கொஞ்சம் காபி - கொஞ்சம் மெமரீஸ் - 11

கொஞ்சம் காபி

கொஞ்சம் மெமரீஸ் - 11


நான் ஹைஸ்கூல் போன காலத்தில் தான் காபி பொடி வறுத்து அரைத்து சிக்கரி கலந்து கடையிலேயே வாங்கி வரும் வழக்கம் வந்தது.


அதற்கு முன்னர் நன்கு நினைவில் இருக்கிறது. வீட்டில் ஒரு பெஞ்ச் இருக்கும். பெஞ்ச்சின் ஓரத்தில் ஒரு கையால் சுற்றும் காபி கொட்டை அரவை எந்திரம் பொருத்தப்பட்டிருக்கும்.


மன்னார்குடி சுதர்சன் காபியில் கால் கிலோ A காபிக் கொட்டை பாட்டி வாங்கி வருவார். 


பாட்டியின் அம்மா ஆச்சி பாட்டி காபி கொட்டையை கரி அடுப்பில் இரும்பு சட்டியில் நன்கு வறுப்பார். வறுக்கும்போது காபி வாசனை வீடு முழுக்க கமகமக்கும். 


பென்ச்சில் பொருத்தப்பட்டிருக்கும் அந்த அரவை மிஷினில் கொஞ்சம் கொஞ்சமாக போடுவார். நானும் என் தம்பியும் அதை கையால் சுற்றுவோம்.


சுற்ற சுற்ற கொரகொரவென காபி தூள் கீழே வைக்கப்பட்டிருக்கும் அலுமினிய டப்பாவில் விழும். 


அந்த வாரத்திற்கான காபித் தூள் ரெடி ஆகிவிடும். 


அந்த காபி தந்த வாசனையும்  ருசியும்  இன்னும் மறக்கவில்லை. 


இந்திய கிரிக்கெட்டின் ஐகான் விராட் கோலி ஒரு காபி அடிக்ட். அவரே ஒப்புக் கொண்டுள்ளார் இதை. 


பாலிவுட்டில் ஷாகித் கபூர், மிருனால் தாக்கூர், அனன்யா பாண்டே, சாரா அலிகான், சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோரும் காபி பிரியர்கள். 


கல்கி கிருஷ்ணமூர்த்தி, சுஜாதா ஆகியோர் காபி தயாரிக்கும் அனுபவத்தை தங்கள் எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

~


கொஞ்சம் மெமரீஸ் :


வார, மாத இதழ்கள் தான் முதன்முதலில் எனக்கு படிக்கும் ஆர்வத்தை சிறு வயதில் ஊட்டியவை.


எலிமெண்டரி ஸ்கூல் படிக்கும்போது குமுதம், ஆனந்த விகடன், கல்கி போன்றவைகளை ஸ்கூல் விட்டு வரும்போது கடைகளில் இருந்து வீட்டுப் பெரியவர்களுக்கு வாங்கி வரும் வேலை தான் முதலில் செய்தேன். 


வீடு வரும் வழியிலேயே அவைகளைப் புரட்டி படங்களைப் பார்க்கும் வழக்கம் இருந்தது இப்போதும் நினைவில் இருக்கிறது. கூடவே வாசனையையும் முகர்ந்து பார்த்துக் கொண்டே வருவேன். புது புத்தகங்கள் தரும் வாசனை அலாதியாக இருக்கும். 


~


மயிலாடுதுறையில் ஏழாம் வகுப்பு படிக்கும் போது என் வயதையொத்த என் சித்தி பையன் கிருஷ்ணனிடம் குமுதம் வாங்கி வரச் சொல்லி காசு கொடுத்தனுப்பினார் என் அம்மா. அவன் குமுதம் வாங்கிவிட்டு மீதம் சில்லறையைக் கொடுத்தான். எண்ணிப் பார்த்த என் அம்மா என்னடா காசு குறைகிறது என்றதற்கு ஐம்பது காசு புக். மீதி ஐம்பது காசு இதோ என்றான். அப்போது குமுதம் விலை முப்பத்தைந்து காசுகள் தான். அம்மா அட்டையில் விலையைப் பார்த்தபோது முப்பத்தைந்து பைசாவை பேனாவால் அடித்துவிட்டு மேலேயே ஐம்பது பைசா என்று திருத்தியிருந்தான். 15 காசுக்கு பால் ஐஸ் வாங்கி சாப்பிட்டிருந்தான்.


அந்த வயதிலேயே அப்படி இருந்த அவன் வளர்ந்தபின் நிஜமாகவே வீட்டின் மேலே மண்ணெண்ணெய் டின்னுடன் ஏறி பணம் தரவில்லை என்றால் வீட்டை கொளுத்திவிடுவேன் என்றான். இத்தனைக்கும் வாடகை வீடு அது.


அது தனிக்கதை. “கிருஷ்ண லீலா” பற்றி நிறைய எழுதலாம் அல்லது திரைப்படம் கூட எடுக்கலாம். அவ்வளவு மேட்டர்கள் இருக்கின்றன. 


நேற்று இரவு உறவினர்களுடன் அவன் வாழ்ந்த “வரலாற்றை” பற்றி பேசிக் கொண்டிருந்தோம். 


நிற்க. நினைவு எங்கெங்கோ போய்விடுகிறது. 


குமுதம் தான் நான் முதன் முதலில் ஆர்வத்த்துடன் படிக்கத் துவங்கிய இதழ். 


அஞ்சு பைசா அம்மு மற்றும் ஆறு வித்தியாசங்கள் தான் பேவரிட் பகுதிகள்.


இப்போது எந்த புத்தகமும் காசு கொடுத்து நான் வாங்கிப் படிப்பதில்லை. நிறைய புத்தகங்களை வாங்கி வெறி வந்ததுபோல் படித்துக் கிழித்த நான் ஒரு நேரத்தில் மனச்சோர்வடைந்து புத்தகங்கள் வாங்குவதை படிப்படியாக நிறுத்தி விட்டேன். வார, மாத இதழ்கள் படிப்பதை நிறுத்தி வருடங்கள் ஆகின்றன.

~


படிப்படியில் கடைசி படி குமுதம் தான்.



Comments