கொஞ்சம் காபி கொஞ்சம் மெமரீஸ் - 6
கொஞ்சம் காபி
கொஞ்சம் மெமரீஸ் - 6
முன்பெல்லாம் ஹோடெல்கள் தவிர்த்து வெளியே காபி குடிக்க வேண்டுமென்றால் டீ கடைகள் தான் ஒரே வழி.
நாயர் டீ கடைகளில் டீ சூப்பராக போடுவார்கள். நாம் போய் காபி வேண்டும் என்று கேட்டால் நம்மை வினோதமாக பார்த்து அலட்சியமாக ப்ரூ இன்ஸ்டண்ட் காபி அதுவும் சூப்பர் ஸ்ட்றாங்கில் போட்டுத் தருவார்கள். வேறு வழியில்லாமல் சாப்பிட்டு விட்டு வரவேண்டியிருக்கும்.
இப்போது நிறைய காபி ஜாயிண்ட்கள். மெட்ராஸ் காபி, காபி மாமா, காபி சாஸ்த்ரா, ஆலடிபட்டியான் கருப்பட்டி காபி என்று சிட்டி முழுக்க நிறைய சிதறி கிடக்கின்றன.
எல்லோருமே நல்ல தரம் மெயிண்டெய்ன் செய்கிறார்கள். அம்பியென்ஸ்சும் கூட அருமையாக இருக்கின்றது.
ஆனாலும் பெங்களுருவை கம்பேர் செய்யும்போது சென்னை இன்னும் வளர வேண்டும்.
பெங்களூரில் தடுக்கி விழுந்தால் Pubகளுக்கு இணையாக காபி ஷாப்புகள் மற்றும் உடுப்பி ஹோடெல்கள்.
இருபது ரூபாய்க்கு அற்புதமான காபி கிடைக்கிறது. சுவையோ அபாரம்.
தி பில்டர் காபி - என்றொரு ஹோடெல் கல்யாண் நகரில். வேற லெவல் காபி. ஓஹோ ரகம். அங்கேயே உட்கார்ந்து வரிசையாக காபி ஆர்டர் செய்து குடித்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு ருசி.
பெங்களூருவில் பாலுடன் சர்க்கரையையும் சேர்த்து பாத்திரத்தில் கொதிக்க வைக்கின்றனர்.
அதுபோல் காபி டிகாக்ஷனை ஒரு பாய்லரில் சூடு நிலையிலேயே வைத்திருக்கின்றனர்.
அது தான் சென்னையை விட காபியின் உயர்தர ருசிக்கு காரணம் என்று என் பையன் சாய் சொல்கிறான்.
இருக்கலாமோ ?
~
கொஞ்சம் மெமரீஸ் :
முதல்வாக்கு
~
வாழ்க்கையின் எல்லா செயல்களிலும் 'முதல் முறை' யாக செய்ததை கடைசி வரை எந்த மனிதனாலும் மறக்கவே முடியாது.
அசை போடும் ஒவ்வொரு தருணத்திலும் அந்த முதல் முறை தரும் இனிமையை அனுபவித்து ரசிக்கலாம். பசுமையாய் மனதில் என்றும் நிற்கும்.
1989 தமிழ்நாடு சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் தான் நான் முதன் முதலில் வாக்களிக்கும் உரிமையை பெற்றேன்.
மன்னார்குடி தொகுதியின் வாக்காளன் அப்போது நான்.
அதிமுக ஜெ அணி, ஜா அணி என்று பிளவு பட்டிருந்த நேரம் அது.
ஜெ அணியின் சார்பாக அதன் கூட்டணி கட்சி சி பி ஐ யும், ஜா அணியின் சார்பாக திரு எஸ். ஞானசுந்தரமும் போட்டியிட்டனர்.
திமுக சார்பில் நெல்லுக்கடை ராமச்சந்திரன் என்றழைக்கப்பட்ட KR போட்டியிட்டார்.
இவர்கள் தவிர இரண்டு மூன்று சுயேட்சைகள். அதில் குறிப்பிடத்தகுந்தவர் நாங்கள் குடியிருந்த பிருந்தாவன நகர் பகுதியை சேர்ந்த 'ஏரியா தாதா' செல்லப்பா கண்டியர்.
பிற பகுதி மக்களுக்கு அவர் தாதா. ஆனால் எங்களுக்கெல்லாம் ஜாலியான ஒரு மூத்த சகோதரர்.
முக்கிய கட்சிகளுக்கிடையே போட்டி கடுமையாக இருந்தது. ஆனால் நம்ம கண்டியர் அசரவில்லை. இப்போதைய மன்சூர் அலி கானை போல கலக்கி கொண்டிருந்தார்.
அவரின் சின்னம் 'கார்'. காரை விட்டு இறங்காமலேயே ஓட்டு கேட்டுக் கொண்டிருப்பார்.
ஏரியா நண்பர்கள் தேர்தல் முடியும் வரை அவரையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தனர்.
தேர்தல் முடிந்து ரிஸல்ட் வந்தது. திமுகவின் KR வெற்றி பெற்றார். ஜெ அணி கூட்டணியில் இருந்த வலது கம்யூனிஸ்ட் இரண்டாம் இடம்.
அண்ணன் செல்லப்பா கண்டியர் 246 வாக்குகள் பெற்று கடைசி இடம்.
அன்றைய இரவு பூத் வாரியாக தான் பெற்ற வாக்குகளை கையில் வைத்துக் கொண்டு முழு போதையில் தெருவையே கலக்கி கொண்டிருந்தார்.
தெருவில் உள்ள அனைவரையும் ஏக வசனத்தில், கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டிக் கொண்டிருந்தார்.
பின்னே, இரண்டே இரண்டு வாக்குகள் தான் எங்கள் பகுதி பூத்தில் அவருக்கு விழுந்திருந்தது.
ஒன்று நான் போட்டது... 😉
இன்னொன்று... ?
~
பின்னர் ஒருமுறை பேசிக் கொண்டிருக்கும்போது சொன்னார் தான் தனது ஒட்டை திமுக வுக்கு போட்டதாக. :)
அந்த இன்னொரு ஓட்டு யார் போட்டதென கடைசி வரை தெரியவேயில்லை.
🤪



Comments
Post a Comment