மறதி

மறதி

ன்னோட ஞாபகசக்தி 🙂 ரொம்பவே அபாரமானது என்பது எனது பழைய பதிவுகளை படித்தவர்களுக்கு புரியும்.


வீட்டிற்கு வரும் ஸ்டேஷன் மறந்து அடுத்த ஸ்டேஷனில் இறங்கியது...


எந்த லெப்டில் திரும்பினால் வீடு வரும் என்று புரியாமல் குழம்பியது...


கூட வேலை செய்பவரின் பெயர் மறந்து போய் அவர் சென்றதும் வாட்ஸப் குரூப்பில் அவர் பெயரை தேடியது....


இப்படி பலப்பல..


சரி, அது இருக்கட்டும்.


சென்ற வாரத்தில் ஒரு நாள் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவர்கள் வீட்டிற்கு சில விருந்தினர்களும் வந்திருந்தனர். ஒரு குழந்தை உறங்கி கொண்டிருந்தது.


சிறிது நேரம் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். பின் விடைபெற்று வீடுவந்து சேர்ந்தேன்.


வரும் வழி முழுதும் யோசித்துக் கொண்டே வந்தேன் அந்த உறவுக்காரப் பெண்ணின் பெயர் சுத்தமாக மறந்து விட்டது. நினைவுக்கு வரவே இல்லை. வீடு வந்து சேர்ந்தேன்.


என் மனைவியிடம் அவர்கள் வீட்டிற்கு சென்று வந்த விவரத்தை சொன்னேன். அந்தப் பெண்ணின் பெயர் மறந்து போனதையும் தெரிவித்தேன். உடன் சட்டென அந்த பெண்ணின் பெயரை சொன்னார் மனைவி.


சே.. என்று பின்னந்தலையில் தட்டிக் கொண்டேன். எப்படிடா இந்த பெயரை மறந்தோம் என்று நொந்து கொண்டேன்.


பின்னர் குழந்தைகளை பற்றி விசாரித்தார் என் மனைவி.


அவர்களின் மகனும் மகளும் மேல் நிலைப்பள்ளி படித்துக் கொண்டிருந்தனர். முழு ஆண்டு தேர்வு முடிந்து மும்பை செல்ல தயாராகி கொண்டிருந்தனர் அப்போது. அந்த விவரத்தையும் சொன்னேன்.


அந்த குட்டீஸ் என்ன பண்ணுகிறது..? என்று என் மனைவி கேட்டார்.


எந்த குட்டீஸ்...? என்றேன் புரியாமல்.


அட ராமா... லாக்டவுன் நேரத்தில் அவர்களுக்கு பிறந்த குழந்தை, மறந்துட்டீங்களா... என்று குறும்புடன் கேட்டார்.


ஓ மை காட். அட ஆமாம் ல.


அப்போ நான் சென்றிருந்த நேரம் அவர்கள் வீட்டு ஹாலில் உறங்கிக் கொண்டிருந்தது அவர்கள் குழந்தை தான் என்பதை எப்படி மறந்து போனேன்..?


ஒரு வார்த்தை கூட அந்த குழந்தையைப் பற்றி ஏதும் விசாரிக்காமலேயே வந்து விட்டோமே என்று என்னையே நொந்து கொண்டேன்.


ஈஸ்வரா..!


எல்லாம் முடிந்து இரவு Facebook ஐ நோண்டி கொண்டிருந்தபோது யாரோ ஒரு புண்ணியவான் கீழே உள்ள ஒரு தத்துவத்தை ஷேர் செய்திருந்தார்.


According to science being forgetful is actually a sign you are intelligent.


திருப்தியுடன் கர்வமாய் உறங்க சென்றேன்.


நானும் இண்டெலிஜெண்ட் தான்.


பிகு :


அலுவலகம் முடிந்து நேற்று திரும்பும்போது வண்டியில் 'காற்றினிலே வரும் கீதம்' படப்பாடலான 'கண்டேன் எங்கும்...' ஒலிக்கவே அந்தப் படத்தின் வித்தியாசமான கதையை Mani Sanjay யிடம் விவரித்துக் கொண்டே வந்தேன்.


1980களில் பார்த்த படத்தோட கதை எல்லாம் நினைவில் இருக்கிறது. காலையில் என்ன சாப்பிட்டோம் என்பது மறந்து தொலைக்கிறது. ஆண்டவா....!


ஙே

Comments