கொஞ்சம் காபி - கொஞ்சம் மெமரீஸ் - 3
கொஞ்சம் காபி
கொஞ்சம் மெமரீஸ் - 3
சுறுசுறுப்பு:
காபியில் உள்ள காஃபின், விழிப்புணர்வையும் ஆற்றலையும் அதிகரிக்க உதவுகிறது.
மனநிலை:
காபி, மன அழுத்தத்தைக் குறைத்து, மகிழ்ச்சியான மனநிலையைத் தூண்டும்.
மூளையின் செயல்பாடு:
காபி, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, நினைவாற்றல் மற்றும் கவனத்தை அதிகரிக்க உதவும்.
உடல் ஆரோக்கியம்:
காபி, சில வகையான நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில ஆய்வுகள் காபி குடிப்பதால் அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நரம்பு மண்டல நோய்களின் அபாயம் குறைவதாகக் கூறுகின்றன.
~
கொஞ்சம் மெமரீஸ் :
பாட்டியும் ஞானும் பின்னே 'தன்மாத்ரா' வும்.
சில ஆண்டுகளுக்கு முன் :
ரொம்ப நாட்களாக பார்க்க நினைத்து ஒரு வழியாக பார்த்த திரைப்படம் "தன்மாத்ரா".
ஆனால் இந்த பதிவு அப்படத்தைப் பற்றியது மட்டுமே கிடையாது.
"தன்மாத்ரா" 2005ல் வெளிவந்த மலையாள படம். மோகன்லால், மீரா வாசுதேவன் நடித்த இப்படம் அந்த ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக தேசிய விருது பெற்றது. திரை விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் பரவலான பாராட்டுகளையும் பாசிடிவ் ரிவியூக்களையும் பெற்ற 'தன்மாத்ரா' கமர்ஷியலாகவும் ஒரு வெற்றி படமாக அமைந்தது.
இப்படத்தின் பேசுபொருள் 'அல்சைமர்' என்னும் ஒரு மறதி நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் ஞாபகங்களை மறந்து தங்கள் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களை, அவ்வளவு ஏன் தங்கள் குடும்பத்தினரை கூட மறந்து விடும் நிலைக்கு ஆளாகிவிடுவர்.
நல்ல அபாரமான ஞாபகசக்தி உள்ள மோகன்லால் இந்த நோயின் பாதிப்புக்கு ஆளாகும் போது வரின் பேவரிட் பாடலான பாரதியாரின் 'காற்று வெளியிடை கண்ணம்மா' வின் பாடல் வரிகள் மறந்து போகின்றன.
சாவியை நுழைத்துவிட்டு 'ஆன்' செய்யாமலேயே ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகவில்லை என்று மெக்கானிக்கிடம் வண்டியை தள்ளிக் கொண்டு செல்வார்.
வீட்டில் அடடண்ட் செய்வதற்காக ஆபிசிலிருந்து கொண்டு வந்த பைலை பிரிட்ஜுக்குள் பிரீஸரில் வைத்து விட்டு வீட்டையே தலைகீழாக கலைத்து போடுவார்.
காய்கறி வாங்க மார்க்கெட் செல்பவர் வீடு திரும்பும் வழி மறந்து ஆட்டோவில் ஏறி ஊர் முழுவதும் சுற்றிவிட்டு கடைசியில் ஆபிசுக்கு வந்தடைவார்.
வீடு என்று நினைத்துக் கொண்டு ஆபீஸிலேயே குளிக்க ஆரம்பிப்பார்.
படத்தின் முடிவு கல் மனசுக்காரர்களையும் கலங்கி அழவைத்துவிடும்.
படத்தை பார்க்கும் போது எனக்குள் ஒரு பிளாஷ் பேக்.
நான் மேல் நிலை பள்ளி படிப்பை மன்னார்குடியில் என் பாட்டி வீட்டில் தங்கி கொண்டு படித்தேன். பாட்டி தனிக்கட்டை. அங்குள்ள பிரபல பெண்கள் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றினார். தனக்குள் சில விதிகளை அமைத்துக் கொண்டு அதனை பின்பற்றியபடி வாழ்பவர் அவர். பாட்டி எப்போதுமே பரபரப்புடன் தான் காணப்படுவார். நிறைய ஞாபக மறதி வேறு.
ஒரு நாள் காலை பரபரப்பாக ஸ்கூலுக்கு கிளம்பி கொண்டிருந்தார். மணியாகி விட்டது. பாட்டிக்கு நேரம் தவறாமை ரொம்ப முக்கியமான ஒரு விதி. செருப்பை மாட்டிக் கொண்டு வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தவர் சில நிமிடங்களில் வேகவேகமாக வீட்டுக்குள் ஓடி வந்தார். அவர் பின்னாலேயே தெரு பெண்கள் இருவர் சிரித்துக்கொண்டே தொடர்ந்தனர்.
பாட்டியை பார்த்த நான் ஷாக் ஆகி விட்டேன். குடை என்று நினைத்து கொண்டு மூலையில் சாத்தி வைத்திருந்த விளக்குமாற்றை எடுத்துக் கொண்டு ஸ்கூலுக்கு கிளம்பியிருக்கிறார். தெரு பெண்கள் பார்த்து அவரை கேட்ட பின் தான் அதை கவனித்திருக்கிறார். உடனே வீட்டுக்கு திரும்பியிருக்கிறார்.
இதுபோல் நிறைய சம்பவங்கள் எனக்கு நினைவுக்கு வந்தன.
படம் பற்றிய நினைவுகளுடனேயே உறங்கி போனேன்.
மறுநாள் அலுவலகம். பரபரப்பான திங்கள் கிழமை காலை நேரம். மெயில் செக் பண்ணிக் கொண்டிருந்தேன். என் சேம்பரின் கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்த சார்நிலை அலுவலர் ஒருவர் மேஜை அருகில் வந்து நின்றார். ஏதோ சொல்ல காத்திருக்கிறார்.
இப்போ தான் அந்த 'சம்பவம்' நடந்தது.
தினசரி சந்திக்கும் அந்த அலுவலக நண்பரின் பெயர் எனக்கு டக்கென மறந்து போயிற்று. அவரிடம் பேசிக்கொண்டே அவர் பெயரை நினைவு படுத்தி பார்க்கிறேன். ம்ஹ்ம்... சுத்தமாக மறந்து விட்டேன். அவர் பேசி முடித்துவிட்டு செல்லும் வரை அவர் பெயர் என் நினைவுக்கு வரவில்லை.
அவர் சென்றபின் அவசரமாக மொபைலை எடுத்து ஆபீஸ் வாட்ஸப் குரூப்பில் செக் செய்து ஒரு வழியாக அவர் பெயரை கண்டுபிடித்தேன்.
படம் பார்த்த எபெக்ட்டா..? தற்செயல் நிகழ்வா..? அல்லது எனக்கும் 'அல்ஸைமர்' ஆரம்பமா.. ?
மை காட் 🥺
----------------
பி.கு:
முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன். பாட்டி தன் இறுதி காலத்தில் கிட்டத்தட்ட ஒரு வார காலம் எந்த/எவர் நினைவுமின்றி ஒரு குழந்தை போல் எல்லோரையும் பார்த்து சிரித்து, அழுது.. மரணத்தைப் பற்றிய பயம் ஏதுமின்றி புன்னகையுடன் இறைவனடி சேர்ந்தார்.



Comments
Post a Comment