லைப்ரரி : வந்தவர்கள் - ஆமருவி தேவநாதன்
வந்தவர்கள் - ஆமருவி தேவநாதன்
~
150 ஆண்டு கால தமிழ் நாட்டு பிராமணர்களின் அலை அலையான இடப்பெயர்வை நேர்மையாக பதிவு செய்திருக்கும் நாவலாசிரியருக்கு முதலில் வாழ்த்துகள்.
~
பிராமண சமூகம் எப்போதுமே காலந்தோறும் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள தவறியதில்லை. சமூகத்திற்கு உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் வரும் விமர்சனங்களை ஒதுக்காமல் அறிவுபூர்வமாக அவற்றை அணுகி தேவையான சமூக மாற்றங்களை காலந்தோறும் செய்து கொண்டேயிருப்பது அச்சமூகத்தின் விசேஷ குணம்.
அதன் அடிப்படையில் 1877 ல் ஏற்பட்ட தாது வருஷ பஞ்ச காலம் துவங்கி 2023 ல் உலக பொருளாதார வல்லரசுகளில் பிராமணர்களின் குடியேற்றங்கள் வரை அந்தந்த கால கட்டத்தில் நிலவிய அரசியல் சமூக மாற்றங்களின் ஊடாக பிராமண குடும்பம் ஒன்றின் கதையை அழகாக நகர்த்திச் சென்றிருக்கிறார் ஆமருவி தேவ நாதன்.
கதையை சென்றவர்கள், வந்தவர்கள், இருந்தவர்கள், பறந்தவர்கள் என்று நான்கு பகுதியாக பிரித்திருக்கிறார் ஆசிரியர்.
வட தமிழகத்தின் திண்டிவனம் அருகே சிறுதாமூர் என்ற ஊரில் செழிப்பாய் இருந்த பிராமண குடும்பங்கள் பஞ்சம் காரணமாகவும், உள்ளூரில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த ஜைன மடத்திற்கு அப்போதைய ஆட்சியாளர்கள் அளித்த ஆதரவின் காரணமாகவும் வலுவிழந்து பிழைப்பு தேடி தஞ்சை மாவட்டம் மாயவரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வந்து குடியேறுவதை வலியுடன் விவரிக்கிறது முதல் பகுதியான “சென்றவர்கள்”.
வந்து குடியேறிய கிராமங்களில் ஏற்கனவே அங்கு பூர்வீகமாய் வசிக்கும் சக பிராமணர்களாலேயே நிறைய அவமானங்களை சந்தித்து பின் தம் திறமையால் மேலெழும்பி வரும் வரலாற்றை சொல்கிறது “வந்தவர்கள்” பகுதி.
அங்கிருந்து கல்வி கற்று அரச உத்தியோகங்களின் பொருட்டு வெளியே சென்று சமூகத்தில் தமக்கென ஒரு செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ளும் பகுதி “இருந்தவர்கள்” பகுதி.
சமூக அரசியல் காரணங்களுக்காக அங்கீகாரங்கள் மறுக்கப்படும்போது படிப்பு மட்டுமே பிழைப்பு தரும், ஏற்றம் தரும், என்று பெற்றோரால் உருவேற்றப்பட்டு அதன் காரணமாக அதை நோக்கியே தமது மாணவப் பருவத்தை அமைத்துக்கொண்டு கல்வியில் சிறந்து பொருளாதார வல்லரசுகளில் உயர் பொறுப்புகளில் சென்று அமர்ந்த சமகால தலைமுறையை பற்றி சொல்கிறது “பறந்தவர்கள்” பகுதி.
~
நிறைய கதை மாந்தர்கள் இருந்தும் தெளிவாக கதையை குழப்பமின்றி நகர்த்தி செல்கிறார் கதாசிரியர்.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலேயான வரலாற்றை அதன் சமகால போக்குடனும் சரியான தரவுகளுடனும் கதையுடன் இழைந்து சொல்கிறார்.
பாளையக்காரர்கள் முதல் வெள்ளை அரசாங்கம், கிறித்துவ மதமாற்றம், சுதந்திர போராட்டம், காந்தி, பாரதி, ராஜாஜி, ஈவெரா, இந்திரா, எமர்ஜென்ஸி, எம்ஜியார், ஈழப்போராட்டம், ராம கோபாலன் என்று அப்பப்பா.. எல்லாவற்றையும் நாவலில் கொண்டு வந்து நிறுத்துகிறார்.
தேரெழுந்தூர் அக்கிரகார தெருக்கள் இன்று முஸ்லீம்கள் மயமாகியிருப்பதை நான் நாகப்பட்டினத்தில் பணியாற்றியபோது பார்த்திருக்கிறேன். எப்படி அவை மாறியது என்பதை நேர்மையுடன் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.
கதையின் இறுதி சில அத்தியாயங்கள் வாழ்வின் யதார்த்தத்தை வாசகர்களிடம் பதிய வைக்கிறது.
கதை இறுதியில் கனடாவில் வசிக்கும் அமுதன் சொல்கிறான்…
“நாம் எப்போதுமே ‘வந்தவர்கள்’ தான் போல. பெரியவர்கள் ஏதாவது ஒரு ஊருக்கு வந்து கொண்டேயிருந்தார்கள். நாம் ஏதாவது ஒரு நாட்டுக்கு வந்து கொண்டே இருக்கிறோம். இப்போது நாம் வேறு நாட்டு குடியுரிமை பெற்றுவிட்டதால் இந்தியாவை பொருத்தவரை நாம் ‘வந்தவர்கள்’ என்பதே சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.
இதற்கு முன்னும் பின்னும் வரும் கதையின் நிறைவுப் பகுதிகள் யதார்த்தமானவை. பிராமணர்களை பொருத்தவரை அவை நியாயமானவை. வாசகர்களுக்கு அவை கவித்துவமானவை.
~
வந்தவர்கள்
By ஆமருவி தேவநாதன்
சுவாசம் பதிப்பகம்
ரூ.330/-


Comments
Post a Comment