சக்திஸ் கிச்சன்
சக்திஸ் கிச்சன்
வாழ்க்கையில் எல்லா நல்லது கெட்டதுகளும் கலந்து தான் வரும். சந்தோஷமான நிகழ்வுகளுக்கு நடுவே தான் தாங்க முடியா துக்க சம்பவங்களும் வரும்.
சிலருக்கு நல்லதாக தெரியும் சில விஷயங்கள் வேறு சிலருக்கு தாங்க முடியாத வேதனையாயகவும் அமையும்.
எல்லாவற்றையும் சமமாக பாவிக்கும் வித்தை ஞானிகளுக்கு தான் வரும். சாதாரண பாமரர்களால் அப்படி இருக்க முடியாது.
ஸோ, என்ன நமக்கு வருகிறதோ அதை எப்படி ரியாக்ட் செய்து தீர்த்துவிட முடியுமோ அப்படியே அவ்வப்போதே செய்துவிடவேண்டும்.
மகிழ்ச்சியை கொண்டாடி தீர்ப்போம்.
வேதனையை அழுது தீர்ப்போம்.
அதேபோல் கோபத்தையும் உடனுக்குடன் கொட்டித் தீர்ப்போம்.
என்னடா, ஒரே தத்துவமாக பொழிகிறேனே என்று நினைக்கிறீர்களா..?
வேறொன்றும் இல்லை, சமைக்கும்போது தோன்றியவைகளை அப்படியே கொட்டி விட்டேன். அவ்வளவு தான்.
வழக்கம் போல் இன்று சண்டே என்பதால் என் பேஷனான சமையல் வேலையில் இறங்கிவிட்டேன்.
நாளும் பொழுதும் நமக்கு அன்னமிடும் அன்னலக்ஷ்மியை அட்லீஸ்ட் ஒரு நாளாவது உட்கார வைத்து நாம் உணவு பறிமாற வேண்டும்.
அந்த வகையில் இன்றைய ஸ்பெஷல் வெஜ் பிரைடு ரைஸ்.
ரொம்ப ஸிம்பிள் ரெசிபி. டிரை செய்து பார்க்கிறீகளா . நாலு பேர்களுக்கானது.
1. இந்தியாகேட் பாஸ்மதி அரிசி இரண்டு மீடியமான டம்ப்ளர். கழுவி 6 கப் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
2. ஒரு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு சுமாரான துண்டளாக கட் செய்து கொஞ்சம் உப்பு, மிளகாய்த்தூள் கல்ந்து எண்ணெயில் பொறித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
3. ஒரு கேரட், 10 பீன்ஸ், சிறிய அளவில் கோஸ் சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
4. வாயகன்ற பாத்திரத்தில் 8 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதி வந்ததும் ஒரு கரண்டி எண்ணெய் மற்றும் தேவையான அளவு கல் உப்பு போட்டு ஒரு மணி நேரம் ஊறிய பாஸ்மதி அரிசியை அதில் போட்டு ஒரு தட்டை எடுத்து பாத்திரத்தை மூடவும்.
5. ஐந்து நிமிடம் கழித்து மூடிய தட்டை திறந்து பார்த்து அரிசி வெந்திருக்கிறதா என்று பதம் பார்க்கவும். 90 சதம் வெந்திருந்தால் போதும்.
6. வடிகட்டி, வெந்த சோற்றை டவல் டிஷ்யூவில் பரப்பி ஆறவிடவும்.
7. கட் செய்து வைத்துள்ள கேரட், பீன்ஸ் மற்றும் கோஸை கொஞ்சம் எண்ணெயில் வதக்கி அப்படியே அதன் மீது ஒரு ஸ்பூன் சோயா சாஸ் ஒரு ஸ்பூன் சில்லி சாஸ் ஆகியவற்றை ஊற்றி நன்கு கலக்கவும்.
8. ஆற வைத்த ரைஸை கொஞ்சம் கொஞ்சமாக மேற்கண்டவாறு வதக்கும் காய்களுடன் சாதம் உடைந்து விடாதவாறு மெதுவாக கலந்து கிளறி இறக்கி வைக்கவும்.
9. நெய்யில் வதக்கிய முந்திரிப்பருப்பை தேவைப்பட்டால் வெஜ் பிரைடு ரைஸுடன் சேர்க்கலாம்.
10. வெஜ் பிரைடு ரைஸூக்கு வடாம், ஆனியன் ரைத்தா, ஷேஸ்வான் சட்னி, டொமெட்டோ சாஸ் ஆகியவை நன்றாக இருக்கும்.
சமைத்து குடும்பத்தாருக்கு பறிமாருங்கள்.
உணவில் கலந்த உங்கள் அன்பு மற்றும் பாசம் ஆகியவை உணவின் சுவையை மேலும் கூட்டும்.



Comments
Post a Comment