கொஞ்சம் காபி - கொஞ்சம் மெமரீஸ் - 15

கொஞ்சம் காபி - கொஞ்சம் மெமரீஸ் - 15

Indian Coffee Cess Committee, பிந்தைய நாளில் Indian Coffee Board,  1936ல் மும்பையின் சர்ச்கேட் பகுதியில் முதல் இந்தியன் காபி ஹவுஸை ஆரம்பித்தது.

அதன் பின்னர் கிடுகிடுவென 50 க்கும் மேற்பட்ட பல்வேறு கிளைகள் நாடு முழுவதும் துவக்கப்பட்டன.


நன்கு நடைபெற்று வந்த இந்த காபி ஹவுஸ்கள் காலப்போக்கில் நட்டத்தில் செயல்பட ஆரம்பித்தன. அதன் தொடர்ச்சியாக Indian Coffee Board காபி ஷாப்களை மூடுவதற்கான வேலைகளை துவக்க ஆரம்பித்தது. 


இதன் காரணமாக வேலை இழக்கப் போகும் பணியாளர்கள் ஒன்றிணைந்து தொழிற்சங்கம் துவக்கினர். 


அப்போதைய கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரும், தொழிற்சங்கத் தலைவருமான திரு A.K. கோபாலன் அவர்கள் இப்பிரச்சினையை கையில் எடுத்தார். இது தொடர்பாக பிரதமர் ஜவஹர்லால் நேருவை சந்தித்தார்.


தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்தி அதன் வழியே இந்தியன் காபி ஹவுஸை தொடர்ந்து நடத்த உதவிடுமாறு நேருவை வலியுறுத்தினார்.


AK கோபாலனின் கோரிக்கையில் இருந்த நியாயத்தை ஏற்றுக் கொண்ட நேரு இந்தியன் காபி ஹவுஸை தொழிலாளர்  கூட்டுறவு சங்கமாக பதிவு செய்து தொடர்ந்து செயல்பட வழிகோலினார்.


பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வந்த இந்தியன் காபி ஹவுஸ்கள் தனித்தனி கூட்டுறவுச் சங்கங்களாக பதிவு செய்யப்பட்டன. 


1957ல் பெங்களூருவில் முதல் சங்கம் பதிவு செய்யப்பட்டது.


பின்னர் படிப்படியாக பாண்டிச்சேரி, திருச்சூர், பாலக்காடு, லக்னோ, புனே, மும்பாய், கொல்கத்தா போன்ற நகரங்களில் கூட்டுறவு சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 


இவற்றின் fedaral அமைப்பு புதுடில்லியில் துவங்கப்பட்டது.


Indian Coffee Houseகள் காபி மட்டும் அல்லாது மலிவு விலையில் சிற்றுண்டிகளும் வழங்கி வந்தன. 


பாண்டிச்சேரியில் பதிவு செய்யப்பட்ட சங்கம் சென்னையில் கிளைகள் துவக்கி செயல்பட்டு வந்தது.


ஏனோ, தமிழ்நாட்டில் இக்கூட்டுறவு சங்கங்கள் துவக்கப்படவில்லை. 


இந்தியன் காபி ஹவுஸ்கள் காபி, சிற்றுண்டியுடன் மற்றுமொரு முக்கியமான சேவையை நாட்டுக்கு செய்தது.


விடுதலைக்கு பின்னரான இந்திய வரலாற்றில் ஆகப் பெரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்திட  இந்திய காபி ஹவுஸ்கள் சிறப்பான பங்காற்றின. 


அடுத்த பகுதியில் அதை பர்க்கலாம்.

~


கொஞ்சம் மெமரீஸ் :


எண்பதுகளின் பிற்பகுதியில் நான் கோடம்பாக்கம் வள்ளியம்மாள் தோட்டத்தில் இருந்தபோது நண்பர் அவை நாயகன்  மூலம் ஒரு இளைஞனின் அறிமுகம் கிடைத்தது.

~


நெடு நெடுவென்ற உயரம். இந்தி நடிகர் போன்ற முகவெட்டு. நட்பான உடல்மொழி, வானுக்கு கீழ் உள்ள எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம். பெயர் பி.பி.ஆனந்த்.

~


ஆனந்தை என் பொறுப்பில் விட்டு விட்டு சென்றுவிட்டார் அவை நாயகன்.

~


ஆனந்த் உடன் வெளியே சென்றால் ஊரே எங்களைத் தான் பார்க்கும். அவ்வளவு கலகலப்பு. 

~


சென்னை வானொலி யில் முன்னாள் இயக்குனர் திரு. நடராஜன் அவர்களின் ஆதரவில் சிறு சிறு புரோகிராம்கள் தயாரித்து வழங்கிக் கொண்டிருந்தான் ஆனந்த்.


ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தான்.

~


ஒரு நாள் செண்டிமெண்ட்ஸ் பற்றி பேச்சு வந்தது. உடன் இருந்த நண்பர் ஒருவர் ஆனந்த் என்ற பெயர் அவ்வளவாக ராசியில்லாத பெயர். நீங்கள் பெயரை சற்று மாற்றிக் கொண்டால் ஓஹோ என்று வருவீர்கள் என்றார்.  நண்பன் யோசிக்கத் துவங்கினான்.

~


IPKF உடன் விடுதலைப் புலிகள் போராட்டத்தை துவக்கியிருந்த நேரம் அது. பாராசூட் மூலம் வன்னிப் பகுதியில் இறங்கிக் கொண்டிருந்த வீரர்களை மார்ட்டர் கொண்டு தரையில் இருந்து ஒரு புலிப் போராளி சுட்டு வீழ்த்திக் கொண்டிருந்தான். அந்தப் போராளியின் பெயர் கீதன். இந்த செய்தி இந்தியா டுடே வில் வந்திருந்தது.

~


நாங்கள் அப்போது புலி ஆதரவு நிலை எடுத்திருந்தவர்கள். இந்த செய்தியை கபால் என்று பிடித்துக் கொண்டோம்.


அந்த தருணத்தில் பி.பி.ஆனந்த்,  ஆனந்த் கீதன் ஆகி விட்டான்.

~


பெயர் மாறியதும் செண்டிமெண்ட் டும் ஒர்க் அவுட் ஆகத் துவங்கியது. நானும் பணி மாறுதலில் மன்னார்குடி சென்று விட்டேன்.

~


தூர்தர்ஷன் மட்டுமே கோலோச்சிய நேரத்தில் சன் டிவி யின் தமிழ் மாலை சின்னத் திரையில் தெரியத் துவங்கியது.


ஆனந்த கீதனுக்கு வாய்ப்பு வாசக்கதவை தட்டியது. சன் டிவியில் வார்த்தை விளையாட்டு என்றொரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து வழங்கினான். 


பிரபலம் ஆனான். தொன்ணூறுகளில் டிவி நிகழ்ச்சிகள் பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக ஆனந்த கீதனைத் தெரிந்திருக்கும்.

~

பின்னர் திருமணம் ஆனது. சிங்கப்பூர் தொலைக்காட்சியில் வேலை கிடைத்தது. 


குடும்பத்துடன் சிங்கப்பூரில் மகிழ்ச்சியாக வாழ்கிறான் என்று எண்ணிக் கொண்டு தான் இருந்தேன்.

~


இவ்வளவு அவசரம் ஏன் நண்பா. வார்த்தை விளையாட்டு போல் வாழ்க்கையையும் விளையாட்டாக்கி விட்டு மறைந்து விட்டாயே.

😒


Comments