கொஞ்சம் காபி கொஞ்சம் மெமரீஸ் - 4
கொஞ்சம் காபி
கொஞ்சம் மெமரீஸ் - 4
அதுவும் பில்டர் காபி தான் தொன்று தொட்டு சாலச் சிறந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இப்போது fresh & honest, coffee day, Pristine போன்ற பிராண்டட் அயிட்டங்கள் மார்கெட்டில் நிறைய வந்துவிட்டன.
கூடவே Cream Milkம் பாக்கெட்டுக்களில்.
மன்னார்குடியில் படித்துக் கொண்டிருந்த பால்ய காலத்தில், அதிகாலையில் உப்புக்காரத் தெரு பால் டெப்போவுக்கு சென்று கியூவில் காத்து நின்று ராஜேந்திரன் கோனார் கறந்த fresh பசும் பாலை வாங்கி வருவது எங்களின் அன்றைய தினத்து முதல் பணி.
எங்களின் என்றால் நான் மற்றும் எனது தம்பி Sai Kannan.
டெப்போவில் நான்கைந்து கோனார்கள் இருந்தாலும் ராஜேந்திரன் கோனார் someone special.
தீவிர MGR பக்தர். சைக்கிளில் MGR பாடல்களைப் பாடிக்கொண்டே தான் வருவார்.
முளைக்குச்சியில் கட்டிப்போடப்பட்டு, படுத்து அசை போட்டுக்கொண்டிருக்கும் பசுக்கள் அவர் வருகையை அறிந்தவுடனே கிருஷ்ணனைக் கண்ட கோபிகைகள் போல் மகிழ்ச்சியாய் துள்ளி எழுந்து நிற்கும்.
கன்றுகள் நின்ற இடத்திலேயே துள்ளும்.
கன்றுகளை முத்தமிட்டுக் கொஞ்சும் ராஜேந்திரன் பசுக்களை லெச்சுமி, கோமதி.. என்று பாசம் பொஙக அழைத்து தடவிக் கொடுப்பார்.
அந்த அன்புக்கு பசுக்களின் மடி தானே பால் சுரக்கத் துவங்கி விடும்.
கறந்த பாலை கணக்குப்பிள்ளையிடம் அளந்து ஊற்றி விட்டு சிட்டையில் எழுதிக் கொண்டு மாட்டை ஓட்டிக்கொண்டு உரிமையாளர்கள் செல்வார்கள்.
கணக்கு பிள்ளை என்று சொல்லக் கூடியவரின் பந்தா இருக்கிறதே, அதை விவரிக்கவே முடியாது. சொசைட்டியில் சம்பளம் வாங்கும் அவர், தான் தான் உலகுக்கே படியளப்பவர் போல் தோரனை காட்டுவார்.
பெரியவன் ஆனதும் பால் சொசைட்டி டெப்போ கணக்குப் பிள்ளை ஆக வேண்டும் என்பது தான் எனது பால்ய காலத்து கனவு.
நாளொன்றுக்கு சராசரியாக 35000 லிட்டர் பால் உற்பத்தி செய்யும் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கமாகிய அதே மன்னார்குடி பால் உற்பத்தியாளர் சொசைட்டிக்கு தனி அலுவலராகி, அந்தக் கனவை இறைவன் நனவாக்கினான் பின்பு.
Life is beautiful ❤️
~
கொஞ்சம் வாழ்க்கை :
கடந்து போகும் ஒவ்வொரு வருடமும் நமக்கு பல விஷயங்களை கற்றுத் தந்துவிட்டு தான் செல்கிறது.
அதன் மூலம் நன்மையோ அல்லது தீமையோ நாம் பெற்றுக் கொள்வதும் நிறையவே.
ரீவைண்ட் பண்ணி பார்க்கும்போது கற்றதும் பெற்றதும் மட்டுமல்லாமல் இழந்த விஷயங்களும் கூட நிறைய தான் இருக்கின்றன.
கடந்த சில வருடங்களாக நான் இழந்த விஷயங்களில் முக்கியமான ஒன்று…
இசை.
என் வாழ்க்கை முழுவதும் ஒரு இழையாய் இழைந்து வந்து கொண்டிருந்த இசையை நான் 2022 முதல் ரொம்பவே மிஸ் பண்ணினேன்.
நல்ல பாடல்களை கேட்கவே நேரமில்லை. அல்லது மனம் லயிக்கவில்லை.
இலக்கில்லாத ஓட்டமும், ஈடுபாடற்ற சிந்தனையும் இணைந்து இம்சித்ததில் இசை மெல்ல மெல்ல என்னை விட்டு விலகிப் போயிற்று.
போனதும் ஒரு நாள் வந்து தானே தீரும்.
அப்படித்தான் ஒரு சில மாதங்களுக்கு முன் மீண்டும் என்னிடம் வந்தது.
~
அன்று நான் தூங்கி எழுந்தது முதல் என்றோ மறைந்து போன இந்த 70களின் பாடல் மனம் முழுக்க ரீங்கரித்துக் கொண்டேயிருந்தது.
நான் இழந்தவைகள் ஒவ்வொன்றாக என்னிடம் திரும்ப வரும் என்ற பாஸிட்டிவ் உணர்வு எனக்குள் மீண்டும் முளை விட ஆரம்பித்தது.
இதோ, இந்தக் கணம் அவைகள் என்னிடம் மீண்டும் வருவதை உணர ஆரம்பிக்கிறேன்.
நன்றி இறைவா. 🙏
~
‘வீணை மீட்டும் கைகளே
மாலை சூட்டவா…’
https://youtu.be/Bc2l2-PeQvM?si=rr586RPolYdoGWnf
~
பிகு:
பாடலை பற்றிய சுபஸ்ரீ தணிகாச்சலத்தின் வர்ணனை ஆஹா… அருமை.



Comments
Post a Comment