கொஞ்சம் தேநீர் - கொஞ்சம் வரலாறு - 5
சக்தி டைரீஸ்
கொஞ்சம் தேநீர் - கொஞ்சம் வரலாறு - 5
----------------------------------------------------------
நான் பொதுவாக காபி ரசிகன் என்ற போதிலும் நல்ல தேநீரையும் விரும்பி அருந்துவேன். 1990களில் நண்பர் ஒருவர் மூலம் அப்படி அறிமுகம் ஆனது தான் மவுண்ட் ரோடு புகாரி ஹோட்டல் தேநீர்.
புகாரி ஹோட்டலில் தம் டீயும் பன் பட்டர் ஜாமும் செம காம்போ. முதன் முறையாக அங்கு இந்த காம்போ ருசித்த பின்பு நேரம் கிடைத்த போதெல்லாம் சென்று ரெகுலர் கஸ்டமர் ஆகிவிட்டிருந்தேன்.
நேரம் கிடைத்த போதெல்லாம் என்று கூறுவது தவறு. அதற்கென்றே நேரத்தை உருவாக்கி கொண்டு கூட சென்றிருக்கிறேன்.
சென்னையை விட்டு கிளம்புவதற்கு சில தினங்கள் முன்பு கூட ஒரு நள்ளிரவு நேரத்தில் என் மகனை அழைத்துக் கொண்டு மனப்பாக்கத்தில் இருந்து பைக்கில் புறப்பட்டு மவுண்ட் ரோடு வந்து பன் பட்டர் ஜாம் + தேநீர் காம்போ ருசித்திருக்கிறேன்.
நன்கு சுண்ட காய்சசப்பட்ட க்ரீமி பாலும், தேயிலையுடன் சேர்த்து கொதிக்கவைக்கப்படும் சர்க்கரை, ஏலக்காய், கிராம்பு, பட்டை மற்றும் இஞ்சி ஆகியவைகளின் உயர்கொதி நிலை கலவையில் கிடைக்கும் டிகாஷனும் சேர்ந்து சுட சுட நமக்கு பரிமாறப்படும் போது.... ஆஹா தேவாம்ருதம்.
அடுத்த முறை சென்னை செல்லும்போது கண்டிப்பாக மவுண்ட் ரோடு புஹாரிக்கு விசிட் அடிக்க வேண்டும்.
~
கொஞ்சம் வரலாறு :
-------------------------------
சயாம் மரண ரயிலும் மறைக்கப்பட்ட தமிழரும்
அமரர் அப்பலநாயுடு
மண்ணின் மேலே கிளைபரப்பி நிற்கும் மரங்களைத் தரிசிக்கும் நம் கண்கள் பொதுவாக, அம்மண்ணின் கீழே பரவி நிற்கும் வேர்களைக் காண்பதேயில்லை. அது போலவே மலேசியாவைச் சேர்ந்த திரு அப்பலநாயுடு அவர்களும் மரங்களை-விழுதுகளைத் தாங்கி நிற்கும் வேர் தான்.
இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய இராணுவத்தால் "சயாம்-பர்மா மரண ரயில்பாதை" (Sayam-Burma Death Railway) என்று வரலாற்றில் கொடூரமாக பதிவுசெய்யப்பட்டுள்ள ரயில்பாதை அமைப்பதற்காக சித்ரவதை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான இந்தியத் தமிழர்களுள் ஒருவர் அப்பல நாயுடு.
மலாயாவின் ரப்பர்மரக்காடுகளில் தன் தந்தை-அண்ணனுடன் கனவுகளுடன் திரிந்து மகிழ்ந்த சின்னஞ்சிறு அப்பலநாயுடுவை, ஜப்பான் இராணுவம் பிடித்துச் சென்று, தாய்லாந்து-பர்மாவுக்கு இடையே உலகின் கொடூரமானக் காட்டுப்பகுதியில் இரயில்பாதை அமைக்க வைத்தது.
ஜப்பான் இராணுவத்தின் கொடுமைகளை நேரடியாக, கண்ட-எதிர்கொண்ட சாட்சி,; திரு அப்பலநாயுடு.
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தாய்லாந்து மண்ணில் புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இந்தியத்தமிழர்களின் கடைசித்துளிக்கண்ணீர் பற்றி அறிந்த நேரடி சாட்சிகளில் ஒருவர்: திரு. அப்பலநாயுடு.
ஜப்பான் இராணுவம் இழைத்தக் கொடுமைகளுக்கு நீதி கிடைக்கும் என்று அவர் காத்துக் கொண்டிருந்தார், கடந்த எழுபதாண்டுகளாக... ஏழைகளின் வீட்டை நீதிதேவன் எளிதில் மிதிப்பதில்லை என்ற உலகநீதியை அறியாமலேயே இம்மண்ணை விட்டு மறைந்து விட்டார்.
நாடோடிக் கலைக்குழுவின் சார்பாகத் தயாரிக்கப்பட்ட “சயாம்-பர்மா மரணரயில்பாதை” ஆவணப்படத்தில் முக்கியப்பங்கு வகித்தவர், திரு.அப்பலநாயுடு.
அப்படத்தில் அவர் பகிர்ந்து கொண்டச் சம்பவங்கள் எல்லாம் விழிகளில் நீர்க்கசிய வைத்தன. ஆவணப்படத்தின் வெளியீட்டுக்காக, ஈப்போ மாநிலத்தில் இருந்து தலைநகர் கோலாலம்பூருக்குத் தள்ளாத முதுமையிலும் வந்திருந்து வாழ்த்தினார்.
இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்கும், திரு அப்பலநாயுடு போன்ற வெளியுலகம் அறியாத தியாகிகளுக்கும் அழிக்கவியலாப் பிணைப்பு உள்ளது. அதனால் தான், திரு அப்பலநாயுடுவைப் போன்ற தியாகிகளின் கண்ணீர்த்துளிகளுக்கும் பெருமூச்சுகளுக்கும் நீதி கேட்டு ஜெனீவாவில் ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
நீதியின் நிழல் காலங்கடந்தாவது இந்த பாவப்பட்டவர்கள் மீது விழுவதற்கு முன்னரே அப்பல நாயுடு தன் இன்னுயிரை ஈந்தது தான் வரலாற்று சோகம். அவர் போன்றோர் அனுபவித்த துயரை "நாடோடிகள் கலைக்குழு" வினர் "சயாம்-பர்மா மரண ரயில்பாதை" என்ற பெயரில் ஆவணப்படமாக எடுத்து வருகின்றனர்.
"சயாம்-பர்மா மரண ரயில்பாதை" யில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான மலேய இந்தியர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.
~
சயாம்-பர்மா மரண ரயில்பாதை ஆவணப்பட டிரெய்லர் :
https://youtu.be/rPMmLSWD9o8?si=skI1hRIe10s9FWof



Comments
Post a Comment