கொஞ்சம் காபி கொஞ்சம் மெமரீஸ் - 2
கொஞ்சம் காபி
கொஞ்சம் மெமரீஸ் - 2
தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் சவுத் இந்தியன் பில்டர் காபி இப்பொழுது உலகளவில் பிரபலம் அடைந்துள்ளது. காய்ந்த காபி பொடியில் வெந்நீர் கலப்பதன் மூலம் கிடைக்கும் டிகாசனில் பால் கலந்து தயாரிக்கப்படுக்கின்றது. இது எல்லா வகை காபிக்களை காட்டிலும் சுவையாக இருக்கும்.
எண்ணெய் உற்பத்திக்கு அடுத்து உலகிலேயே இரண்டாவது மிகப் பெரும் வர்த்தக தயாரிப்பு இப்போது காஃபி தான்.
உலகெங்கும் அருந்தப்படும் மொத்த குடிநீரில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு காஃபி உலக மக்களால் அருந்தப்படுகிறது.
உலக அளவில் அதிக எண்ணிக்கையில் காஃபி அருந்துபவர்கள் அமெரிக்கர்கள். ஆண்டிற்கு 250 கோடி ரூபாயை காபி குடிப்பதற்காக செலவு செய்கின்றனர்.
அமெரிக்கர்களுக்கு அடுத்தப்படியாக, பின்லாந்த், ஸ்வீடன், நார்வே, டென்மார்க் உள்ளிட்ட நாட்டினர் காபி விரும்பிகளாக உள்ளனர்.
அமெரிக்காவில் இருக்கும் ஸ்டார் பக்ஸ் காபி ஷாப் தான் உலகத்தின் நம்பர் 1 காபிஷாப். இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 68 நாடுகளில் 25 ஆயிரம் ‘ஸ்டார் பக்ஸ்’ காபி ஷாப்கள் உண்டு. இதன் ஆண்டு விற்பனை19 பில்லியன் டாலர்கள். அதாவது இந்திய ரூபாயில்128 கோடி.
காபி குடிப்பதால் அல்சைமர், இதய நோய், ஈரல் நோய், கீல்வாதம், நீரிழிவு போன்றவற்றை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் சொல்கிறார்கள்.
~
கொஞ்சம் மெமரீஸ் :
மன்னார்குடி வெஸ்டர்ன் பள்ளியில் படித்த நாட்கள் ஏனோ நினைவுக்கு வந்தது.
காலை 09:15 மணிக்கு பிரேயர். பைபிளிலில் இருந்து கொஞ்சம் வரிகள். பின் கிறித்துவ ஸ்தோத்திரப் பாடல் ஒன்று. அதன் பின் ஒருமைப்பாட்டு உறுதிமொழி. கடைசியாக தேசியகீதம்.
ஸ்தோத்திரப் பாடல் பாடுவதற்கு துரைசாமி வாத்தியார் தலைமையில் நான்கு பசஙகள். துரைசாமி வாத்தியாருக்கு இசை ஞானம் உண்டு. பிற்காலத்தில் அவர் மகன்களுடன் இணைந்து ஆர்க்கெஸ்ட்ரா ஒன்றை சொந்தமாக வெற்றிகரமாக நடத்தி வந்தார்.
துரைசாமி வாத்தியார் பள்ளி பிரேயர் பாடல் பாடும் குழுவில் நானும் ஒரு நிரந்தர உறுப்பினர். என் தாயார் மற்றும் பாட்டி ஆகியோர் நல்ல சங்கீத ஞானம் உள்ள இசை குடும்பம் என்பதால் என்னையும் சேர்த்துக் கொண்டார் போலிருக்கிறது.
துரைசாமி வாத்தியார் ஒரு நாலைந்து பாட்டை எங்களுக்கு சொல்லி கொடுத்திருந்தார். அவற்றை தான் திரும்ப திரும்ப நாங்கள் பாடுவோம். அவை :
1. ஐயய்யா நான் வந்தேன் தேவ ஆட்டுக்குட்டி வந்தேன்....
2. தேவ பிதா எந்தன் மேய்ப்பனல்லோ....
3. சர்வலோகாதிப நமஸ்காரம்...
போன்றவை.
நிஜமாகவே ரொம்ப அற்புதமான பாடல்கள் அவை.
பாடிக்கொண்டிருக்கும்போது அவ்வப்போது கையை பிடித்து கிள்ளுவார். சில நேரங்களில் பலமாக கையை பிடித்து இழுப்பார். பாடும் குரலை கடுமையாக்கி கொள்வார்.
அதற்கு காரணம் நாங்கள் சுதி விலகி போகிறோமாம்.
ஒரு நாள் என் தாயார் எங்களை பள்ளியில் விட்டுவிட்டு ஓரமாக நின்று பிரேயரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அன்றும் துரைசாமி வாத்தியார் தன் சேஷ்டையை விடவில்லை. நான் கலக்கமாக அவ்வப்போது அம்மா முகத்தை பார்த்துக் கொண்டே பாடினேன்.
பிரேயர் முடிந்து கலைந்து சென்றுவிட்டோம். அம்மாவும் புறப்பட்டுவிட்டார்.
ஸ்கூல் முடிந்து மாலை வீடு சென்றேன். பிரேயரை பற்றி பேச்சு வந்தது.
சிரித்துக் கொண்டே அம்மா சொன்னார்,
நீங்க நல்லா தாண்டா பாடினீங்க துரைசாமி சார் குரல் தான் எங்கெங்கோ போயிட்டு வந்தது. சுதி சுத்தமா சேரலை என்றார்.
பாட்டியும் சேர்ந்து சிரித்தார்.
இருந்தாலும் துரைசாமி வாத்தியார் ரொம்ப நல்லவர். பசங்களை அடிக்கமாட்டார். அவை கூச்சம் இன்றி என்னால் ஓரளவு இன்றும் பாட முடிகிறது என்றால் அதற்கு அவர் தான் காரணம்.
அந்த நன்றி என்றும் என்னிடம் உண்டு.
~
சென்ற தீபாவளியை உறவினர்களுடன் கொண்டாடியபோது மாலை நேரத்தில் கரோக்கி பிளேயரில் மைக் வைத்துக் கொண்டு பாடல்கள் பாடினோம். காற்றினிலே வரும் கீதம் படத்தில் வரும் “ஒரு வானவில் போலே…” பாடலை நான் பாடினேன். செம கைதட்டல். கஸின் ரவி சொன்னார் “குமார் உங்க குரல் கிட்டத்தட்ட ஜெயச்சந்திரன் வாய்ஸ் போல் உள்ளது. நிறைய பாடி பயிற்சி எடுங்கள்” என்றார்.
செம மகிழ்ச்சியாய் இருந்தது. பாடல் பாடுவதை தொடர வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது இப்போது.
நேரமும் கிடைத்திருக்கிறது. 😊
~
துரைசாமி வாத்தியார் காலத்து நிகழ்வுகள் எல்லாம் பசுமையாய் நினைவில் இருக்கின்றன. ஆனால்,
ஸ்கூட்டரில் வீட்டுக்கு வரும் வழியில் தான் எந்த திருப்பத்தில் வண்டியை திரும்புவது என்பது அடிக்கடி மறந்து போய்விடுகிறது.



Comments
Post a Comment