கொஞ்சம் சாப்பாடு - கொஞ்சம் அரட்டை - 2

 


சக்தி டைரீஸ்


கொஞ்சம் சாப்பாடு - கொஞ்சம் அரட்டை - 2

திடீர் திடீர் என்று அவ்வப்போது மன்னார்குடி நினைவுகள் வந்து விடுகின்றன. 

எந்த பொறுப்பும் இல்லாமல் சிட்டுக்குருவி போல் பறந்து திரிந்த நாட்களின் நினைவுகள் எப்போதுமே அழிவதில்லை போலும். 

என் பாட்டியின் இறுதி காலத்தில் அவர் தன் நினைவுகளை ஏறக்குறைய இழந்திருந்தார். என்னை, என் மனைவியை, யாரையுமே அவருக்கு அடையாளம் தெரியவில்லை. 

என் மூத்த மகனை மட்டும் கரெக்ட்டாக பெயர் சொல்லி அழைத்தார். அவனுடனான நினைவுகள் மட்டும் அவருக்கு மூளயின் ஸ்டோரில் இருந்தது.  

எங்கள் குடும்பத்தில் ரொம்ப நாள் கழித்து பிறந்த குழந்தை அவன். பெரும்பாலும் தன் கொள்ளு பாட்டியான என் பாட்டியிடம் தான் வளர்ந்தான். 

அதனால் தான் போலும். 

அதே போலவே அவரின் சிறு வயது நினைவுகளில் ஒரு சிறிய பகுதியாக அவர் வளர்ந்த தொழுப்பேடு ரயில் நிலைய குவார்ட்டர்ஸையும், அங்கு அவருக்கு  பேய் பிடித்த நினைவுகளையும் ஆச்சரியத்தக்க அளவில் டெத் பெட்டில் இருக்கும்போது நினைவு வைத்திருதார். 

ஒரு குழந்தையை போல் அவ்வப்போது அவரை பார்க்க வருவோரிடம் அதை சொல்லிக் கொண்டிருந்தார். 

ஏதோ சொல்லவந்து எங்கேயோ போய் முட்டிக் கொண்டிருக்கிறேன் பாருங்கள். 

முதல் பாராவுக்கு மறுபடியும்  வருகிறேன். 

மன்னார்குடியில் நான் என் பாட்டி வீட்டில் வளர்ந்த காலத்தில் எதிர்வீட்டில் வரதராஜ் நைனா இருந்தார். 

அவர் அப்போதைய சோழன் போக்குவரத்து கழகத்தில் மன்னார்குடி டூ  களப்பால் வண்டியில் கண்டக்டர் ஆக இருந்தார். 

மிக அன்பான மனிதர். 

டூட்டி முடிந்து அவர் வீட்டுக்கு வருவதை நாங்கள் எல்லாம் ஆர்வமுடன் எதிர்பார்ப்போம். 

இரண்டு காரணங்கள் அதற்கு.

ஒன்று, அவர் எங்களை சின்ன பசங்கள் என்று கருதாமல் தனக்கு சமமாக நடத்துவார். நிறைய கதைகளையும், நாட்டு நடப்புகளையும் மிக சுவாரஸ்யமாக சொல்வார். 

அவரே தன்னளவில் மிக சுவாரஸ்யமான மனிதர். 

இரண்டு, அவர் டூட்டி முடிந்து வரும்போது  வாங்கி வரும் குஞ்சான் செட்டி கடை பக்கோடா பொட்டலங்கள். 

வரதராஜ் நைனா  பற்றி ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு என்னிடம் தகவல்களும் அனுபவங்களும் நிறைய இருக்கின்றன. 

நைனா  டூட்டி முடிந்து வரும் அழகே அழகு. பிற்பகல் வெயிலில் வேட்டியை மடித்து கட்டி  மேல் சட்டையை தோளில் போட்டுக் கொண்டு வெற்று மார்புடன் காலில் செருப்பு ஏதுமின்றி ஒரு மஞ்சள் பையில் பக்கோடா பொட்டலங்களுடன் விறு விறுவென வருவார். 

ஆவலுடன் காத்திருக்கும் எங்களுக்கு (எங்களுக்கு என்றால் நான், என் தம்பி மற்றும் அவரின் நான்கு குழந்தைகள்) ஆளுக்கு ஒரு பக்கோடா பொட்டலம் கொடுப்பார். 

நல்ல சூடாக இருக்கும். 

ஒரு நாள் விட்டு ஒரு நாள் அவர் டூட்டி முடிந்து திரும்பும்போது எங்களுக்கு குஞ்சான் செட்டி கடை பக்கோடா கிடைக்கும். 

