அமானுஷ்யம்
அமானுஷ்யம்
மறுபடியுமா... அப்படின்னு கேட்கறீங்களா ? வேற வழியில்லை, சொல்லித் தானே ஆக வேண்டியிருக்கு.
அமானுஷ்யம் - என்னும் தமிழ் சொல்லுக்கு (தமிழ் தானா ?) அர்த்தம் என்ன?
இயல்பான வாழ்வியலில் காண அரிதான விஷயங்கள் என்று சொல்லலாமா ?
இதற்கு இணையான ஆங்கில வார்த்தை occult என்று கொள்ளலாம்.
Occult என்றால் ?
matters regarded as involving the action or influence of supernatural or supernormal powers or some secret knowledge of them.
போதும் சாரே.. மேட்டருக்கு வாங்க என்கிறீர்களா... ?
ஓக்கே.
காலங்கார்த்தாலேயே வெயில் உறித்து எடுப்பதால் என்னுடைய வாக்கிங் நேரத்தை சமீபகாலமாக முன்னிரவு நேரத்திற்கு மாற்றிக் கொண்டேன்.
வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு மாநகராட்சி பூங்காவில் நடைப்பயிற்சிக்கென அருமையான பாதை அமைந்துள்ளதால் அங்கு தான் வழக்கமாக நடைப்பயிற்சி.
கடந்த வாரம் முழுவதும் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வர நேரமானதால் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் ஒரு சிறிய பூங்காவின் சிறிய நடைப்பயிற்சி பாதையை வாக்கிங்குக்கு தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.
அந்த பூங்காவிற்கு இதற்கு முன்னர் சென்றதேயில்லை.
அமைதியான சிறிய பூங்கா. நான் வாக்கிங் செல்லும் முன்னிரவு நேரத்தில் பெரும்பாலும் யாருமே இருக்கமாட்டார்கள்.
வாட்ச்மேன் பூங்காவின் வாசலில் வெளிப்புறம் பிளாஸ்டிக் சேர் ஒன்றில் அமர்ந்திருப்பது வாடிக்கை.
பெரிய கூட்டம் இல்லாத்தால் அங்கு நடைப்பயிற்சி செய்வது வசதியாகவே இருந்தது.
நடைப்பயிற்சியின் நடுவே அவ்வப்போது வரும் போன்கால்களை அட்டெண்ட் செய்தும்போது கூட அந்த பூங்காவின் அமைதியான சூழலை ஆச்சரியமாக விவரித்திருக்கிறேன்.
பூங்காவின் பின்புறம் வளைந்து வரும் நடைபாதையில் உள்ள பாதையில் உள்ள விளக்குகள் பழுதடைந்து விட்டதால் அந்த பகுதி சற்று இருட்டாக காணப்படும்.
எந்த தொந்திரவும் இல்லாததால் மிக உற்சாகமாகவே நடைப்பயிற்சியை மேற்கொண்டு வந்தேன்.
நேற்றும் நடைப்பயிற்சிக்கு சென்றேன். ஆச்சரியமாக சுற்றுப்பாதையில் ஒரு முதிய பெண்மணியும் நடந்து கொண்டிருந்தார்.
எனக்கு முன்பாகவே வந்துள்ளார் போலும். நடைப்பயிற்சியில் தீவிரமாக இருந்தார்.
இன்னொரு ஆச்சரியமாக சிறுவர் விளையாடும் பகுதியில் சிறுவன் ஒருவன் தனியாக அமர்ந்திருந்தான்.
அவன் அருகில் ஒரு பைனாகுலரும் தண்ணீர் பாட்டிலும் இருந்தன.
பூங்காவை ஒட்டிய அப்பார்ட்மெண்ட் ஒன்றையே நோக்கி கொண்டிருந்தான்.
பைனாகுலரில் அவ்வப்போது அந்த அப்பார்ட்மெண்ட்டை பார்ப்பதும் தண்ணீர் குடிப்பதுமாக இருந்தான்.
முதிய பெண்மணி அவனை அழைத்து வந்திருப்பார் போலும் என்று நினைத்துக் கொண்டேன்.
வியர்வை சிந்த கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டு சற்று இளைப்பாறிவிட்டு செல்லலாம் என்று பெஞ்சில் அமர்ந்தேன்.
அந்த முதிய பெண்மணி இன்னும் சுற்றிக் கொண்டிருந்தார்.
அடங்கப்பா… என்று நினைத்துக் கொண்டு அந்த சிறுவன் அமர்ந்திருந்த இடத்தைப் பார்த்தால், அவனைக் காணவில்லை. அவன் இருந்த பகுதியில் விளக்கும் அணைந்திருந்தது.
அந்தப் பெண்மணியைப் பார்த்தேன். அவர் பாட்டுக்கு நடந்துகொண்டே இருந்தார்.
ஒரு மாதிரி குழப்பமாய் எழுந்து வீட்டை நோக்கி நடந்தேன்.
எல்லாவற்றையும் மறந்து போய் தூக்கத்தில் ஆழ்ந்தேன்.
இன்று மாலை. சற்று முன்னதாகவே நடைப்பயிற்சிக்கு புறப்பட்டேன்.
என் மனைவி ‘ரோடெல்லாம் தோண்டி போட்டிருக்கிறார்கள்.. எங்கே வாக்கிங் போகப்போகிறீர்கள்..’ என்று கேட்டாள்.
நான் சமீபகாலமாக வாக்கிங் போகும் பூங்காவை சொன்னேன்.
என்னை ஏற இறங்க பார்த்தாள்.
‘அங்கேயா போறீங்க, வேற இடமே கிடைக்கலியா…’ என்று கேட்டு மேலும் கீழும் என்னை பார்த்தாள்.
நான் குழப்பமாக ‘ஏன்’ என்பது போல பார்த்தேன்.
‘அங்கே யாருமே வரமாட்டாங்களே.. என்றபடி அவள் சொன்ன விஷயம் கேட்டு பரபரப்பானேன்.
உடம்பு ஒரு முறை தூக்கிவாரிப் போட்டது எனக்கு.
இந்த ஒரு வாரம் முழுக்க அங்கு தானே போயிருக்கோம்.
ஈஸ்வரா.....
நார்மலுக்கு வர சற்று நேரமானது.
‘அந்த பழைய பார்க்குக்கே போங்க… இந்த இடம் வேண்டாம்..’ என்றாள் மனைவி.
சரி என்று சொல்லிவிட்டு பழைய பூங்காவிற்கு செல்லும் வழியில் இந்த சமீபத்திய பூங்காவின் முன் நின்று நோக்கினேன்.
வாசலில் சேர் போட்டுக்கொண்டு அந்த முதிய வாட்ச்மேன் உட்கார்ந்திருந்தார்.
மங்கலான அந்தி நேர இருளில் அந்த பெண்மணி சுற்றுப்பாதையில் நடந்து கொண்டிருந்தார்.
அதே சிறுவன் பெஞ்சில் உட்கார்ந்திருந்தான்.
அவன் அருகே இருந்த விளக்கு அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருந்தது.
பூங்காவின் அருகே உள்ள இடத்தை கலவரமாக பார்த்தேன்.
‘இந்து மயான பூமி' என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்தது.
மீண்டும் பார்க்கினுள் பார்த்தேன். முதிய பெண்மணியை காணவில்லை. சிறுவனையும் காணவில்லை.



Comments
Post a Comment