வரலாறு 2


வரலாறு - 2


சத்யாஸ்ரயன் 


யார் என்று இவரை தெரியுமா?

ஒரு சின்ன க்ளூ தருகிறேன். புகழ்பெற்ற சரித்திர கதாசிரியர் எழுதிய அருமையான தொடர் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரமாக வரும் ஒருவரின் சிறப்புப் பெயர் அது.

கொஞ்சம் யோசித்தால் கண்டுபிடித்து விடலாம்.
~

சாதவாகனப் பேரரசின் வீழ்ச்சி புதிய சில ஆட்சிகளின் எழுச்சிக்கு வித்திட்டது.

அவற்றுள் குறிப்பிடத்தகுந்த சில தென்னிந்திய அரசாட்சிகள் கடம்பர்கள் மற்றும் பல்லவர்கள் தோற்றுவித்தவை ஆகும்.

பல்லவர்களிடம் கடம்பர்கள் சிறிது சிறிதாக தங்கள் நிலப்பகுதியை இழந்து அவர்களுக்கு கப்பம் செலுத்தும் சிற்றரசர்களாக மாறினர்.

வலுவிழந்த கடம்பர்களுக்கு எதிராக பாதாமி சாளுக்கியர்கள் ஒருங்கிணைந்தார்கள். சாளுக்கியர்கள் கடம்பர்களை வென்று பாதாமியை கைப்பற்றி தங்கள் அரசை நிறுவினார்கள்.

பாதாமி சாளுக்கியர்கள் மெல்ல மெல்ல அண்டை தேசங்களின் மீது போர் தொடுத்து தங்கள் அரசை விரிவாக்கி கொண்டு சாளுக்கிய வம்சத்தை நிலை நிறுத்திக் கொண்டார்கள்.

ரணராகாவால் தோற்றுவிக்கப்பட்ட சாளுக்கிய பேரரசு அவருக்குப் பின் ஜெயசிம்மா, முதலாம் புலிகேசி ஆகியோரால் விரிவடைந்தது.

பின்னர் வந்த கீர்த்திவர்மனும் சாளுக்கிய பேரரசை தக்காணத்தில் வலிமை மிகுந்த பேரரசாக மாற்றினான்.

கீர்த்திவர்மனுக்கு பிறகு அவன் மகன் எரையா சிம்மாசனம் ஏறியிருக்கவேண்டும். ஆனால் அவன் வயதில் மிக இளையவனாக இருந்ததால் கீர்த்திவர்மனின் சகோதரன் மங்களேசன் சாளுக்கிய மன்னரானான்.

எரையா உரிய வயதை எய்தியதும் ஆட்சியை அவனிடம் கொடுக்காமல் நாட்டைவிட்டு அவனை துரத்தினான் மங்களேசன். தன்னைத் தானே சாளுக்கிய பேரரசனாக பிரகடனப்படுத்திக் கொண்டான். சாளுக்கிய பேரரசை விரிவு படுத்தினான்.

நாட்டைவிட்டு வெளியேறிய எரையா தற்போதைய கர்நாடாகத்தின் கோலார் பகுதியில் மறைந்து வாழ்ந்து அங்கு ஆட்சிசெய்த பாணர்களின் உதவியுடன் பெரும் படை ஒன்றை திரட்டி மங்களேசனுக்கு எதிராக போர்க்களம் புகுந்தான்.

மங்களேசனுடன் நடைபெற்ற போரில் எரையா பாணர்களின் துணையுடன் வெற்றி பெற்றான். போர்க்களத்தில் மங்களேசன் கொல்லப்பட்டான்.

இரண்டாம் புலிகேசி என்னும் பெயருடன் எரையா சாளுக்கிய பேரரசின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டான்.

முடிசூட்டிக்கொண்டவுடன் தனது பேரரசை மேலும் விரிவாக்கம் செய்யும் பணியில் கங்கர்கள், வனவாசி கடம்பர்கள் மற்றும் கொங்கணப் பகுதியை ஆண்ட கொங்கணர்கள் ஆகியோரை தோற்கடித்து தென்னிந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியமாக சாளுக்கிய பேரரசை மாற்றினான் இரண்டாம் புலிகேசி.

இவ்வெற்றிகள் அனைத்திற்கும் மகுடம் சூட்டியது போல் அமைந்தது தானேஸ்வர ஹர்ஷவர்த்தனரை தோற்கடித்தது.

குப்தர்களுக்கு பின்னர் மாபெரும் சாம்ராஜ்ஜியமாக கிளர்ந்தெழுந்த தானேஸ்வர வர்த்தனர்களின் மிகச்சிறந்த அரசனான ஹர்ஷர் தனது சாம்ராஜ்ஜியத்தை தென்னிந்தியாவிலும் விரிவாக்க நினைத்து மாபெரும் படையுடன் நர்மதை நதிக்கரைக்கு வந்தான்.

அங்கு ஹர்ஷருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எதிரே நின்ற புலிகேசி தலைமையிலான சாளுக்கிய படைகள் அதுவரை போரில் தோற்காத ஹர்ஷரை பின் வாங்க வைத்தது.

கடுமையான போரில் இரு தரப்பும் கடும் இழப்பை சந்தித்தன. ஹர்ஷர் வேறு வழியில்லாமல் பின்வாங்க நேர்ந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்ட புலிகேசி ஹர்ஷருடன் உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டு ஹர்ஷரின் ஆதிக்கத்தை நர்மதை நதியின் வடகரையோடு நிறுத்தி விட்டான்.

புலிகேசியின் பார்வை இப்போது காஞ்சியை நோக்கி திரும்பியது. காஞ்சி பல்லவர்களின் ஆளுமையில் கலை மற்றும் செல்வச் செழிப்பில் வாதாபிக்கு நிகராக திகழ்ந்து கொண்டிருந்தது.

மகேந்திரவர்மர் பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் பேரரசராய் இருந்தார்.

பல்லவம் வீழ்ந்ததா ? சாளுக்கியர் வென்றாரா ?


Comments