கொஞ்சம் காபி - கொஞ்சம் மெமரீஸ் - 13

கொஞ்சம் காபி - கொஞ்சம் மெமரீஸ் - 13

காபியில் பலவகை உண்டு. 

என்ன தான் காபி என்னும் பானம் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தாலும் அதை நமது பாரம்பரியத்திற்கேற்ப கஸ்டமைஸ் செய்து கொண்டது இருக்கிறதே.. just amazing.


முதலில் சொன்ன பலவகையில் ஒருவகை காபியில் இனிப்பிற்காக வெள்ளை சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்ப்பது.


குடும்ப சூழ்நிலை காரணமாக மயிலாடுதுறையில் என் அம்மாவின் சித்தப்பா வீட்டில் ஏழாவது படிக்கும் போது ஒரு வருடம் தங்கி படிக்க நேர்ந்தது. 


என் அம்மாவின் சித்தப்பா ரெயில்வேயில் வேலைபார்த்தார். என்ன சூழலோ தெரியவில்லை அந்த குடும்பம் வறுமையில் உழன்று கொண்டிருந்த நேரம் அது.


அந்த நேரம் பார்த்து என்னையும் அவர்களிடம் இருக்க சொல்லி விட்டுவிட்டார் என் அம்மா.


என் செலவுக்கான பணத்தை மாதாமாதம் அம்மா கொடுத்தாலும் அவர்களுக்கு அது போதவில்லை.


அம்மாவின் சித்தப்பாவிற்கு ஊரை சுற்றி நிறைய கடன். சம்பள நாள் அன்று அவர் வேலை பார்த்த லோகோ ஷெட்டில் இருந்து சம்பளத்துடன் வெளியே வந்தால் வீடு வருவதற்குள் எல்லா பணமும் கடன்காரர்களுக்கு கொடுப்பதற்கே சரியாகிவிடும்.


ரொம்ப கஷ்டப்பட்டோம்.


அங்கு தான் முதன் முதலில் காபியில் சர்க்கரைக்கு பதிலாக அச்சு வெல்லத்தை நசுக்கி போட்டு தண்ணீரில் கொதிக்க விட்டு காபியில் அந்த வெல்லப்பாகை கலந்து குடிப்பதை முதன்முதலாக பார்த்தேன். 


மன்னார்குடியில் ராஜபோகமாக பிரெஷ் பால், முதல் டிகாக்‌ஷன் அளவான வெள்ளை சர்க்கரை என்று காபி சாப்பிட்ட எனக்கு இது வித்தியாசமாக இருந்தது.


விறகு அடுப்பு, நிறைய தண்ணீர் விட்டு டைல்யூட் செய்யப்பட்ட பால், சிக்கரி சரிபாதி அளவுள்ள காபித்தூள், இவைகளுடன் வெல்லப்பாகு கலந்த காபி. ருசியாகவே இருந்தது. 


வேற லெவல். 


நான் மயிலாடுதுறையில் இருந்த ஒரு வருடமும் தினசரி இந்த காபி தான். 


மயிலாடுதுறை எனக்கு வாழ்க்கையில் நிறைய அனுபவங்களைக் கற்றுக் கொடுத்தது. 


சினிமா, அரசியல், நட்பு, ஸ்கூலிங், வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் தாக்குபிடித்து நிற்பதற்கான மனோபலம் என எல்லாவற்றுக்கும் அந்த ஒரு வருடம் தான் ஆரம்ப புள்ளியாக இருந்தது.


ரொம்ப நாள் கழித்து சென்னையில் ஒரு காபி ஜாயிண்ட்டில் பில்டர் காபிக்கு ஆர்டர் செய்தபோது,


“சார், வெள்ளை சர்க்கரையா, நாட்டுச் சர்க்கரையா, கருப்பட்டியா எது வேண்டும்…”


என பேரர் கேட்டபோது மயிலாடுதுறை ஞாபகம் வந்தது.


மெல்ல ஒரு புன்சிரிப்புடன் நாட்டுச் சர்க்கரை என்றேன்.


ரொம்பவே நன்றாக இருந்தது.


வெல்லம் போட்ட காபியும் ஒருமுறை குடிக்கவேண்டும். 

😊


கொஞ்சம் மெமரீஸ் :


எமர்ஜென்சி காலத்தில் இந்திராவின் 20 அம்சத் திட்டம் வேகமாக  இந்தியாவெங்கும் அமுல்படுத்தப்பட்டது. 


வானொலியை திறந்தாலே 20 அம்சத் திட்டம் என்ற சொல் தான் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருந்தது.


இந்த நிலையில் எங்களின் ஒரே ஆறுதல் இலங்கை வானொலி தான். 


எமர்ஜென்சியின் இறுதிக் காலத்தில் நான் மயிலாடுதுறை கூறைநாடு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். 


கணக்கு ஆசிரியர் சாம்பசிவம், வகுப்பு ஆசிரியர் ஆல்பர்ட் அனைவரும் எமர்ஜென்சி ஆதரவாளர்கள். 


வீட்டில் எனது சித்தப்பா குடும்பத்திலும் அனைவரும் இந்திராவின் ஆதரவாளர்க்ளாக இருந்தனர்.


ரயில்வேயில் வேலை பார்த்த அவர் அப்போது நடைபெற்ற ரயில்வே வேலைநிறுத்ததில் பங்கு கொள்ளவில்லை. 

~


நடிகர்திலகம் சிவாஜி எமர்ஜென்சி ஆதரவாளராக இருந்தார். 20 அம்சத் திட்டத்துக்கு ஆதரவாக 'அவன் ஒரு சரித்திரம்' படத்தில் நடித்தார். படத்துக்கு வரிவிலக்கு கிடைத்தது. இளைய தலைமுறை என்று மற்றொரு எமெர்ஜென்சி ஆதரவு படத்திலும் நடித்தார். படு மொக்கையான இரண்டு படங்களையும் சுந்தரம் தியேட்டரில்  பார்க்க வேண்டிய துரதிர்ஷ்ட நிலை எனக்கு ஏற்பட்டது.


எமெர்ஜென்சிக்கு பின் நடந்த பொதுத் தேர்தலில் தென் இந்தியா இந்திராவின் பின் தான் நின்றது. ரேபரேலியில் தோற்ற இந்திரா கர்நாடக சிக்மகளூரில் மீண்டும் நின்று வெற்றி பெற்றார்.


முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் அன்று அரசியல் அறியாத அந்த வயதில் நான் ஜனதாவை ஆதரித்தேன். 


ஜார்ஜ் பெர்ணாண்டஸ் தான் என் ஹீரோ அப்போது.  


இன்று யோசித்துப் பார்த்தால் அதன் காரணம் என்ன என்பதே புரியவில்லை.

~


Comments