கொஞ்சம் சாப்பாடு - கொஞ்சம் அரட்டை - 1

சக்தி டைரீஸ் 


கொஞ்சம் சாப்பாடு - கொஞ்சம் அரட்டை 

~


கொஞ்சம் காபி, கொஞ்சம் தேநீர் வரிசையில் அடுத்ததாக கொஞ்சம் சாப்பாடு .

ஒரு நாள் சாப்பாடு இல்லைனா நமக்கு  இயக்கமே இல்லை. உடலை இயக்க நமக்கு உணவு தேவை. 


தென்னிந்தியர்களுக்கு  ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது முழு சாப்பாடு தேவை. முழு சாப்பாடு என்பது சாதம், சாம்பார், ரசம், ஒரு பொரியல் அல்லது கூட்டு அல்லது கீரை இவற்றுடன் தயிர் அல்லது மோர் கொஞ்சம் தொட்டுக்க கொள்ள ஊறுகாய்.


தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஏறக்குறைய இந்த pattern தான். ஐட்டங்களும், சுவையும் சற்று மாறுபட்டிருக்கும், அவ்வளவு தான். 


இந்த சாம்பார் என்னும் முக்கியமான ஒரு ஐட்டம் முழு சாப்பாட்டின் ஒரு முக்கியமான அங்கம். மாநிலத்துக்கு மாநிலம்  இதன் ருசி வெவ்வாறாக இருந்தாலும் core அல்லது இதன் base ஒன்று தான். துவரம்பருப்பு, புளி, சாம்பார் தூள், இவற்றுடன் அன்றன்றைக்கான விருப்பமான அல்லது கிடைக்கும் காய்கறி. 


இந்த சாம்பார் எப்படி நம் அன்றாட உணவில் சேர்ந்தது? சாம்பார் பிறந்த கதை ஒரு சுவாரஸ்யமான கதை.  பார்ப்போம். 


சாம்பார் எங்கள் தஞ்சாவூரில் தான் பிறந்தது என்பதில் எனக்கு கொஞ்சம் பெருமை உண்டு. 17ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் ஷாஜி காலத்தில் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு உணவு சாம்பார். 


மராட்டியர்களின் பாரம்பரிய பருப்பு குழம்பு வகை 'அம்தி' ஆகும். இதில் கோகம் எனப்படும் ஒரு வகை புளிப்பைப் பயன்படுத்துவார்கள். ஒருநாள், தஞ்சை அரச சமையலறையில் கோகம் இல்லாததால், சமையல்காரர் அதற்குப் பதிலாகத் தமிழகத்தில் கிடைக்கும் புளியைப் பயன்படுத்தினார்.


புளிக்குழம்புடன் துவரம் பருப்பு மற்றும் பல்வேறு காய்கறிகளையும்  சேர்த்து, மராட்டிய பாணியில் புதிய சுவையுடன் சமைக்கப்பட்டது.


அந்த சமயத்தில், மராட்டிய மன்னர் சிவாஜியின் மூத்த மகனான சம்பாஜி தஞ்சைக்கு விருந்தினராக வந்திருந்தார். புதிதாகச் சமைக்கப்பட்ட இந்த சுவையான குழம்பு சம்பாஜிக்கு பரிமாறப்பட்டது. அந்த உணவு  அவருக்குப் பிரமாதமாக பிடித்து போய் விட்டது.  சம்பாஜியின் நினைவாக அன்று தயார் செய்யப்பட அந்த ஸ்பெஷல் ஐட்டத்துக்கு  *'சாம்பார்'* என்று பெயரிடப்பட்டது.


சாம்பார் தமிழகத்தின் பிரதான உணவாக மாறினாலும், அதன் தோற்றம் மராட்டியர்களின் சமையலறை சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இன்று, சாம்பாரில் பல வகைகள் (அரைத்து விட்ட சாம்பார், பச்சைப் பயறு சாம்பார் போன்றவை) பிராந்தியத்திற்கு ஏற்ப தயாரிக்கப்படுகின்றன. 


