சக்தி டைரீஸ் - கொஞ்சம் வரலாறு
சக்தி டைரீஸ்
கொஞ்சம் வரலாறு
Caligula - Incitatus
மொத்த டீவீடே அவ்வளவுதான்.
ஆனால் அது சொல்லும் தகவல்கள். அப்பப்பா..!
சமீபத்தில் தமிழகத்தில் நடந்த ஒரு நிகழ்வுக்கு மிக பொருத்தமாக அந்த பெயர்களை ட்வீட் செய்து என்னை அசரடித்து விட்டார் அவர்.
இந்த Caligula என்னும் பெயர் எனக்கு அறிமுகமானது சில ஆண்டுகளுக்கு முன்பு தான். வரலாறு படித்தவர்கள் அல்லது வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஏற்கனவே அந்த பெயர் தெரிந்திருக்க கூடிய ஒரு பெயர் தான்.
இனி கலிகுலா..
~
மேற்கத்திய ரோமாபுரி சாம்ராஜ்ஜிய வரலாற்றில் கலிகுலா ஒரு தவிர்க்க முடியாத பெயர்.
கிபி 37லிருந்து 41 வரை தான் அவர் ரோம சாம்ராஜ்ஜியத்தை ஆண்டார். ஆனால் அந்த நான்கு ஆண்டுகளில் அவர் செயற்கரிய செயல்களை செய்து உலகின் மிக பயங்கரமான கிறுக்குத்தனமான சர்வாதிகாரி என்ற பெயரை வரலாற்றில் பெற்றுவிட்டார்.
அகஸ்டஸ் சீசரின் ஜூலியோ கிளாடின் வம்சத்தில் பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் 'காலியஸ் சீசர்'. ஆனாலும் இவர் சிறுவயது முதல் கலிகுலா என்றே அழைக்கப்பட்டிருக்கிறார்.
ரோமாபுரி சாம்ராஜ்யத்தின் அரசாட்சிக்கான உட்பகையில் கலிகுலாவின் சகோதரர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விடுகின்றனர். கலிகுலாவின் தாயார் அவரின் மாமாவான டைபீரியஸின் பாதுகாப்பில் கலிகுலாவை அனுப்பி வைக்கிறார்.
உள்நாட்டு சண்டையில் ஒருகட்டத்தில் பகைவர்களை வென்று டைபீரியஸ் ரோம சாம்ராஜ்ஜிய அதிபதி ஆகிறார். டைபீரியஸ் இறந்த பிறகு ரோம சாம்ராஜ்ய அரியணை ஏறுகிறார் நம் கலிகுலா.
தனது அரசாட்சியின் முதல் ஆறு மாதங்கள் ஒரு மிதவாதியாகவே இருந்திருக்கிறார் கலிகுலா. அதன் பிறகு தான் இவர் இந்த உலகம் கண்ட மோசமான சர்வாதியாகிறார் என்கிறது வரலாறு.
அவரது ஆடசியில் நடந்த கிறுக்குத்தனங்களையும், சர்வாதிகாரத்தின் உச்சத்தில் அவர் புரிந்த கொடுமைகளையும் கொஞ்சம் பார்ப்போம்.
கடல்தெய்வமான நெப்டியூனுடன் (Neptune) போர் அறிவித்து, தனது வீரர்களைக் கடலில் ஈட்டி எறியச் சொன்னார். பின்னர், போர் வெற்றிக்கான அடையாளமாக, கடல் சிப்பிகளை (Seashells) சேகரித்து வருமாறு தனது வீரர்களுக்கு கட்டளையிட்டார் கலிகுலா.
கலிகுலா தனது மூன்று சகோதரிகளுடன் தகாத பாலியல் உறவு கொண்டிருந்ததாக வரலாற்றாசிரியர்கள் சூட்டோனியஸ் மற்றும் காசியஸ் டியோ குறிப்பிடுகின்றனர்.
தனது பேரரசர் பதவிக்கு ஆபத்து வரும் என்றும், தாம் கொல்லப்படுவோம் என்ற அச்சத்திலும் ரோமானிய செனட் சபை உறுப்பினர்களை வெறுத்த அவர், அவர்களை பலவிதங்களிலும் கொடுமைப்படுத்தினார். செனட் உறுப்பினர்களை தனது தேருக்கு முன்னால் பல மைல்கள் ஓடச் செய்து அவமானப்படுத்தினார்.
