கொஞ்சம் காபி - கொஞ்சம் மெமரீஸ் - 14
கொஞ்சம் காபி - கொஞ்சம் மெமரீஸ் - 14
அந்த காலக் கட்டத்தில் மெட்றாஸ் மாகாணத்தை சேர்ந்த காங்கிரஸ்காரர் ஒருவர் மகாத்மா காந்தியிடம் புகார் மனு ஒன்று அளித்தார்.
அதில் சென்னையின் பிராமணப் பெண்கள் ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறை காபி அருந்துகிறார்கள் என்றும் அதை நாகரீகமாக கருதுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதில் பிரச்சினை காபி அருந்துவதில் இல்லை. பெண்கள் காபி அருந்துவது தான் பிரச்சினை.
இது போன்ற புகார்களையும் மீறி தான் காபியின் புகழ் பரவியது.
1936ல் மும்பையின் சர்ச்கேட் பகுதியில் முதல் இந்தியா காபி ஹவுஸ் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் மூலம் இந்தியாவின் காபி மீதான காதலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டது.
Indian Coffee Cess Committee ஆல் தொடங்கப்பட்ட இந்தியா காபி ஹவுஸ் நாடெங்கும் 50 க்கும் மேலான கிளைகளுடன் கிடுகிடுவென வளரத் தொடங்கியது.
இந்த காபி ஹவுஸ் சங்கிலித் தொடர் பிந்தைய நாளில் தொழிலாளர் கூட்டுறவு அமைப்பு ஆக உருமாறி இந்திய காபி தொழிலாளர் கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் நாடெங்கும் பரந்து விரிந்தது ஒரு சுவாரஸ்யம்.
அதை நாளை பார்க்கலாம்..
சென்னையிலும் தி நகர் உள்ளிட்ட இடங்களில் இந்தியா காபி ஹவுஸ் செயல்பட்டது. அதில் காபி டிபன் சாப்பிட்ட அனுபவம் இருக்கிறதா உங்களுக்கு ?
இருந்தால் சொல்லுங்களேன்.
~
கொஞ்சம் மெமரீஸ் :
நான் சிறுவனாக இருந்த காலத்தில் மைதீன் டாக்டர் தான் எங்கள் குடும்ப டாக்டர். மைதீன் டாக்டர் RIMP தான். ஆனாலும் MBBS டாக்டர் ஐ விட எங்கள் பகுதியில் புகழ் வாய்ந்தவர். எந்த நோயாக இருந்தாலும் ஒரே ஒரு ஊசி தான். நோய் பறந்துவிடும். மாத்திரைகளையும் அவரே கொடுத்துவிட்டு செல்வார். கைராசி டாக்டர் என்று எங்கள் பகுதியில் பெயர் வாங்கியவர்.
யாருக்காவது உடம்பு சரியில்லை என்று அவருக்கு தகவல் தெரிவித்துவிட்டால் போதும். சைக்கிளை எடுத்துக் கொண்டு தனது மெடிக்கல் கிட் உடன் கொஞ்ச நேரத்தில் அந்த வீட்டில் ஆஜராகிவிடுவார்.
எனக்கு உடம்பு சரியில்லாமல் போகும் ஒவ்வொரு முறையும் ஊசி போட்டுக்கொள்ள பயந்து நான் வீட்டை சுற்றி சுற்றி வந்திருக்கிறேன். அவரும் விடாமல் என்னை துரத்தி துரத்தி ஊசியை போட்டுவிட்டு தான் போவார்.
வீட்டுக்கு வரும்போதெல்லாம் கொள்ளுப்பாட்டி, பாட்டி, அம்மா எல்லோரிடமும் அன்பாக பேசிவிட்டு தான் போவார்.
