கொஞ்சம் காபி கொஞ்சம் வரலாறு

கொஞ்சம் காபி  

கொஞ்சம் வரலாறு




ண்ணெய் உற்பத்திக்கு அடுத்து உலகிலேயே இரண்டாவது மிகப் பெரும் வர்த்தக தயாரிப்பு  இப்போது   காஃபி தான். 


உலகெங்கும் அருந்தப்படும் மொத்த குடிநீரில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு  காஃபி உலக மக்களால் அருந்தப்படுகிறது.  


உலக அளவில் அதிக எண்ணிக்கையில் காஃபி அருந்துபவர்கள் அமெரிக்கர்கள்.  ஆண்டிற்கு 250 கோடி ரூபாயை காபி குடிப்பதற்காக செலவு செய்கின்றனர். 


அமெரிக்கர்களுக்கு அடுத்தப்படியாக, பின்லாந்த், ஸ்வீடன், நார்வே, டென்மார்க் உள்ளிட்ட நாட்டினர் காபி விரும்பிகளாக உள்ளனர்.


அமெரிக்காவில் இருக்கும் ஸ்டார் பக்ஸ் காபி ஷாப் தான் உலகத்தின் நம்பர் 1 காபிஷாப். இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 68 நாடுகளில் 25 ஆயிரம் ‘ஸ்டார் பக்ஸ்’ காபி ஷாப்கள் உண்டு. இதன் ஆண்டு விற்பனை19 பில்லியன் டாலர்கள். அதாவது இந்திய ரூபாயில்128 கோடி.


காபி குடிப்பதால் அல்சைமர், இதய நோய், ஈரல் நோய், கீல்வாதம், நீரிழிவு போன்றவற்றை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் சொல்கிறார்கள்.

~


கொஞ்சம் வரலாறு :


காவிரி பிறந்த மண் - குடகு 


குடகு மலை நாடாக தனியே இருந்தபோதிலும் தம் சொந்த நாட்டை அந்த மண்ணின் மைந்தர்கள் ஆண்டதாக வரலாறு இல்லை. வெளியில் இருந்து வந்தவர்கள் தான் பெரும்பாலும் குடகு நாட்டை ஆண்டிருக்கிறார்கள். குடகர்கள் அல்லாத அரச குடும்பங்கள் தான் குடகின் மன்னர்களாக கோலோச்சியிருக்கிறார்கள். 


குடகின் வரலாற்றை பார்க்கும்போது சுங்க, சாளுக்கிய, ஹொய்சால, சோழ வம்சங்களே பெரும்பாலும் குடகின் மீது தங்கள் ஆதிக்கத்தை செலுத்தியிருக்கின்றன. 


பழங்கால அரசுகளின் முடிவுக்கு பின்னர் எழுந்த விஜய நகர பேரரசு குடகையும் தங்கள் குடைக்குள் கொண்டு வந்தனர். 


விஜய நகர பேரரசு வீழ்ந்த பின்னர் அவர்களின் பாளையக்காரர்களாக இருந்த லிங்காயத்துகளான இக்கேரி நாயக்க வம்சத்தினர் குடகை கைப்பற்றிக் கொண்டு தங்கள் ஆதிக்கத்தை துவக்கினர். 


இவர்களின் ஆட்சி காலத்தில் குடகு மிகவும் அமைதியான பிரதேசமாக இருந்தது. இக்கேரி நாயக்க மன்னர்களில் முக்கியமானவர் தொட்ட வீர ராஜேந்திரன் ஆவார். அவர் காலத்தில் குடகு எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கியது. மாபெரும் வீரரான அவருடன் பக்கத்து நாடுகள் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. பெரும் போர்கள் ஏதுமின்றி மக்கள் நிம்மதியான  வாழ்க்கையை வாழ்ந்தனர். 


எல்லாமே ஹைதர் அலியின்  எழுச்சி வரை தான். 


மைசூரில்  உடையார் அரசு வீழ்ந்து உடையார்களின்   தளவாய் ஆக இருந்த ஹைதர் அலி  மைசூரின் சுல்தானாக தன்னை முடிசூட்டி கொண்டபின் குடகுக்கு சோதனை காலம் ஆரம்பமானது.


இயற்கை எழில் சூழ்ந்த குடகின் மீது ஹைதரின் பார்வை  விழுந்தது. துறைமுக நகரான மங்களூர் செல்ல குடகின் வழியே தான் செல்ல வேண்டும் என்பதால் குடகை ஆக்கிரமித்தால் போக்குவரத்து எளிதாகிவிடும் என்று கணக்கு போடுகிறார் ஹைதர்.


குடகு சிறிய நாடு தான் என்றாலும் குடகை வீழ்த்துவது எளிதாக இல்லை ஹைதருக்கு. குடவர்கள்  இயல்பிலேயே மாபெரும் வீரர்கள். அத்துடன் குடகர்களுக்கு தங்கள் நாட்டின் நிலவியல் முழுவதும் அத்துபடி. மலைகளில் மறைந்திருந்து மைசூர் படைகளின் மீது தொடர்ச்சியான கொரில்லா தாக்குதலில் வல்லமையுடன் ஈடுபட்டு ஹைதர் படைகளை விரட்டியடித்தனர்.


ஹைதருக்கு பிறகு அவர் மகன் திப்பு மைசூர் சுல்தான் ஆகிறார். குடகின் மீதான மைசூரின் பகைமை மேலும் அதிகரிக்கிறது. ஆரம்ப கால சண்டைகளில் திப்புவின் படை குடகர்களிடம் தோற்கிறது. சிறப்பான வியூகத்தினாலும், மாபெரும் படையின் வலிமையை கொண்டும் திப்பு குடகர்களை தோற்கடிக்கிறான். 


போரில் தொட்ட வீர ராஜேந்திரன் சிறை பிடிக்கப்படுகிறார். சுல்தானின் படைகள் குடகில் வெறியாட்டம் ஆடுகின்றனர். குடகு படையினரை கொத்து கொத்தாக கொல்கின்றனர்.  பெண்கள் வன்புணர்வு செய்யப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டு வாள் முனையில் மத மாற்றம் செய்யப்படுகிறார்கள். 


திப்புவை வரலாறு என்னதான் புகழ்ந்துரைத்தாலும், மலபாரிலும், குடகிலும் திப்புவின் படைகள் செய்த அழிச்சாட்டியங்களே இன்றளவும் பெரும்பான்மை கன்னட மக்களை திப்புவுக்கு எதிரான மன நிலையில் நிறுத்தி வைத்திருக்கிறது. 


திப்பு பிரெஞ்சு படைகளுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்க்க வியூகம் அமைக்கிறார். இந்த நேரத்தில் தான் குடகு மன்னர் தொட்ட வீர ராஜேந்திரன் சிறையில் இருந்து தப்பிக்கிறார். தப்பிய அவர் திப்புவை அழிக்க ஆங்கிலேயர்களுக்கு உதவுகிறார். 


1799 இல் திப்பு ஆங்கிலேயர்களால் கொல்லப்படுகிறார். போரில் உதவிய குடகு மன்னர் தொட்ட வீர ராஜேந்திரனை மீண்டும் மன்னராக்குகிறார்கள் ஆங்கிலேயர்கள். 

~


Comments