பெங்களூரு டேஸ்

கொஞ்சம்  காபி கொஞ்சம் அரட்டை

பெங்களூரு டேஸ்

~

காலையில் எழுந்ததும் நமக்கு பில்டர் காபி கண்டிப்பாக வேண்டும். பெங்களூருவில் காபிக்கு பஞ்சமில்லை. பிரிஸ்டைன், கோத்தாஸ், ரைஸ் அப், ஹட்டி காபி என்று ஒன்றையொன்று மிஞ்சும் சுவையில் பலவகை காபி தூள் இங்கு கிடைக்கிறது. 

சென்னை போல் இல்லாமல் இங்கு ஏகப்பட்ட ஆன்லைன் சேவைகள் வேறு. இன்ஸ்டாமார்ட், பிளிங்க் இட், செப்டோ, பிக் பாஸ்கெட், அமேசான் பிரெஷ், பிளிப்கார்ட் 5 மினிட்ஸ் என்று பல நிறுவனங்கள். 

எல்லாமே 5-10 நிமிடங்களில் போட்டி போட்டுக் கொண்டு டெலிவரி செய்கிறார்கள். விலையும் செம காம்பெடிடிவ். 

ஒரு கிலோ காபித்தூள் வேண்டுமென்றால் ஐந்து நிறுவனங்களையும் விலை கம்பேர் செய்து மலிவாக வாங்கக் கூடிய வாய்ப்பு நிறைய நமக்கு கிடைக்கிறது. 

மளிகை, டெய்லி நீட்ஸ், காய்கறி, பழங்கள் போன்றவை சென்னையை விட கண்டிப்பாக இங்கு விலை மலிவே.

இதையெல்லாம் நினைத்து ஹாயாக சந்தோஷமாக இருக்கலாமென்றால் விடுவானா ஆண்டவன். 

வைத்தான் பாருங்கள் ஆப்பு. 

எனக்கு தினமும் காலையில் நியூஸ் பேப்பர் வேண்டும். நியூஸுக்காக மட்டுமல்லாது இலகுவாக காலைக் கடன்களை முடிக்கவும் அது உதவும். 

தமிழ் நாட்டில் இருக்கும்போது பல நாளிதழ்கள் வாங்கி படித்து கடைசியில் என் அறிவுக்கு தினமலர் தான் செட் ஆனது. கடந்த 10 ஆண்டுகளாக அதுதான் படித்து வருகிறேன். 

கூடவே மலிவு விலை சந்தாவில் கிடைக்கிறதென்று டைம்ஸ் ஆப் இந்தியாவும் வாங்கி கொண்டிருந்தேன். 

பெங்களூருவில் ஓரளவு செட்டில் ஆனதும் நியூஸ்பேப்பர் வாங்க கடையை தேடினால் இங்கு எங்குமே கடைகளில் நியூஸ் பேப்பர் விற்பதில்லை. 

ஒருவழியாக எங்கள் அப்பார்ட்மெண்ட்டில் பேப்பர் போடும் பையனை கண்டுபிடித்து அவனிடம் தினசரி தினமலர் போடவேண்டும் என்றேன். 

மறு நாள் முதல் தினமலர் வரத் தொடங்கியது. 

இதற்கு நடுவே டைம்ஸ் ஆப் இந்தியாவை ஆன்லைனில் கண்டுபிடித்து இரு ஆண்டுகளுக்கு சந்தா செலுத்தி (சென்னையை விட டபுள் மடங்கு சந்தா தொகை கூடுதல்) தினசரி பேப்பர் வரும் என்று நம்பி காத்திருந்தேன்.

அது கிக் ஸ்டார்ட் ஆகவே ஒரு வாரம் பிடித்தது. ஒருவழியாக இரண்டு நாளிதழ்களும் வர ஆரம்பித்தன. 

கொஞ்சமாகவேனும் நம்மை மகிழ்ச்சியாக இருக்கவிடுமா நம் விதி. விளையாட ஆரம்பித்தது இப்போது.

ஒரு ஞாயிற்றுக் கிழமை தினமலருக்கு பதில் தினத்தந்தியை போட்டான் பையன். கேட்டால் தினமலர் ஞாயிறு வராது, லீவு என்றான். எந்த நியூஸ்பேப்பர் ஞாயிற்றுக் கிழமைக்கு லீவு விடுவான் ?  என்னை கேணையன் என்று நினைத்துவிட்டான், படுவா. 

தினத்தந்தி படிக்க 5 நிமிடம் போதும் எனக்கு. முடித்துவிட்டு டைம்ஸ் ஆப் இந்தியா வரும் என்று காத்திருந்தால், வரவேயில்லை. பையன் லீவு போலிருக்கு. 

மறுநாள் தினமலர் வந்தது. டைம்ஸ் ஆப் இந்தியாவும் வந்தது. அது தான் கடைசியாக ரெண்டும் சேர்ந்து வந்த நாள்.

பிறகு டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று வர ஆரம்பித்தது. வெண்டாரை போனில் பிடிக்கவே முடியவில்லை. பையன் காலையிலேயே நான் எழுந்திருக்கும் முன்பே பேப்பரை போட்டுவிட்டு ஓடி விடுகிறான். 

டைம்ஸுக்கு மெயில் அனுப்பிவிட்டு உட்கார்ந்திருக்கிறேன். 

டைம்ஸ் ஆப் இந்தியா வராத நாட்களில் தினமலர் படிக்கலாம் என்று காத்திருந்தால் அங்கே தான் ஒரு ட்விஸ்டு வெச்சான் அந்த தினமலர் பையன். 

டைம்ஸ் ஆப் இந்தியா வராத நாட்களில் எல்லாம் தினமலருக்கு காத்திருந்தால் தினமலர் போட வேண்டிய பையன் எனக்கு தினமலருக்கு பதிலாக மலையாள மனோரமா போட்டுவிட்டு ஓடிவிடுகிறான். 

அடேய் என்னைப் பார்த்தால் உங்களுக்கெல்லாம் என்னாவென்று தெரிகிறது. இப்படி படுத்துறீங்களேடா. 

மலையாளி போல் கலர் வேட்டி அணிந்து அபார்ட்மெண்ட்டில் நடமாடுவது தான் நான் செய்த குற்றமா ?

இதோ இன்றைக்கு டைம்ஸ் ஆப் இந்தியா வரவில்லை. தினமலருக்கு பதிலாக “மலையாள மனோரமா”. 


ஒரு பேப்பர் படிக்க முடியாமல் நான் படும் அவஸ்தை இருக்கிறதே, அப்பப்பா…!!

Comments