எதிரிகள் மற்றும் நண்பர்கள் என தான் சந்தேகப்படும் எவரையும் தயவு தாட்சண்யமில்லாமல் சித்திரவதை செய்து கொன்றார்.
சித்திரவதை செய்பவர்களிடம், "பாதிக்கப்படுபவர் தான் சாவதை உணர வேண்டும்" என்று கூறி, கொடூரமான முறையில் கொல்ல உத்தரவிடுவார்.
ஒருமுறை, பேயஸ் மற்றும் பியூட்டோலி ஆகிய தீவுகளுக்கு இடையே சுமார் 3 மைல் தூரத்திற்கு கப்பல்களை ஒன்றிணைத்து ஒரு மிதக்கும் பாலத்தை அமைத்து, அதன் மீது தனது குதிரையில் அணிவகுத்துச் சென்றார் என்றும் இது ஒரு சோதிட கணிப்பைப் பொய்யாக்குவதற்காகச் செய்யப்பட்ட வீண் செலவு எனவும் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
தமக்கு முந்தைய பேரரசரும் தனது தாய்மாமாவும் ஆகிய டைபீரியஸ் சேமித்து வைத்திருந்த பெரும் தொகையை, தனது ஆடம்பரமான மற்றும் பைத்தியக்காரத்தனமான திட்டங்களுக்காக ஒரே ஆண்டில் செலவழித்து ரோமாபுரி சாம்ராஜ்ஜியத்தை திவாலாக்கினார் கலிகுலா.
தனது கிறுக்குத்தனத்தின் உச்சியில் கலிகுலா செய்த ஒரு செயலை தான் மதிப்பிற்குரிய கார்த்தி சிதம்பரம் அவர்கள் தனது ட்வீட்டில் குறியீடாக கூறியுள்ளார். அதையும் பார்ப்போம்.
கலிகுலா தனது அபிமானக் குதிரையான 'இன்சிடடஸ்' மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அதற்கு மார்பிள் கற்களான தொழுவம், தந்தத்தாலான தீவனத் தொட்டி மற்றும் அரச குடும்பத்தினருக்கு மட்டுமே உரித்தான ஊதா நிறப் போர்வைகளை வழங்கினார்.
குதிரைக்குத் தனி வீடும், அதை கவனித்துக்கொள்ள வேலையாட்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
தனது படுக்கையறையில் தனது கட்டிலுக்கு பக்கத்திலேயே இன்ஸிடடஸ் தூங்குவதற்கும் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தியிருந்தார்.
கலிகுலா வரலாற்றில் அதிகம் பேசப்படுவதற்கு மிக முக்கியமான காரணம், அவர் தனது குதிரையை ரோமானிய அரசாங்கத்தின் மிக உயர்ந்த பதவியான 'கவுன்சில்' (Consul) பதவிக்கு நியமிக்கப்போவதாக அறிவித்ததுதான்.
கலிகுலா மனநிலை சரியில்லாமல் இருந்ததால் குதிரையை அதிகாரியாக மாற்ற முயன்றார் என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். மேலும், இனிசிடடஸ் குதிரையின் பெயரில் கலிகுலா அடிக்கடி விருந்து வைத்திருக்கிறார். அந்த விருந்துகளுக்கு அழைக்கப்படும் ரோமின் முக்கியப் பிரமுகர்களை குதிரையின் சார்பில் கலிகுலாவே நேரில் வந்து வரவேற்பாராம்.
இந்த மனநலம் பிறழ்ந்த மற்றும் கொடுங்கோல் செயல்களால், தனது சொந்த மெய்க்காப்பாளர்களாலேயே கி.பி. 41 இல் கலிகுலா படுகொலை செய்யப்பட்டார்.
வெறும் நான்கு ஆண்டுகள் மட்டுமே ரோமாபுரியை ஆண்ட கலிகுலா தனது கிறுக்குத்தனமான மற்றும் கொடூரமான செயல்பாடுகளினால் உலக மகா கொடுங்கோலர்கள் வரிசையில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.
Caligula - Incitatus
- கார்த்தி சாரின் இந்த ட்வீட்டை என்னால் இயன்றவரை decode செய்திருக்கிறேன். தவறுகள் ஏதேனுமிருப்பின் மன்னிக்கவும்.
கூடுதல் தகவல்கள் இருந்தால் அதை பின்னூட்டத்திலோ தனி பதிவிலோ தெரிவித்தால் 'நானு தன்யனடே".



Comments
Post a Comment