பந்தம்
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
~
ஒரு அற்புதமான குறுந்தொகை பாடல்.
பாடலின் பொருள்:
நாம், நம் பெற்றோர் வழி உறவினர்களாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் இப்போது இணைந்து விட்டோம், செம்மண் நிலத்து மண்ணும் மழையும் இணைவதைப் போல.
~
இந்த வாரத்தில் நடைபெற்ற ஒரு சுப நிகழ்ச்சி எனக்கு இந்தப் பாடலை ஏனோ நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது.
மதிப்பிற்குரிய திரு சாம்பமூர்த்தி ஐயாவை பற்றி ஏற்கனவே என் 'பேரன்பு' என்னும் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.
துறையில் மிக மூத்தவர். பீஷ்ம பிதாமகர். அவருடைய ஞானமும், அதை அனைவரிடமும் சேர்க்க அவர் உழைக்கும் உழைப்பும் பிரமிக்க வைப்பவை. சத்தியம் என தான் நம்பும் கொள்கைகளை எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாத நேர்மையாளர்.
சமீபத்தில் கோவிட் வந்த பிறகு உதவியாக அவர் இளைய சகோதரர் மகனை தன்னுடன் கூட வைத்துக் கொண்டார். அவர் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக நார்மல் நிலைக்கு திரும்பினார்.
சில ஆண்டுகளுக்கு முன் அவரின் இளைய சகோதரர் காலமாகி விட்டார். இளைய சகோதரரின் மனைவி தன் மகனுடன் சென்னைக்கு அருகே புறநகர் பகுதி ஒன்றில் வசித்து வந்து கொண்டிருந்தார்.
அந்த மகன் தான் சாம்பமூர்த்தி சாருக்கு உதவியாக கூட இருந்தார்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர் இளைய சகோதரனின் மகனுக்கு திருமணம் தள்ளி போய்க் கொண்டே இருந்தது. வயதும் கூடிக் கொண்டேயிருந்தது.
இச்சூழ் நிலையில் தந்தையும் இறந்து விட்டதால் இவரின் திருமணத்தை முன்னின்று எடுத்து நடத்த யாருமில்லாமல் போயிற்று.
தன் தம்பி மகனுக்கு திருமணம் நடந்து அவர் குடும்ப வாழ்வில் ஈடுபடுவது அக்குடும்பத்தின் எதிர்கால நலனுக்கு உகந்ததாக இருக்கும் என்று தனக்கு நெருங்கியவர்களிடம் அடிக்கடி சொல்லி கொண்டிருப்பார் சாம்பமூர்த்தி சார். என்னிடமும் பலமுறை பேசியிருக்கிறார்.
இவ்விவரத்தை இணைப்பதிவாளர் செல்வி. குமரேஸ்வரி அவர்களிடமும் சொல்லியிருக்கிறார் சாம்பமூர்த்தி சார்.
கூட்டுறவுத் துறையில் பணிபுரியும் பெரும்பாலானோர் இணைப்பதிவாளர் குமரேஸ்வரி அவர்களை அறிவர். அவரின் நேர்மையும், எளியோருக்கு உதவும் பண்பும், பெண்ணுரிமை மற்றும் சமூக நலனில் அவர் காட்டும் அக்கறையும் வியக்கத்தக்கது. நாமும் பின்பற்றவேண்டும் என்ற உத்வேகத்தை எழுப்பக்கூடியதாக இருக்கும் அவரின் செயல்பாடுகள்.
இணைப்பதிவாளர் குமரேஸ்வரி அவர்கள் சாம்பமூர்த்தி சார் இந்த விஷயத்தை சொன்னதும் உடன் களத்தில் இறங்கினார்.
குடும்ப சூழ்நிலைகள் காரணமாக இதேபோல் திருமணம் தள்ளி போய்க் கொண்டிருந்த அவருக்கு தெரிந்த இடத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு சாம்பமூர்த்தி சாரின் தம்பி மகனை மணம் முடிக்க முடிவு செய்தார்.
ஆனால் ஒரே ஒரு விஷயம் இந்த நல்ல விஷயத்தை உடனடியாக முடிக்க இடையூறாக இருந்தது.
அது சாதி.
அக்குடும்ப உறுப்பினர்களிடம் பேசினார். அவர்களை ஒருவாறு சாதி கடந்த திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தார்.
அதேபோல் சாம்பமூர்த்தி சார் தன் குடும்பத்தை சேர்ந்தவர்களிடமும் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி அவர்களையும் சம்மதிக்க வைத்தார்.
இரு குடும்பத்தினர் ஒப்புதலுடன் மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் திருமணம் நல்ல படியாக உற்றார், உறவினர், சுற்றத்தினர் மற்றும் நண்பர்கள் வாழ்த்துகளுடனும் ஆசிகளுடனும் சம்பிரதாய முறைப்படி நடைபெற்றது.
கோவிட் காரணமாக சிறிய அளவிலான விருந்தினர்களே அனுமதிக்கப்பட்டனர். வந்திருந்த அனைவரும் நிறைந்த மனதுடன் மணமக்களை வாழ்த்தினர்.
ஒரு பெரிய கடமையை செய்து முடித்த திருப்தி சாம்பமூர்த்தி சார் முகத்தில் தெரிந்தது.
இணப்பதிவாளர் குமரேஸ்வரி மேடம் இது போன்ற இன்னொரு டாஸ்க்கும் வைத்திருக்கிறார் என்று எனக்கு தெரியும். அதுவும் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் அருளால் விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்.
நேர்மறை சிந்தனையுடன் நல்ல நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்படும் ஒரு செயல் எல்லா தடைகளையும் உடைத்தெறிந்து நல்லபடியாக இலக்கை அடையும் என்பதையும் சாம்பமூர்த்தி சார் பேராசானாய் இருந்து எனக்கு கற்றுத் தந்திருக்கிறார்.
அவருக்கு எனது பணிவான குருவணக்கங்கள்.



Comments
Post a Comment