிறுத்தங்கள் வித்தியாசமான பெயர்களில் இருக்கின்றன. ராயபுரத்தில் 'கல்மண்டபம்" என்றொரு நிறுத்தம் இருக்கிறது. அதை பற்றி அறியப்போனால் அந்த பெயரில் ஒரு நாவலே வந்திருக்கிறது. அந்த நாவல் சொல்லும் விஷயங்கள் அதிர்ச்சியூட்டுபவை ஆக இருக்கின்றன. வழக்கறிஞர் சுமதி எழுதிய அந்த நாவல் 'தலித் பிராமணர்கள்' அதாவது 'சவண்டி பிராமணர்கள்' பற்றியும்  அவர்களை சக பிராமண சமூகம்  நடத்தும் விதத்தையும், பதற பதற விவரிக்கிறது. படித்துவிட்டு மூன்று நாட்கள் தூக்கம் வரவில்லை எனக்கு, 


நியூ ஆவடி ரோடில் ICF பேருந்து நிலையத்துக்கு  முந்தைய  ஸ்டாப் ஆக  'சுடுகாடு' என்றொரு பேருந்து நிறுத்தம் இருக்கிறது. 


அதன் வரலாற்றையும் தோண்டி பார்த்துவிட வேண்டியது தான்.

~


Comments