கொஞ்சம் தேனீர் - கொஞ்சம் அரட்டை
பொன்னந்திமாலை
கொஞ்சம் தேனீர் - கொஞ்சம் அரட்டை
ஆல் டைம் காபி டிகாக்ஷன் வீட்டில் இருப்பதால் தேனீர் பொதுவாக வீட்டில் தயாரிப்பதில்லை. வாங்கிய டீத்தூளை காலி செய்ய வேண்டிய நெருக்கடியான நேரத்தில் தான் வீட்டில் டீ.
வீட்டிற்கு வரும் விருந்தினரும் என்னவோ தெரியல காபியை தான் தேர்வு செய்கின்றனர்.
ஆக, தேனீர் என்பது வெளியே தான் பெரும்பாலும்.
பில்டர் காபி கிடைக்காத இடங்களில் இன்ஸ்டண்ட் காபி அருந்த பிடிக்காததால் டீ தான் என்னுடைய முதன்மை தேர்வு.
பல இடங்களில் தேனீர் அருந்தியிருந்தாலும் மன்னார்குடி பந்தலடி வீரகுமார் கடை டீ மறக்க முடியாத ஒன்றாகும்.
வீரகுமார் எனக்கு தெரிந்து மன்னார்குடியில் டீகடை வைத்திருந்த ஒரே மல்லு.
நல்ல அருமையான டீ அவரிடம் கிடைத்தாலும் அவர் கடையில் கேரளாவில் வரவழைத்து வைத்திருக்கும் பிஸ்கட்டுகள் தான் ரொம்ப பிரபலம் அப்போது.
ஸோ, அந்த கால ஐயங்கார் பேக்கரி அவர் கடை.
இப்போது சென்னையில் அங்கங்கே முளைத்திருக்கும் மல்பெரி டீ ஷாப்களில் அந்த கால வீரகுமார் போட்டுக் கொடுக்கும் டீயின் அதே திடம், வாசம் மற்றும் சுவை இருப்பது ஆச்சரியம் தான்.
வீரகுமார் டீ கடை இன்னும் இருக்கிறதா என்பதை மன்னை நண்பர்கள் சொல்லவும் ப்ளீஸ்.
~
கொஞ்சம் அரட்டை:
கடந்து போன வெள்ளிக்கிழமை ஒன்றின் மாலை முதலே என் காதுகள் இரண்டும் அவ்வப்போது தனித்தனியாகவும், சேர்ந்தும் அடைத்துக் கொள்ள துவங்கிவிட்டன.
பெரிதாக பிரச்சினை இல்லாததால் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டேன்.
தூங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்று சாதாரணமாய் நினைத்து விட்டேன்.
ஆனால் சனிக்கிழமை காலை இடது காது சுத்தமாக அடைத்துக் கொண்டுவிட்டது.
நானும் சிறு வயதில் இதுபோன்று நிறைய நடந்திருந்ததால் இதை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. தானே சரியாகிவிடும் என்றே நினைத்தேன்.
ஆனால் அது இன்னும் சிவியர் ஆகியது. சனிக்கிழமை மதியத்திற்கு மேல் இன்னொரு காதும் கொய்ங்… கொன்ய்ங்.. என்று கொஞ்ச நேரம் சவுண்டு விட்டுக் கொண்டே சடன் ஆ ஒரு சுபமுகூர்த்த நேரத்தில் அடைத்துக் கொண்டுவிட்டது.
காது மடல்களில் கைபட்டாலே இல்லையில்லை விரல் பட்டாலே ங்கொய்ங் சத்தம் வர ஆரமித்தது.
ஒவ்வொரு காதிலும் மாறி மாறி விரலை வைத்து ரிதமிங் ஆக செவ்விசை இல்லையில்லை செவியிசை வருவதை அனுபவிக்க துவங்கிவிட்டேன்.
எப்படியெல்லாம் இசையை உருவாக்க முடிகிறது பாருங்கள்.
~
காதுகளைப் பற்றியும் காதில் கேட்கும் குரல்கள் பற்றியும் அவை பிறப்பிக்கும் ஆணகள் பற்றியும் கேள்விப்பட்டது படித்ததெல்லாம் இப்போது நினைவில் வந்து தொலைக்க ஆரம்பித்தது.
~
“தற்கொலை செய்து கொள்' என்று அடிக்கடி காதில் கேட்ட குரலின் கட்டளைக்கு கீழ்படிந்து என் நண்பரின் சகோதரி, முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர், சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துகொண்டு இறந்த தகவலை நண்பன் தெரிவித்த போது நான் அதிர்ந்தேன்.
"தற்கொலை செய்து கொள்" என்று காதில் கேட்ட குரல் சில ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் கண் எதிரே இறந்த அவளின் உயிர்த் தோழியின் குரலாம்.