மைதீன் டாக்டர் ஒரு பன்முக திறமைசாலி. மருத்துவம் ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் நன்றாக மேடை பேச்சு பேசும் திறமை உள்ளவர். எங்கள் பகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மைக்கை பிடித்துக் கொண்டு பேச ஆரம்பித்துவிடுவார். கட்சி மேடைகளிலும் காணமுடியும் அவரை. கவுன்சிலர் எலக்ஷனில் கூட ஒருமுறை நின்று தோற்றிருக்கிறார்.
நன்கு பாடவும் கூடியவர். சாயிபாபா மீது மிகுந்த பக்தி உடையவர். சாய் பஜனைகளில் அவரை அவ்வப்போது காணலாம். அவர் வீட்டில் கூட சாய் பஜன்கள் நடத்தியிருக்கிறார். அவருக்கு இந்து முஸ்லீம் வேறுபாடுகள் எல்லாம் அறவே கிடையாது.
பள்ளிவாசலுக்கு போவது போலவே மாரியம்மன் கோவிலுக்கும் போவார். அவர் மருத்துவம் பார்க்கும் க்ளினிக்குக்கு சத்யா க்ளினிக் என்றே பெயர் வைத்திருந்தார். அவர் பெண்ணிற்கு கூட சாய் என்று பெயரில் வருகிற மாதிரி சாய்ரா பானு என்றே பெயர் வைத்திருந்தார்.
மாலை போட்டு 48 நாட்கள் விரதமிருந்து பெரிய பாதையில் ஒரு முறை சபரி மலைக்கு சென்று வந்தார். ஜமாத்தில் கூட்டம் போட்டு அவரை மதத்தை விட்டே விலக்கி வைத்தனர். பிறகு ஜமாஅத் திடம் மன்னிப்பு கோரி மீண்டும் இஸ்லாத்தில் இணைந்து கொண்டார்.
இப்பேற்பட்ட மைதீன் டாக்டர் வெறும் மருந்து மாத்திரை கொடுத்து ஊசி போடும் டாக்டர் மட்டுமேயல்ல. அவரை அதற்கு மட்டுமே எல்லோரும் தேடி வருவதில்லை.
அவர் வீட்டு வாசலில் எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டேயிருக்கும். அக்கூட்டத்தில் சாதாரண ஏழை ஜனங்களும் இருப்பார்கள். வசதியான வீட்டு ஆட்களும் இருப்பார்கள்.
அவர்கள் எல்லோரும் மருத்துவத்திற்காக மட்டுமே அங்கு வருவதில்லை.
மைதீன் டாக்டரும் மருத்துவம் மட்டுமே பார்ப்பவர் அல்ல.
அவர் கிளினிக்கில் வரிசையாக அனைத்து மத கடவுளர்களின் படங்களும் மாட்டப்பட்டிருக்கும். ஒரு தட்டு நிறைய விபூதி கொட்டி வைக்கப்பட்டிருக்கும்.
ஸ்டெத், BP அப்ப்ரெட்டஸ் உடன் வேப்பிலைக் கொத்து ஒன்றும் அவர் டேபிளின் ஓரத்தில் இருக்கும்.
காத்து, கருப்பை பார்த்து பயந்தவர்களுக்கு மந்திரித்து விடுவார். கைக் குழந்தைகளுக்கு பாத்தியா சொல்லி ஊதி விடுவார். தேவைப்படுபவர்களுக்கு தாயத்து மந்திரித்து கட்டிவிடுவார். பில்லி சூனியம் ஆகியவற்றில் இருந்து காத்துக்கொள்ள தகட்டில் மந்திரம் எழுதி கொடுப்பார்.
நம்பிக்கையுடன் நிறைய பேர் இவற்றிற்காக அவரை தேடி வருவார்கள்.
அவரின் சக்ஸஸ் ரேட் 100% ஆகவே தான் எப்போதும் இருந்தது.
வாழ்க்கை எப்போதுமே சுவாரஸ்யமான மனிதர்களுடன் தான் நம்மை பயணிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
~
😊



Comments
Post a Comment