கொஞ்சம் காபி - கொஞ்சம் மெமரீஸ் - 10

கொஞ்சம் காபி - கொஞ்சம் மெமரீஸ் - 10


நேற்று நடைபெற்ற விழாவில் உணவு பிரமாதமாக இருந்தது என்று விழாவிற்கு வந்தவர்கள் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. 

காபி யும் ரொம்ப அருமையாக இருந்தது. 


மண்டபத்திலேயே காபி, டீ, ஹார்லிக்ஸ், பூஸ்ட் க்கு என சின்ன ஸ்டால் ஒன்றை அமைத்திருந்தனர். கேஸ் அடுப்பு வைத்து சுட சுட தயாரித்து வழங்கி வந்தனர்.


நம் குழுவில் ஏற்கனவே டிகாக்‌ஷனில் சர்க்கரை கலப்பது பற்றிய கருத்துகள் பரிமாறப்பட்டிருந்ததால் அவர்களிடம் நான் அதைப் பற்றி கேட்டேன்.


அவர்கள் டிகாக்‌ஷனில் சர்க்கரை கலப்பதில்லை என்றும் ஆனால் திக்னெஸ் க்காக கொஞ்சம் இன்ஸ்டண்ட் காபித் தூள் கலப்பதாகவும் தெரிவித்தனர். 


காபித்தூள் கோத்தாஸ் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தனர். 


நான் பெங்களூரு காபி பற்றி ஏற்கனவே பதிவு செய்திருந்தேன். அங்கும் பெரும்பாலான காபி ஷாப் களில் “கோத்தாஸ்” காபி தான் பயன்படுத்துகின்றனர்.


சில இடங்களில் Bayer காபித் தூள் பயன்படுத்துவதையும் பார்த்தேன். 


“லூலு” மால் food court இல் செயல்படும் 

பெங்களூரின் மிகச் சிறந்த MTR அரங்கில் “Rise up” காபித் தூள் பயன்படுத்தப்படுகிறது.


நான் இரு வருடங்களுக்கு முன் சிக்மகளூரில் Rise up காபி ஷாப்பில் அவர்களின் சொந்த தயாரிப்பான Rise up காபித் தூள் பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்படும் காபி பருகியிருக்கிறேன். 


அற்புதமான காபி அது. சிக்மகளூரூவில் பயிரடப்படும் ரொம்ப பிரஷ் ஆன காபி கொட்டை தூளாக் தயாரிக்கப்படுகிறது.


Online லும் கிடைக்கிறது. WhatsApp செய்தாலும் பக்காவாக பேக்க்ங் செய்து கூரியரில் அனுப்புகிறார்கள்.


நான் அவ்வப்போது Rise up காபி கூரியர் மூலம் வாங்குவதுண்டு.


அவர்களிடம் பேசும்போது தமிழ் நாட்டிலிருந்து நிறைய ஆர்டர் வருவதாக தெரிவித்தார்கள். 


குறிப்பாக கும்பகோணத்திலிருந்து என்று அவர்கள் தெரிவித்ததும் எனக்கு தோன்றியது,


“அய்யோடா”. 


சில காபித்தூள் கடையை கிராஸ் செய்யும்போது காபி வாசனை ஆளைதூக்குவதை நாம் பார்த்திருக்கலாம். 


கடைகளில் மட்டும் தான் வாசனை வருகிறது. மணத்தை சிலாகித்து காபித் தூள் வாங்கிகொண்டு போனால் மண் மாதிரி இருக்கிறது அது.


வெளியே சுண்டியிழுக்கும் வாசனையை நம்பி காபித் தூள் வாங்கவே கூடாது. 

~


கொஞ்சம் மெமரீஸ் :


தோழர்



தோழர் ஒன்றும் பெரிய வி.ஐ.பி மனிதர் எல்லாம் இல்லை.  நாம் அன்றாடம் சந்திக்கும் எத்தனையோ சாதாரண மனிதர்கள் போலவே அவரும் ஒரு சர்வ சாதாரண மனிதர். 


ஆனாலும் அவர் எனக்கு ரொம்ப முக்கியமானவர். 


அவரைப் பற்றி கொஞ்சம். 


