கொஞ்சம் தேநீர் - கொஞ்சம் அரட்டை - 7

சக்தி டைரீஸ் 


கொஞ்சம் தேநீர் - கொஞ்சம் அரட்டை  - 7


Cigarette smoking is injurious to health. Smoking causes cancer - Smoking kills 

நூற்றுக்கணக்கான கடைகளில் தேநீர் அருந்தியிருந்தாலும் சில கடைகளில் அருந்திய தேநீர் மட்டும் மனதில் நீங்கா இடம்பெற்றுவிடுகின்றன. வெறும்  சுவைக்காக மட்டுமில்லாமல் அந்த காலகட்டத்தில் அந்த பொழுதுகளில் நமக்கு ஏற்பட்ட ஆனந்தமான  சில அனுபவங்களாலும் தான். 


அப்படிப்பட்ட  அற்புதமான அனுபவங்கள்  நான் துணைப்பதிவாளர் (கடனற்றவை) அலுவலகத்தில் பணியாற்றிய போது  ஏற்பட்டிருக்கின்றது  


துணைப்பதிவாளர் (கடனற்றவை) அலுவலகம் அப்போது ராயப்பேட்டையில் அஜந்தா ஹோட்டலுக்கு அருகில் இயங்கி வந்தது. எனக்கு அரசுப்பணியில் முதல் போஸ்டிங் அங்கு தான். என் வயது வெறும் 20 தான் அப்போது. 


அமரர் திரு ஜமால் முகமது அவர்கள் தான் அப்போது எனக்கு துணைப்பதிவாளர். என்னை அவர் தன் தம்பி போல பார்த்துக்கொண்டார். திட்டும்போதும் தம்பியை திட்டுவது போல தான்.  கண்டபடி திட்டுவார். கிட்டத்தட்ட அடி  கூட வாங்கியிருக்கிறேன் என்று கூட சொல்லலாம்.  


அவை எல்லாமே பாச வசவுகள் தான். என்னை பார்க்கும்போதெல்லாம் "குகனுடன் ஐவரானோம்" என்று அடிக்கடி குறிப்பிடுவார். இப்போது நினைத்தாலும் நெஞ்சம் நெகிழ்ந்து போகிறேன். 


துணைப்பதிவாளர் (கடனற்றவை) அலுவலகம் அருகில் அப்போது ஒரு நாயர் தேநீர் கடை வைத்திருந்தார். நாங்கள் தேநீர் சாப்பிடப்போவது அங்கு தான். நான் சென்ற பதிவில் சொன்ன புகாரி ஓட்டல் தேநீர் அளவுக்கு தரமும் சுவையும் இருக்காதென்றாலும்  ஓரளவுக்கு நல்ல  தரமான தேநீர்  அவர் கடையிலும் கிடைக்கும். 


நாங்கள் என்று நான் கூறினேன் அல்லவா,  நாங்கள் என்றால் அப்போது அந்த அலுவலகத்தில் பணியாற்றிவந்த நான், தற்போதைய ஓய்வுபெற்ற துணைப்பதிவாளர் என் அருமை நண்பன் ரவிக்குமார், கனகராஜ், இவர்களுடன் சந்திரசேகர் என்ற முதுநிலை ஆய்வாளர். கூடவே சில பொழுதுகளில் ஓய்வுபெற்ற துணைப்பதிவாளர் திரு முகமது ரிஸா அவர்களும் வருவார். 


தேநீர் அருந்தி முடித்ததும் சந்திரசேகர் அண்ணனும் நானும் ஒரு தம் போடுவோம். அந்த தேநீர் பிரேக் நேரத்தில் நாங்கள் பல விஷயங்கள் உரையாடியிருக்கிறோம். சந்திரசேகர் அண்ணன் ஒரு அறிவு ஜீவி. நிறைய விஷயங்கள் அவரிடமிருந்து  நான் அறிந்துகொண்டிருக்கிறேன். அது அலுவலக கோப்பாக இருந்தாலும் சரி,  உலக கோப்பை கிரிக்கெட் கால்பந்து போட்டிகளாக இருந்தாலும் சரி. அவர் என் பொது அறிவு ஆசான். 


ஹெக்டிக் ஆன அலுவலக வேலைகளுக்கு இடையே தேநீர் கடை வரை கொஞ்சம் காலார  நடந்து சென்று சூடாக  தேநீர் அருந்தி கொண்டே உலக விஷயங்களையும், உள்ளூர் விஷயங்களையும் கூடவே டிப்பார்ட்மெண்ட்/அலுவலக gossip களையும்  கதைப்பது எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் தெரியுமா? 


அந்த நாயர் கடை தேநீர் இதனாலேயே இன்னமும் நினைவில் இருந்துகொண்டிருக்கிறது. 


தேநீரும் அதன் பின்போ அல்லது அதனுடன் கூடவோ   ஊடாடும் சிகரெட் இழுப்புகளும் அது தரும் ஆனந்தமும் அனுபவித்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடியது.  


ஜமால் சார் அவர்கள் புகை பிடிக்கும் ஸ்டைல் அலாதியானது. ஒரு கையில் தேநீர் கோப்பையும் மறு கையில் சிகரெட்டுமாக செம மிடுக்காக இருப்பார். அவர் வாய் ஏதாவது ஒரு பழைய எம் ஜி ஆர் பாடலை பாடிக்கொண்டிருக்கும் சற்றே சத்தமாக. 


அவர் மீது எனக்கெல்லாம் ஒரு ஹீரோ ஒர்ஷிப் இருந்தது இதனாலேயே. 