அப்போது மன்னார்குடியில் டெல்லி சுவீட்ஸ் தான் பெரிய கடை. அவர்களின் இனிப்பு வகைகள் மிக பிரசித்தி பெற்றவை. ஆனாலும் பக்கோடா என்றால் குஞ்சான் செட்டி கடை தான். 

குஞ்சான் செட்டி கடை மேல ராஜவீதியில் ஸ்டேட் பாங்க்குக்கு முன்னாடியே இருக்கும். 

கடை என்றால் ஒரு பெரிய அல்லது சிறிய கட்டிடத்தில் இருக்கும் என்றெல்லாம் நினைத்தால் அந்த கடை அப்படி எல்லாம் இருக்காது. 

அந்த கடையின் புகைப்படம் கொடுத்திருக்கிறேன் பாருங்கள். அவ்வளவு தான் கடை. 

அந்த தம்மாத்துண்டு கடையில் ஒரு ஓரத்தில் செட்டியார் சரிந்த தொந்தியுடன் மேலே சட்டையோ துண்டோ ஏதுமின்றி ஒரு கட்டை பலகையில் அமர்ந்திருப்பார். அவருக்கு முன்னே பக்கோடா மற்றும் கொஞ்ச காரவகைகள் ஒரு பெரிய தட்டில் குவித்து வைக்கப்பட்டிருக்கும். 

சுவீட் ஐட்டங்களில் எனக்கு தெரிந்து லட்டு (தஞ்சை பகுதியில் அதனை லாடு என்று அழைப்பார்கள்) அப்புறம் ஒரு டிரேயில் அல்வா இருக்கும். 

ஐட்டங்கள் கம்மி தான் ஆனால் கூட்டம் அள்ளும். குறிப்பாக பக்கோடா செம வியாபாரம் ஆகும். 

அவர் கடை பக்கோடா மணம் மேலராஜ வீதி முழுக்க மதிய நேரத்தில் பரவி அங்கிருப்போர் மூக்கை துளைக்கும். 

குஞ்சான் செட்டி கடையில் பக்கோடா போட்டான்னா தெருவுல போறவன் வரவன் எல்லாம் சுவத்துல மூக்கை தேய்ப்பான் என்ற ஒரு சொலவடையே உண்டு அந்த பக்கோடாவுக்கு. 

பக்கோடாவில் என்ன ஸ்பெஷல் என்றால் அவை சின்ன வெங்காயம் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும். 

நல்லெண்ணையில் சின்ன வெங்காயத்தை நறுக்கி பதமாய் வதக்கி பக்கோடா மாவில் கலந்து எண்ணெய் சட்டியில் போட்டு நல்ல பதத்தில் எடுப்பார்கள். 

உள்ளே சுட சுட பக்கோடா தயார் ஆகிக்கொண்டே இருக்கும். வெளியே செட்டியார் பொட்டலம் பொட்டலமாக விற்று தள்ளிக் கொண்டிருப்பார்.

சில வருடங்களுக்கு முன் மன்னார்குடி சென்ற போது குஞ்சான் செட்டி கடையை தேடிக்கொண்டு போனேன். குஞ்சான் செட்டியாருக்கு பிறகு அவரின் மூன்றாவது தலைமுறையினர் கடை நடத்திக் கொண்டிருக்கின்றனர். 

இப்போதெல்லாம் பக்கோடா பொட்டலங்களில் கட்டி தரப்படுவதில்லை. எல்லாவற்றுக்கும் பிளாஸ்டிக் பைகள் தான். 

ருசி... ஓகே தான். ஆனால் என்னை போல பழைய ருசியை சுவைத்தவர்களுக்கு 'அந்த நாள் போல இல்லையே" என்னும் ஒரு மெல்லிய எண்ணம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது தான். 

அந்த கால நாடக பிரபலம் எஸ்.ஜி. கிட்டப்பா தஞ்சை மாவட்டத்தில் எங்கு நாடகம் போட்டாலும் குஞ்சான் செட்டி கடை பக்கோடா வாங்கி வர சொல்வார் என்று எங்கேயோ படித்தது  நினைவுக்கு வருகிறது. 
~

இப்போது மறுபடியும் முதல் பத்திக்கு  வருகிறேன். 

என் பாட்டிக்கு தொழுப்பேடு என்றால் எனக்கு இந்த சாப்பாட்டு ஐட்டங்கள் தான் மூளையின் ஸ்டோரில் freeze ஆகி நிலைத்து நின்று கொண்டிருக்கும்  என்று நினைக்கிறேன்.

Comments