கொஞ்சம் தேநீர் - கொஞ்சம் சினிமா - 6

சக்தி டைரீஸ் 

கொஞ்சம் தேநீர் - கொஞ்சம் சினிமா - 6 

----------------------------------------------------------


தேநீர் இந்தியாவின் விருப்பமான பானமாக மாறிய கதை மிகவும் சுவாரஸ்யமானது. 

சீனா தான்  முதலில் உலக தேயிலை வணிகத்தின் ஏகபோக உரிமையாளராக இருந்தது. செயற்கையாக பற்றாக்குறையை ஏற்படுத்தி தொடர்ச்சியான உலகளாவிய வியாபாரத்திற்கு அவ்வப்போது முட்டுக்கட்டை போட்டு வந்தது. 


சீனாவின் தயவு இல்லாமல் ஐரோப்பிய சந்தைகளில் தேயிலையை விற்க முடியாமல் கடுப்பான பிரிட்டன் தேயிலை விதைகளை சீனாவில் இருந்து பெருமளவில் கடத்தி வந்து இந்தியாவின் அசாம் பகுதிகளில் பெரிய அளவிலான தேயிலை தோட்டங்களை ஏற்படுத்தியது. 


அசாமில் ஏற்கனவே காட்டு பகுதிகளில் 'ஒயில்டு தேயிலை' எனப்படும் செடிகள்  வளர்ந்து  வந்ததை அறிந்து கொண்ட பிரிட்டானியர் சீன தேயிலை தோட்டங்களை அசாமில் வளர்ப்பது வெற்றி தரும் என நம்பினர். அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை. 


அசாம் தோட்டங்களில் வளர்ந்து அறுவடை செய்யப்படும் தேயிலை மொத்தமாக  ஐரோப்பிய   சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்திய தேயிலையின் ருசி மற்றும் அதன் மலிவு விலை  ஐரோப்பிய சந்தையில் இந்திய தேயிலைக்கான டிமாண்டை அதிகரித்தன. சீன தேயிலை வணிக ஏகபோகம் மெல்ல மெல்ல சரிந்து அந்த இடத்தை பிரிட்டானியர்கள் பிடித்தனர்.


இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட தேயிலை ஒட்டுமொத்தமாக ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்திய நுகர்வுக்கு கொஞ்சம் கூட தேயிலை பிரிட்டிஷ் கம்பெனிகளால்  வழங்கப்படவில்லை.  


இப்படி சிறப்பாக போய்க்கொண்டிருந்த  தேயிலை வர்த்தகம் ஐரோப்பாவில் 1930களில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக சர்ரென கீழே விழுந்தது. ஐரோப்பிய சந்தைகளில் குவிக்கப்பட்ட தேயிலையை வாங்க யாருமில்லா ஒரு நிலை உருவானது. 


இந்நிலையில் தேங்கிய தேயிலையை லோக்கலாக விற்க 'இந்திய தேயிலை சங்கம்' பிரிட்டிஷ் இந்திய அரசால் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் தேயிலை ஒரு மலிவான மற்றும் ஆரோக்கியமான பானமாக, குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தினர் மத்தியில் பிரபலப்படுத்தப்பட்டது.ரயில் நிலையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் தேநீர் கடைகள் அமைக்கப்பட்டு, மக்கள் தேநீர் குடிக்க ஊக்குவிக்கப்பட்டனர்.


ஆங்கிலேயர்கள் கருப்புத் தேநீரை (Black tea) வெறும் பால் மற்றும் சர்க்கரையுடன் அருந்தினர்.இந்தியர்கள் இதில் இஞ்சி, ஏலக்காய், பட்டை, கிராம்பு போன்ற மசாலாப் பொருட்களைச் சேர்த்து, பால் மற்றும் சர்க்கரையுடன் கொதிக்க வைத்து, தங்களுக்குப் பிடித்த "மசாலா சாய்"  ஆக மாற்றினர்.


இந்த தனித்துவமான சுவை தான் இந்தியர்களின் வீட்டுப் பானமாக தேநீரை மாற்றியது. அதுவே பின்னர் பெருவாரியான இந்தியர்களின் விருப்ப பானமாக மாறியது.


மேகம் திரள்கிறது. சில்லென காற்று மெல்ல வீச துவங்குகிறது.  மழை கண்டிப்பாக வரும். சூடான மசாலா சாய் பருக நேரம் வந்துவிட்டது. 


வருகிறீர்களா...  ஒரு கப் தேநீர் அருந்தலாம்.