பல ஆண்டுகள் இடைவெளியில்  அவரிடமே மீண்டும் நான் டியூசிஎஸ் சில் பணியாற்றிய காலத்தில் அவர் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டிருந்தார். 


நானும் விட்டிருந்தேன். 


கும்பகோணத்தில் பணியாற்றிய[போது ஒரு நள்ளிரவில் ஏற்பட்ட நெஞ்சு வலியால் பயந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தபோது என்னை பரிசோதித்த மருத்துவர் கேட்ட கேள்வி " நீங்கள் ஸ்மோக் செய்வீர்களா "? 


அப்போதெல்லாம் நான் செயின் ஸ்மோக்கர். அவரிடம் உண்மையை சொன்னேன். அடுத்து அவர் கேட்ட கேள்வி "எத்தனை பசங்க உங்களுக்கு..?' 


ரெண்டு டாகடர் என்றேன்... "படிக்கிறார்களா..." என்று கேட்டார். ஆம் என்று சொன்னேன். அடுத்து அவர் சொன்னது தான் நான் புகைப்பழக்கத்தை விட்டதற்கு காரணம். 


"பசங்களை படிக்க வைத்து அவர்களை ஆளாக்கி குடும்பத்தை மகிழ்ச்சியுடன் வாழ வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா உங்களுக்கு...?' 


நான் மெளனமாக மண்டையை ஆட்டினேன்.  


"அப்படி ஒரு ஆசை இருக்கிறது என்றால் புகைப்பழக்கத்தை விடுங்கள்.." என்றார்.


கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுகிறேன் டாகடர் என்றேன். 


"நோ... உடனே, இன்றிலிருந்தே, இப்பொழுதே விட்டுவிடுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக என்ற கதையெல்லாம் வேண்டாம்.." என்றார் கண்டிப்புடன்.  


அப்போதே பிராமிஸ் செய்தேன் இனி புகைப்பதில்லை என்று. அருகிலிருந்த மனைவி சந்தோஷப்பட்டார். 


அதன்பின் எப்போதுமே அதை தொட்டதில்லை. 


ஆனால் அன்றைய தினம் எனக்கு ஏற்பட்டதாக நான் கருதிய அந்த நெஞ்சு வலி சாதாரண அஜீரண மற்றும் வாயு தொல்லையால் தான் என டிஸ்சார்ஜ் ஆன போது தான் நான் தெரிந்து கொண்டேன். 


"நல்லா கிளப்பறாங்கய்யா பீதியை..." என்பதிலும் கூட ஒரு நன்மை விளைந்தது தான் அந்த அனுபவம் எனக்களித்த பாடம். 


சிகரெட் பற்றி பேசும்போது நேஷனல் மேல்நிலை பள்ளி  பி.டி சார் ராமு சொன்னது நினைவுக்கு வருகிறது. ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் எங்களுக்கெல்லாம் கிரிக்கெட்டின் மீது ஆர்வத்தை தூண்டிவிட்ட பேராசான் அவர். கிரிக்கெட் பற்றி பேச ஆரம்பித்தால் போதும், தொடர் சொற்பொழிவே நிகழ்த்தி காட்டி விடுவார். 


முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜி.ஆர். விஸ்வநாத் ஒரு செயின் ஸ்மோக்கராம்.  சுனில் கவாஸ்கரை விட உயரமாய் வந்திருக்க வேண்டிய அவர் இந்த சிகரெட் பழக்கத்தினால் தான் கவாஸ்கருக்கு  அடுத்த இடத்தில் இருந்தாராம். 


சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற மூட் வந்துவிட்டால் எவ்வளவு ரன்னில் விளையாடிக்கொண்டிருந்தாலும் அதை பற்றி கவலை கொள்ளாமல் ஈசியாக ஒரு கேட்சை கொடுத்துவிட்டு பெவிலியன் திரும்பிவிடுவாராம். 


நம்ம ஸ்ரீகாந்த் 1983 உலக கோப்பையை இந்தியா வென்றவுடன் லார்ட்ஸ் மைதானத்தின் அந்த பால்கனியில் நின்று கொண்டு உற்சாகமாய் புகையை இழுத்து இழுத்து விட்டு கொண்டிருந்த காட்சி இன்னமும் என் நினைவில் இருக்கிறது. 


வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயிப் அக்தர், மொஹமத் ஆசிப் ஆகிய நம் பங்காளி நாட்டு வீரர்களும் புகைப்பழக்கம் உள்ளவர்கள் தான். 


இப்போதிருக்கும் வீரர்களில்  கிரிஸ் கெயில், தோனி, ஹர்டிக் பாண்டியா, யூஸ்வேந்திர சாஹல், ஜடேஜா, கோலி ஆகியோருக்கு சிகரெட் பழக்கம் உண்டு. 


உலக கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்த ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் தனது 52வது வயதில் மாஸ்ஸிவ் அட்டாக் ஏற்பட்டு மாரடைப்பால் காலமானார். 


ஹார்ட் அட்டாக்குக்கு காரணமாக கூறப்பட்டது அவர் செயின் ஸ்மோக்கர் ஆக இருந்தது தான். அவரின் மருத்துவர்கள் அவரை பலமுறை எச்சரித்தும் அவரால் அந்த பழக்கத்தை விட முடியவில்லை. 


என்ன ஒரு சோகம். 


Cigarette smoking is injurious to health. Smoking causes cancer - Smoking kills 




 

Comments