மகாகவி
வான மழை நீ யெனக்கு
வண்ண மயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்கு
பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி
நங்கை நின் றன் சோதிமுகம்
ஊனமறு நல்லழகே!
ஊறு சுவையே! கண்ணம்மா!
காதலடி நீ யெனக்கு
காந்தமடி நானுனக்கு
வேதமடி நீ யெனக்கு
வித்தையடி நானுனக்கு
போதமுற்ற போதினிலே
பொங்கி வருந் தீஞ்சுவையே
நாதவடி வானவளே!
நல்லஉயிரே கண்ணம்மா!
வீணையடி நீ யெனக்கு
மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீ யெனக்கு
புது வயிரம் நானுனக்கு
காணுமிடந்தோறு நின்றன்
கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே!
வாழ்வு நிலையே!கண்ணம்மா!



Comments
Post a Comment