சோஷலிசமும் கம்யூனிசமும் இப்போது தோற்றுப்போன ஒரு கருத்தியல்.  ஆனால் தோழர் பிறந்து வளர்ந்த காலகட்டத்தில் கம்யூனிஸம் கிட்டத்தட்ட ஒரு பொன்னுலகை காணப்போகும் கனவை மக்களிடம் ஏற்படுத்தி வைத்திருந்தது. 


கம்யூனிசம் இந்தியா முழுதும் தடை செய்யப்பட்டிருந்த காலம் அது. தென் தமிழகத்தின் ஒரு சிற்றூரில்  ஆச்சாரமான,  இசையை நேசிக்கும்,  வைதீக  குடும்பம் ஒன்றில் பிறந்து மெட்ரிகுலேட் வரை பயின்றவர்.  தனது ஆழ்ந்த வாசிப்பின் மூலமும்  தர்க்க ரீதியான தீவிர  விவாதங்களின் மூலமும் கம்யூனிசத்தை அறிந்துகொண்டு  பொதுவுடைமையை  வாழ்க்கையின்  கொள்கையாக வரித்துக் கொண்டவர் நம் தோழர். 


மின்சாரம் மற்றும்  தகவல் தொடர்பு வசதிகளற்ற  அந்த காலத்தில்  கம்யூனிஸ்டுகளின் ஆதர்ச தலைவர்கள் பலருடனும் அவர்  கடிதப் போக்குவரத்து மூலம் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியிருந்தார். 


பிந்தைய நாளில் இடதுசாரி அரசியலில் அசைக்க முடியாத  சக்தியாக விளங்கிய ஜோதிபாசு,  நம் தோழருடன் தொடர்ச்சியான கடிதத் தொடர்பில் இருந்தவர்களில்  முக்கியமானவர்.  வங்கத்தின் சாளரம் வழியாக ரஷ்யாவையும், சீனாவையும் தோழர் பார்த்தார். 


தோழர்  வளர்ந்த காலத்தில் அக்ரஹாரத்தில் இருந்த கம்யூனிஸ்ட்டுகள்,  தாம் சார்ந்த சமூகத்தின் சக மக்களால் அந்நியராக பார்க்கப்பட்டனர். அவ்வாறே  தோழரும் அந்நியரானார். அவர் சார்ந்த கொள்கை காரணமாக சமூக தீண்டாமை அவர் மேல் அக்ரஹாரவாசிகளால் ஏவிவிடப்பட்டது. ஆனாலும் அவர் சமூகத்தின் உள்ளிருந்தபடியே அவர்களுக்காகவும் போராடிக் கொண்டிருந்தார்.


ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபது மற்றும் எழுபதுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகளின் எழுச்சிக்கு தன்னால் ஆன  பங்கை அவர் ஆற்றினார்.  பின்னர் ஏற்பட்ட துன்பியல் நிகழ்வுகள் மற்றும் அதை தொடர்ந்த தீவிர காவல்துறை நடவடிக்கைகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய நிலைக்கு தோழர் தள்ளப்பட்டார். 


இயக்கத்துடனான தோழரின்  தீவிர செயல்பாடுகள் அவரை சாமான்ய வாழ்வியலில் இருந்து விலக்கி வைத்தது. இயக்கத்தின் மூலம் வளர்ந்த அவரின் மேதைமை மற்றவர்களுக்கு பித்துக்குளித்தனமாக தெரிந்தது. அவரின் குடும்பம் அவரைப் பிரிந்தது. சின்னஞ்சிறு குழந்தைகளுடன் தோழரின் மனைவி  இந்த மனிதருடன் இனி குடும்பம் நடத்த முடியாது என்று தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இருந்தபோதிலும் தோழர்  தன சகாக்களுடன் தான் பயணிக்க வேண்டிய பாதையிலும் பயணத்திலும் தெளிவாக இருந்தார். 


சக தோழர்கள்  ஈ எம் எஸ், ஜோதிபாசு, ஜீவானந்தம், ராமமூர்த்தி, முதல்  டபிள்யு ஆர் வரை எல்லோருடனும் சகபயணியாக பயணித்தார். 


தோழரின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். சாமானிய உழைக்கும் மக்களுக்காக அவர்களின் போராட்டங்களையும், கோருகின்ற நிவாரணங்களையம் கோரிக்கையாக அதிகார வர்க்கத்துக்கு விண்ணப்பங்கள் வாயிலாக தெரிவித்து,  அவற்றை அவர்களுக்குப்  பெற்று தர தனது எழுத்தின் வலிமையை பயன்படுத்தியிருக்கிறார். 