~


கொஞ்சம் சினிமா

~


கொலைகாரன் - (2019)


எடுத்த எடுப்பிலேயே "Suspect X"  ஜப்பானிய மூலப்பட படைப்பாளர்களுக்கு நன்றி சொல்லிவிடுகிறார்கள் டைட்டில் கார்டில். அந்த ஸ்ட்ரெயிட்ஃபர்வர்ட்னெஸ்க்காக  படத்தின் இயக்குனருக்கு முதலில் ஒரு பாராட்டை  சொல்லிவிடலாம். 


"திருஷ்யம்" கூட இந்த ஜப்பானிய படத்தின் தழுவல் தான். ஆனால் அதில் யாருக்கும் எந்த கிரெடிட்டும் கொடுத்திருக்க மாட்டார்கள்.  


நல்ல விமர்சனங்களைப் பெற்ற அருண்விஜய் நடித்த "தடம்" கூட இதே மூலக்கதையின் தழுவல் தான் என்பதும் படம் பார்க்க பார்க்க புரிகிறது.

~


சரி, படத்துக்கு வருவோம்.


ஒரு கொலை நடக்கிறது. அதை DCP கார்த்திகேயனாக வரும் அர்ஜுன் துப்பு துலக்குகிறார். ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துக் கொண்டுவரும்போது திடீரென முன்னாள் போலீஸ்காரர் விஜய் ஆண்டனி நான் தான் கொலை செய்தேன் என்று சரண்டர் ஆகிறார். 


உண்மையான கொலையாளி என்று நம்பப்பட்டு கிட்டத்தட்ட குற்றவாளி என்று  முடிவுசெய்யப்பட்ட விஜய் ஆண்டனி  உண்மையான கொலையாளி அல்ல என்றும்,  கொலையாளி வேறு யாரோ என்ற  சந்தேகம் DCP க்கு ஏற்பட்டு அது வலுத்துக் கொண்டே போகிறது. 


இதே கொலையை காவல்துறைக்கு வெளியே துப்பறியும் நாசரும்,  விஜய் ஆண்டனி தான்  கொலையாளி என்னும் ஒற்றைப் புள்ளியில் வந்து நிற்க... 


காட்சிகள் சட சடவென மாறும் போது  தனது  சந்தேகம் நியாயமானது தான் என்றும்,  கொலையாளி வேறு நபர் என்பதையும்  அர்ஜுன் அருமையாக துப்பு துலக்கி விடுகிறார்.  


நான்  தான்  கொலை செய்தேன் என்று சரண்டர் ஆன விஜய் ஆண்டனியிடம்  நீ கொலையாளி அல்ல என்று ஆதாரத்துடன்  நிரூபித்து  யார் கொலை செய்தது என்பதையும் கூறி இபிகோ வுக்கு வெளியே அந்த கொலைக்கு  அருமையாக ஒரு நியாயம் செய்து கேசை முடிக்கிறார் அர்ஜுன்.


நிஜமாகவே அருமையான கதை. விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் படத்தில் சஸ்பென்ஸை ஏற்றிக்கொண்டே போகிறார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ். அவருக்கு துணையாக தட தடக்கும் சைமன் கே. கிங் கின் பின்னணி இசையும், முகேஷின் அற்புதமான காமிரா கோணங்களும் அருமை.


நேர்சீரான கதை.  ஒரு இடத்திலும் டைவர்ட் ஆகவில்லை. படத்தின் இடையே ஊடாடும் இரு பாடல்கள் அப்போதைக்கு தேவையற்றவையோ என நினைத்தால் கிளைமாக்ஸில் அப்பாடல்களின் அவசியம் புரிகிறது.


படம் விஜய் ஆண்டனி, அர்ஜுன் இருவருக்கும் ஒரே அளவில் சமமான முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டாலும் அர்ஜுன் தனது அனுபவ பலத்தில் ஈஸியாக ஸ்கோர் செய்துவிடுகிறார். விஜய் ஆண்டனி தனது எல்லைகளை உணர்ந்து அந்த அளவில்  மட்டும் நடித்துள்ளார். 


கதாநாயகி ஆஷிமா நார்வல் லுக்கு நல்ல அறிமுகம் இப்படம். சீதாவும் தனது அனுபவ நடிப்பை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்.


துருவங்கள் 16 க்கு பிறகு வெளிவந்துள்ள நல்ல ஒரு புலனாய்வுப் படம் "கொலைகாரன்". 


நல்ல தமிழ் சினிமா பார்க்க விரும்புபவர்கள் நேரம் கிடைத்தால் இந்த வீக்கெண்டில் இதை பார்க்கலாம். ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது.


Comments