சுஜாதாவின் "ஆ" என்னும் கதையில், காதில் கேட்கும் மாயக் குரல்களும், முன் ஜென்ம நினைவுகளும் கலந்து, கதையின் நாயகனை குழப்பி அடிக்கும் கூத்தை திகிலுடன் படித்திருக்கிறேன்.
எம்.வி. வெங்கட்ராமனின் சாகித்திய அகாதமி விருது பெற்ற "காதுகள்" நாவலில் காதில் கேட்கும் பல குரல்களால் வாழ்வை தொலைக்கும் ஏழை நெசவாளி ஒருவனின் துயரத்தையும், அதன் பொருட்டு அவனுக்குள் ஏற்படும் ஆன்மீகத் தேடல் அனுபவங்களையும், அதில் அவன் கண்ட வெற்றிகளையும் அருமையாக எழுதியிருப்பார்.
அந்த கதையில் வரும் கதாநாயகனின் அனுபவம் அவரின் சொந்த அனுபவம் என்று அவரே பின் ஒரு சமயத்தில் கூறினார்.
தங்கள் காதுகளில் இறைவன் பேசியதாக பெரிய பெரிய மகான்கள் (முகமது நபி உட்பட) கூறியிருக்கிறார்கள்.
பொருளாதாரத்திற்காக நோபல் பரிசுபெற்ற புகழ் பெற்ற கணிதவியலாளர் ஜோன் நாஷ் Paranoid Schizophrenia வுடன் வாழ்ந்து நோபல் பரிசு பெற்றவர். காதில் பல்வேறு குரல்கள் கேட்கும் உளம் சார்ந்த நோய் அது.
அவர் வாழ்க்கையை விவரிக்கும் படம் A Beautiful Mind. அதில் காதில் கேட்கும் குரல்களை (auditory hallucination) பாத்திரமாகமாற்றி (visual hallucination) உலவவிட்டிருப்பார்கள்.
~
நம்க்கும் இதுபோன்று ஏதாவது குரல் காதுகளில் இருந்து கேட்குமோ விரைவில் அந்த அனுபவமும் கிடைக்குமோ என்று பயந்தபடியே தூங்கி போய்விட்டேன்.
மறு நாள் காலை பயந்துகொண்டே எழுந்தேன்.
அதே ங்கொய்….
இரு காதுகளையும் இறுக பொத்திக் கொண்டேன். சத்தம் இப்போது மெல்லியதாய் ஒற்றை வயலின் போல இசைந்து வந்து கொண்டிருந்தது.
குப்பை வண்டி வரும் சத்தம் போல் ஏதோ ஒரு உணர்வு. குப்பை மூட்டையை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தேன்.
பக்கத்து வீட்ட்க்காரர் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தவர் என்னை பார்த்து கை ஆட்டியபடி ஏதோ பேச ஆரம்பித்தார்.
ம்ஹ்ம்ம்ம். ஒன்னும் கேட்கவில்லை. ஜிஜோ லேசாக குரைக்கும் சத்தம் கேட்டு வீட்டுக்குள் பார்வையை திருப்பினேன்.
அதற்குள் மாடியிலிருக்கும் ஹவுஸ் ஓனர் அருகில் வந்து ஏதோ சொன்னார். மெல்லியதாக காது கேட்க ஆரம்பித்தது.
கிட்டே வந்த அவரிடம் பிரச்சினையை சொன்னேன். நல்ல E&T டாக்டர் இருந்தால் சொல்லுங்கள் என்றேன்.
அவர், இது சாதாரண Clogging தான் சார், சரியாகலைன்னா டாக்டர் கிட்ட போகலாம். சேப்டி பின் இருந்தால் அதன் கீழ்புறத்தை மெல்ல காதுக்குள் நுழைத்து சுத்தி சுத்தி நோண்டும்போது அழுக்கு வரும். அதை எடுத்துவிட்டு மீண்டும் மீண்டும் செய்யுங்கள் சரியாகிவிடும். இல்லையென்றால் டாக்டர் மொஹந்தி இருக்கிறார் போகலாம் என்றார்.
இயர் பட்ஸ் கொண்டு காதுகளை க்ளீன் செய்தேன் சார், ஒன்றும் நடக்கவில்லை என்றேன்.
அது தான் சார் செய்யக்கூடாது. அது அழுக்கை இன்னும் உள்ளே தள்ளிவிடும். நான் சொன்னபடி செய்யுங்கள் என்றார்.
உடனே அவர் சொன்னதை செய்ய ஆரம்பித்தேன்.
முகம் மெல்ல மெல்ல மலர்ந்து தாமரை ஆனது. பின்னே என் ஒய்ப் யாரையோ மொபைலில் வெளுத்துக் கொண்டிருப்பதை அத்தனை துல்லியமாக கேட்க முடிகிறதே.
ஒரு சேப்டி பின் மூன்று நாள் பிரச்சினையை தீர்த்து வைத்தது.
நன்றிடா, சாமி 🙏

Comments
Post a Comment