கொஞ்சம் தேநீர் - கொஞ்சம் அரட்டை - 4
பொன்னந்திமாலை
கொஞ்சம் தேநீர் - கொஞ்சம் அரட்டை - 4
திருவாரூரில் நான் பணியாற்றியபோது எங்கள் அலுவலகத்தை சுற்றி நாற்புரமும் நான்கு டீ கடைகள் உண்டு.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடை என்று நாங்கள் டீ இடைவேளையில் டீ குடிக்க செல்வோம்.
பள்ளிவாசல் எதிரே பெத்தையன் டீ கடை. அவர் டீ யை தவிர காலை நேரங்களில் டிபனும் மாலை நேரங்களில் பக்கோடா, பஜ்ஜி போன்ற ஐட்டங்களும் தயாரித்து விற்பனை செய்வார்.
அவர் கடையில் மதிய நேரத்தில் கேசரி சூப்பராக இருக்கும். டாப் டக்கர் அது.
பழைய நாகை ரஸ்தாவில் அலி கடை.
அலி என்பவர் ஒரு பாய். அவர் கடையில் கூட்டம் அள்ளும். ஒன்று மாற்றி ஒன்று என ஏதாவது ஒரு பட்சணம் அடுப்பில் தயாராகி கொண்டே இருக்கும்.
வாடிக்கையாளர்கள் சூடாக அதை சாப்பிட்டு விட்டு டீ குடிப்பார்கள்.
அலி கணக்கு எல்லாம் வைத்துக் கொள்ள மாட்டார். சாப்பிட்டுவிட்டு நாம் என்ன சொல்கிறோமோ அதுதான் கணக்கு.
அலி கடையில் கோடை காலத்தில் தயிர்வடை அருமையாக இருக்கும். விலையும் ரொம்ப கம்மியாக இருக்கும். அழகாக கேரட் துருவல், கொத்துமல்லி டாப்பிங் எல்லாம் செய்து தருவார். புளிக்காத நல்ல தயிர்.
ருசி நெஞ்சை அள்ளும்.
அலி கடையை விட்டு கொஞ்சம் 100 அடி முன்னே போனால் ராமநாதன் கடை வரும்.
ராமநாதன் கடையில் மதியம் கமகம வென வற்றல்குழம்பு சாதம் தயாராகும். நாகை ரஸ்தா முழுக்க அந்த வாசனை காற்றில் பரவி மூக்கை துளைக்கும்.
டீ எங்கு தான் நன்றாக இருக்கும் என்கிறீர்களா ?
மூன்று பேரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை.
டீ யை தவிர மற்றவை எல்லாம் தரமாய் இருக்கும்.!
~
கொஞ்சம் அரட்டை :
என்னோட ஞாபகசக்தி 🙂 ரொம்பவே அபாரமானது என்பது எனது பழைய பதிவுகளை படித்தவர்களுக்கு புரியும்.
வீட்டிற்கு வரும் ஸ்டேஷன் மறந்து அடுத்த ஸ்டேஷனில் இறங்கியது...
எந்த லெப்டில் திரும்பினால் வீடு வரும் என்று புரியாமல் குழம்பியது...
கூட வேலை செய்பவரின் பெயர் மறந்து போய் அவர் சென்றதும் வாட்ஸப் குரூப்பில் அவர் பெயரை தேடியது....
இப்படி பலப்பல..
சரி, அது இருக்கட்டும்.
சென்ற வாரத்தில் ஒரு நாள் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவர்கள் வீட்டிற்கு சில விருந்தினர்களும் வந்திருந்தனர். ஒரு குழந்தை உறங்கி கொண்டிருந்தது.
சிறிது நேரம் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். பின் விடைபெற்று வீடுவந்து சேர்ந்தேன்.
வரும் வழி முழுதும் யோசித்துக் கொண்டே வந்தேன் அந்த உறவுக்காரப் பெண்ணின் பெயர் சுத்தமாக மறந்து விட்டது. நினைவுக்கு வரவே இல்லை. வீடு வந்து சேர்ந்தேன்.
என் மனைவியிடம் அவர்கள் வீட்டிற்கு சென்று வந்த விவரத்தை சொன்னேன். அந்தப் பெண்ணின் பெயர் மறந்து போனதையும் தெரிவித்தேன். உடன் சட்டென அந்த பெண்ணின் பெயரை சொன்னார் மனைவி.
சே.. என்று பின்னந்தலையில் தட்டிக் கொண்டேன். எப்படிடா இந்த பெயரை மறந்தோம் என்று நொந்து கொண்டேன்.
பின்னர் குழந்தைகளை பற்றி விசாரித்தார் என் மனைவி.
அவர்களின் மகனும் மகளும் மேல் நிலைப்பள்ளி படித்துக் கொண்டிருந்தனர். முழு ஆண்டு தேர்வு முடிந்து மும்பை செல்ல தயாராகி கொண்டிருந்தனர் அப்போது. அந்த விவரத்தையும் சொன்னேன்.
அந்த குட்டீஸ் என்ன பண்ணுகிறது..? என்று என் மனைவி கேட்டார்.
எந்த குட்டீஸ்...? என்றேன் புரியாமல்.
அட ராமா... லாக்டவுன் நேரத்தில் அவர்களுக்கு பிறந்த குழந்தை, மறந்துட்டீங்களா... என்று குறும்புடன் கேட்டார்.
ஓ மை காட். அட ஆமாம் ல.
அப்போ நான் சென்றிருந்த நேரம் அவர்கள் வீட்டு ஹாலில் உறங்கிக் கொண்டிருந்தது அவர்கள் குழந்தை தான் என்பதை எப்படி மறந்து போனேன்..?
ஒரு வார்த்தை கூட அந்த குழந்தையைப் பற்றி ஏதும் விசாரிக்காமலேயே வந்து விட்டோமே என்று என்னையே நொந்து கொண்டேன்.
ஈஸ்வரா..!
எல்லாம் முடிந்து இரவு Facebook ஐ நோண்டி கொண்டிருந்தபோது யாரோ ஒரு புண்ணியவான் கீழே உள்ள ஒரு தத்துவத்தை ஷேர் செய்திருந்தார்.
According to science being forgetful is actually a sign you are intelligent.
திருப்தியுடன் கர்வமாய் உறங்க சென்றேன்.
நானும் இண்டெலிஜெண்ட் தான்.



Comments
Post a Comment