ஆந்திராவில் சாம்பார் துவரம்பருப்பு குறைவாக ஒரு மாதிரி ரசம் போல ஓட்டமாக இருக்கும். 


கேரளாவில் தேங்காய் அரைத்து சாம்பாரில் சேர்த்து விடுவார்கள். 


கர்நாடகாவில் வெல்லத்தை சேர்த்து விடுவார்கள். இனிப்பு சாம்பாராக இருக்கும். சாம்பாரில் மட்டுமல்ல கர்நாடக உணவு வகைகளில் பெரும்பாலானவற்றில் வெல்லத்தை சேர்த்து விடுவர். ஏனோ அவர்களுக்கு அந்த ருசி பிடித்திருக்கிறது. ஆரம்பத்தில் எனக்கு வெளியே சாப்பிட கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. இப்போது பழகிவிட்டது. பிடித்தும் விட்டது.  


தமிழ் நாட்டு சாம்பார் தான் என்னைப் பொறுத்தவரை 'தி பெஸ்ட்'.


சாம்பார் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் தமிழர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்று தெரியவில்லை. சங்க இலக்கியத்தில் சாம்பார் போன்ற ஏதோ ஒரு ஐட்டம் குறிப்பிடப்பட்டிருப்பதாக என் நண்பர் ஒருவர் கூறுகிறார். ஐயா பெருமாள் சாமி போன்றோர் சொன்னால் நன்றாக இருக்கும். 


ஆக, தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் அறிவுப்பசிக்கு சரஸ்வதி மஹால் நூலகத்தை தந்தது போல வயிற்று பசிக்கு சாம்பார் போன்ற ருசியான உணவு வகைகளையும் தந்திருக்கிறார்கள். 


வாழ்க மராட்டியர். 




கொஞ்சம் அரட்டை :


கொஞ்ச நாளைக்கு முன் எனக்கு ஒரு கனவு வந்தது. தூங்கி எழுந்த பின் கனவை கிளறி யோசித்துப் பார்க்கும்போது கோர்வையாக ஒரு கதை கிடைத்தது. கதை சொல்லட்டுமா ?


ஒன் லைனர் :


1. கிராமத்தில் வசதியாக வாழ்ந்து கெட்ட குடும்பம்


2. விரட்டும் கடன்காரர்கள்


3. திருமணம் முடிக்க வேண்டிய தங்கைகள்


4. சென்னையில் கேப் டிரைவர் வாழ்க்கை


5. 9000 கோடி திடீரென்று அக்கவுண்டில் கிரெடிட்


8. கொஞ்ச நாள்  ஜாலி வாழ்க்கை


9. அரசியல்வாதிகளின் மணி லாண்டிரிங் முயற்சி


10. டெக்னாலஜி தெரிந்த கிரிமினல் வங்கி கொள்ளயர்களின் துரத்தல் ஒருபக்கம்


11. அரசியல்வாதிகளின் அடியாட்கள் துரத்தல் மறுபக்கம்


12. சஸ்பெண்ட் ஆன நேர்மையான காவல் அதிகாரியின் எதிர்பாரா உதவி. (இந்த ரோலுக்கு அஜித் நடித்தால் செமையாக இருக்கும்)


13. அப்புறம் நிறைய ட்விட்ஸ், க்ளைமேக்ஸ். அதையெல்லாம் சொல்ல முடியாது. 


ஸ்க்ரிப்ட் ரெடி.


நல்ல தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள்  கிடைத்தால் படம் ஓஹோன்னு ஓடும் கண்டிப்பாக. தயாரிப்பாளர், இயக்குனர் யாரும் கிடைக்கவில்லை என்றால்  நானே இயக்கி வெளியிடுவேன்.


எனது இப்போதைய தேவை கொஞ்ச கால அவகாசம் மற்றும் மணி லாண்டிரிங் அண்ட் கிரிமினல் வங்கி ஸ்கேம்ஸ் குறித்த கொஞ்சம் அறிவு. நிறைய படிக்க வேண்டும். 



பராசக்தியின் சித்தம் இருந்தால்,


செய்து முடிப்பேன்.



Comments