கொஞ்சம் காபி - கொஞ்சம் மெமரீஸ் - 17
கொஞ்சம் காபி - கொஞ்சம் மெமரீஸ் - 17
அஸ்வத்தாமன் என்னும் ஒரு ஹெவி வெயிட் தொடரை ஏக் தம்மில் முடித்த பின்னர் ஒரு ரிப்ரெஷ்மென்ட் கண்டிப்பாக தேவைப்படுகிறது தான்.
நமக்கு ரிபெஷ்மென்ட் என்பது காபியும் காபியை பற்றி எழுதுவதும் தான்.
பெங்களூரில் இருந்து இரண்டு கிலோ டெக்கான் கோல்ட் வழங்கும் pristine காபி இரண்டு நாட்கள் முன்பு வந்தது. அன்றிலிருந்து நல்ல சுவையான காபி குடித்து இன்பமாய் இருக்கிறேன்.
இன்று, செப்டெம்பர் 29. அகில உலக காபி தினம். சாதாரண நாளிலேயே காபியை பற்றி எழுதி குவிப்போம். இன்று மாட்டோமா என்ன.
365 நாட்களும் ஏதாவது ஒரு தினம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. சில முறை ஒரே நாளில் இரண்டு மூன்று தினங்கள் கூட கொண்டாடப்பட்டு வருகின்றன.
இன்று செப்டெம்பர் 29 அன்று உலக காபி தினம். கூடவே உலக இருதய தினம்.
நல்ல காபியை தொடர்நது குடித்தால் இருதயத்திற்கு நல்லது என்று கூறுவதால் இரண்டும் சேர்த்து கொண்டாடப்படுகிறது போலும்.
இந்த உலக காபி தினம் என்பது யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது தெரியவில்லையாம். கிடைத்த தகவலின்படி 1983ம் ஆண்டு ஜப்பானில் இந்த காபி தினம் கொண்டாடப்பட்டிருக்கிறது.
அதை தொடர்ந்து அதிக காபி குடிக்கும் அமெரிக்காவில் 2005முதல் காபி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
2005 ல் நேபாளம், 2006ல் இந்தோனேஷியா, 2009ல் தைவான் என்று அது முதல் ஒவ்வொரு நாட்டிலும் உலக காபி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக காபி தினத்தை முன்னிட்டு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் உள்ள காபி ஷாப்கள் கலைக்கட்டியிருக்கும். கிட்டத்தட்ட ஒரு வார காலத்திற்கு சிறப்பு நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடைபெறும்.
இந்தியாவில் யாராவது கொண்டாடுகிறார்களா, சிறப்பு சலுகைகள் ஏதாவது கொடுக்கிறார்களா என்று இன்னமும் தேடி கொண்டிருக்கிறேன்.
இன்னொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் நாமெல்லாம் செப் 29 காபி தினமாக கொண்டாடி கொண்டிருக்க €nternational Coffee €rganisation அக்டோபர் 1 அன்று தான் உலக காபி தினம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால் என்ன, நாம் அந்நாளையும் கொண்டாடுவோம்.
ஏன் எல்லா நாட்களையும் காபி தினமாக மாற்றிக் கொண்டாடுவோமே.
~
கொஞ்சம் மெமரீஸ்
MGR, சிவாஜி அப்பறம் கொஞ்சமே கொஞ்சம் ஜெமினி. அந்த அளவு மட்டுமே எனக்கு பழைய படங்கள் பரிச்சயம்.
இந்த நிலையில் தான் சமீபத்தில் இதயக்கமலம் பார்த்தேன்.
பாஸ்கர் உயிரையே வைத்திருந்த கமலா விஷ காய்ச்சலில் இறந்துவிடுகிறாள். அவளையே நினைத்து உருகிக் கொண்டிருக்கும் பாஸ்கர் அவள் நினைவாக இதயக்கமலம் என்ற நினைவிடம் ஒன்று கட்டுகிறான். இந்நிலையில், கொள்ளைக்கூட்டத்தை சேர்ந்த பெண் ஒருத்தியை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்கிறார் இன்ஸ்பெக்டர் பாலாஜி.
அந்தப் பெண் நான் கொள்ளைக் கூட்டத்தை சேர்ந்தவள் இல்லை, பாஸ்கரின் மனைவி கமலா என்கிறாள். அச்சு அசலாக கமலா போலவே இருக்கும் அவள் பாஸ்கரைப் பற்றிய அந்தரங்க தகவல்கள் உட்பட அனைத்தையும் இம்மி பிசகாமல் கூறுகிறாள். அதிர்ச்சியாகிறான் பாஸ்கர். ஆனாலும் அவள் தன் மனைவி இல்லை என்றும் அவள் இறந்ததை தான் பார்த்ததாகவும் தானே அவளுக்கு ஈமக்கிரியை செய்ததையும் சொல்லி மறுக்கிறான்.
அவள் யார்? இறந்த கமலா என்ன ஆனாள்? பாஸ்கரின் குழப்பம் தீர்ந்ததா?
ஆகியவைகளை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். கதை, திரைக்கதை, வசனம் எல்லாமும் அருமை.
படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் இசை. பாடல்கள் செம கிளாசிக்.
"ஜி. ராமனாதனுக்கு பிறகு மாமா தான்..., மாமாக்கு அப்பறம் ராஜா தான்" என்று சின்ன வயதில் என் மாமா கூறக் கேட்டிருக்கிறேன்.
அவரிடமே "யாரந்த உங்களுடைய மாமா" என்றதற்கு KV மஹாதேவன் என்று சொல்லியிருக்கிறார். KVM ஐ மாமா என்று தான் கூப்பிடுவார்களாம்.
🍀 உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல....
🍁மலர்கள் நனைந்தன பனியாலே....
🌺தோள் கண்டேன் தோளே கண்டேன்...
💖💖💖
என்ன மாதிரியான பாடல்கள் இவை. சான்ஸே இல்லை. இவ்வளவு இனிமையாக எல்லாம் இனி பாடல்கள் வருவதற்கு வாய்ப்பேயில்லை.
திரும்ப திரும்ப பலமுறை கேட்டிருக்கிறேன் இந்த பாடல்களை என் சிறிய வயதில்.
படத்தில் குறை என்று சொன்னால் ரவிச்சந்திரன் தான். ஷம்மி கபூரை மட்டமாக இமிடேட் செய்கிறார் நடிப்பில். KR விஜயா கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்றாலும் பாந்தமாக இருக்கிறார்.
இன்னொரு குறை சிரிப்பே வராத காமெடி. தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல் ஆகிய படங்களில் தூள் கிளப்பிய பாலையாவா இவர்? சிரிப்பே வரவில்லை.
நல்ல கதையுடன் கூடிய ஒரு திரைப்படம் பார்த்தோம் என்ற திருப்தியுணர்வு படம் முடிந்ததும் ஏற்பட்டது.
அந்த வகையில் டைரக்டர் ஸ்ரீகாந்தை மனதார பாராட்டலாம்.
கொரிய, ஈரானிய பட சிடிக்களில் கதை தேடுவதை விட்டுவிட்டு இதயக்கமலம் போன்ற பழைய நல்ல திரைப்படங்கள் பார்த்தாலே இளைய இயக்குனர்களுக்கு உத்வேகம் பிறக்கும். புதிய கற்பனைகள் தோன்றும்.
இதயக்கமலம் - இதயத்துக்கு இதமானது.



Comments
Post a Comment