குழந்தைகள் என்றால் தோழருக்கு  மிகவும் பிடிக்கும். அவர்களுக்காக தரையில் ஓவியங்கள் வரைவார். ஓவியங்களை அறிவியல் காரணங்களுடன் சுவாரஸ்யமாக கதை சொல்லி விளக்குவார். Inter active platform என்று இன்று நாம் சொல்லக்கூடிய கல்வியியல் செயல்பாட்டை அன்றே செய்து காட்டினார்.


அனைவரையும் அன்பால் அரவணைத்து ஒன்றாய் இருக்க, வாழ வேண்டும் என்று விரும்பிய தோழருக்கு அவர்  குடும்பம் அவர் கண் முன்னேயே  உடைந்ததைக் காண நேரிட்டது மாபெரும்  சோகம்.


உடைந்த குடும்பத்தை ஒன்றிணைக்க முயற்சித்தார். தனது மனைவி, குழந்தைகளை அடிக்கடி சென்று பார்த்தார். ஆனாலும் பலன் ஏதுமில்லை. ஒரு தருணத்தில் அவரின் வருகை தடை செய்யப்பட்டது. கால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு தனிமையின் கரையில்  ஒதுங்கினார். 


வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்தார்.  தோழரின் குழந்தைகள் நன்கு படித்து நல்ல நிலைக்கு வந்தனர். அவர்களுடனான பெரிய தொடர்புகள் ஏதுமற்ற தோழர் ஏழ்மையில் உழன்றார். இருந்தபோதிலும் கொள்கை பிடிப்பை விடவில்லை. நியாய விலைக்கடைகளில் நேர்மையான செயல்பாடுகளை வலியுறுத்தி இடதுசாரி  அமைப்புகள்  சார்பாக நடைபெற்ற போராட்டங்களில் சாமானிய மக்களுடன் இணைந்து செயலாற்றினார். 


வாழ்வின் இறுதி வரை போராடினார். சிறு விபத்தொன்றில் தலையில் அடிபட்டு மரணத்துடனும் போராடினார். மரணம் யாரிடமும் தோற்காது. தோழரையும் வென்று தன்னுள்ளே இருத்திக் கொண்டது. 


தோழர் மரணமடைந்து சில  ஆண்டுகளுக்குப் பிறகு நாகப்பட்டினத்தில் நான் பணியாற்றிய காலத்தில் அங்கு நான் சந்தித்த ஒருவர் தானும் தோழரும் மேலும் சிலரும் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளின் துவக்கத்தில் இளைஞர்களுக்கான இடதுசாரி அமைப்பு ஒன்றை துவக்குவதில் ஆற்றிய பெரும் பங்கினைப் நினைவு கூர்ந்தார்.  


இன்று அந்த அமைப்பு DYFI எனும் பெயரில் நாடெங்கிலும் கிளை பரப்பி  நிற்கிறது. 


தோழரிடமிருந்து தான் கற்ற பாடம் இவை என தோழருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்ற முன்னணி வழக்கறிஞர் ஒருவர் சிலவற்றைத்  தெரிவித்தார், 


புன்னகையுடன் நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளுதல்.


தம் தவறுக்கு யாரையும் பொறுப்பாக்காதிருத்தல் 


எதிரியாகவே இருந்த போதிலும் கூட  உண்மையான அன்பு மூலம் அவரையும் தம்முடன் இணைத்துக்கொள்ளுதல்.


இவை தான் அவை.


தோழரின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது எனக்கும் நிறைய இருக்கிறது, கம்யூனிசத்தை தவிர.


ஏனெனில் நான் ஓரளவிற்கு அதனைக் கற்று நடமுறை சாத்தியமில்லை என்பதை அனுபவத்தில் தெளிந்து எனது பயணத்தை எதிர் திசையில் அமைத்துக் கொண்டேன்.


ஒரு வலதுசாரியாய் இன்று நான் இருக்கிறேன். 


இருந்தாலும் அந்த விடாப்பிடியான கொள்கை பிடிப்பை கண்டு நான் வியந்துகொண்டு தான் இருக்கிறேன்.


தோழர் யார் என்று அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா?


தோழர் GBS என்று வாழ்ந்த காலத்தில் சக தோழர்களால் விளிக்கப்பட்ட என் அப்பா தான் அந்த 


“தோழர்”


Comments