கொஞ்சம் காபி-கொஞ்சம் சினிமா
கொஞ்சம் காபி-கொஞ்சம் சினிமா
17ம் நூற்றாண்டில் கர்நாடகா மாநிலம் சிக்மகளூரை சேர்ந்த சுஃபி துறவி ஒருவர் ஹஜ் பயணத்துக்காக மெக்கா சென்றார். அங்கு அரபியர்கள் ஏதோ ஒரு விதையை வறுத்து பொடி செய்து நீரில் கலந்து அருந்துவதை கவனித்தார். குடித்தும் பார்த்தார். அதன் சுவையும், அருந்தியபின் உடலிலும், உள்ளத்திலும் ஏற்படும் புத்துணர்வினையும் அறிந்து அதை இந்தியா எடுத்து செல்ல முயன்றார்.
காஃபி வணிகத்தை கையில் வைத்திருந்த அரபுக்காரர்கள் அந்த துறவி இந்தியாவுக்கு காஃபி விதைகளை எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை. அவர்களுக்கு தெரியாமல் வறுக்கப்படாத ஏழு காஃபி விதைகளை மட்டும் இந்தியாவுக்கு எடுத்து வந்துவிட்டார் அந்த துறவி. அவற்றை அவரின் வசிப்பிடமாகிய கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் விதைத்தார்.
அந்த ஏழு விதைகளே இன்று மாபெரும் காஃபி தோட்டங்களாக கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது.
~
கொஞ்சம் சினிமா :
எழுபதுகளின் இறுதியில் வந்த படம் “ஒரு விடுகதை ஒரு தொடர்கதை”.
படத்தை இயக்கியவர் MA காஜா. பின்னர் ஆடு குரங்கு, அம்மன் ஆகியோரை வைத்து வெற்றிப் படங்களை இயக்கிய ராம. நாராயணனின் பழைய பங்காளி.
இருவரும் ராம்-ரஹீம் என்ற பெயரில் இயக்குனர் துரையின் நிறைய படங்களுக்கு இணைந்து கதை வசனம் எழுதியிருக்கிறார்கள்.
வெள்ளிக் கிழமை தோறும் தவறாமல் ஒரு படத்தை இயக்கி ரிலீஸ் செய்யும் அதிவேக ஜெட் இயக்குனர் இந்த காஜா.
காஜா இயக்கிய நிறைய படங்கள் குப்பைகள். சில முத்துகள்.
அப்படி ஒன்று தான் “ஒரு விடுகதை ஒரு தொடர்கதை”.
விளையாட்டு வீரனான தனது நண்பனுடன் ஓடிவிடும் மனைவி. பின்னர் நண்பன் கால் ஒடிந்து சக்கர நாற்காலியில் முடங்கும்போது வறுமையில் தவிக்கும் அக்குடும்பத்துக்கு உதவிகள் செய்யும் தியாக உத்தம பழைய கணவன்.
குழந்தையை கையில் வைத்துக் கொண்டு பாடும் “விடுகதை ஒன்று தொடர்கதை இன்று…” என்னும் பாடலில் மொத்த கதையையும் காப்ஸூலில் கொடுத்திருப்பார் இயக்குனர் காஜா.
வித்தியாசமான கான்செப்ட் உள்ள கதை. அன்று வெற்றி பெறவில்லை. இன்று வந்திருந்தால் ஒருவேளை சூப்பர் ஹிட் அடிக்கலாம்.
அந்த குறிப்பிட்ட பாடலை எழுதி இசை அமைத்திருப்பவர் கங்கை அமரன். இளையராஜா என்னும் ஆலமரத்தின் அடியில் அவரால் வளர முடியாமலேயே போய்விட்டது.
இளையராஜா இசை என்று நினைத்துக் கொண்டிருக்கும் பல பாடல்கள் உண்மையில் வேறு இசையமைப்பாளர்கள் இசை அமைத்திருப்பார்கள்.
இந்த பாடலை SPB, ஜானகி ஆகியோருடன் மூன்றாவது சரணத்தை அசோக் என்னும் பாடகர் பாடியிருப்பார்.
உண்மையிலேயே அந்த மூன்றாவது சரணம் அசோக்கின் குரலில் மிக அற்புதமாக இருக்கும்.
அசோக் அந்த பாடலுக்கு பின்னர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.
ஒரே ஒரு சாதனையுடன் ஓய்ந்துபோனவர்கள் பட்டியல் தமிழ் திரையுலகில் ரொம்ப பெரியது.
ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும்போது பார்க்கலாம்.



Comments
Post a Comment