சினிமா - The Kashmir Files (Hindi-2022)
சினிமா
The Kashmir Files (Hindi-2022)
மன்னார்குடி பிருந்தாவன் நகர் CRC கண்டக்டர் வரதராஜ் நைனா என்.எஸ். கிருஷ்ணன் படத்துக்கு பின் வேறு எந்த படமும் பார்க்காதவர். ஒரு நாள் டியூட்டி முடிந்து அமைதியாக வந்தவர் யாரிடமும் பேசவில்லை. முகத்தில் கனத்த சோகம் அப்பியிருந்தது.
‘உதிரிப்பூக்கள்’ படம் தஞ்சாவூரில் பார்த்தேன். மனசு என்னமோ பண்ணுது குமார்.’ என்றார்.
இயல்பு நிலைக்கு அவர் திரும்ப இரண்டு நாட்கள் ஆனது.
சில படங்கள் மனதை கனக்க வைத்துவிடும்.
இளக சில பல நாட்களாகும்.
~
Ralib Galib Chalib …
பதறச்செய்யும் இந்த கோஷம் தான் கஷ்மீர் பண்டிட்களை சொந்த மண்ணை விட்டு துரத்தி அகதிகளாக்கியது.
Convert, Be killed, or Leave (without women)
இது தான் பத்தியில் முதலில் சொன்ன வார்த்தைகளுக்கு அர்த்தம். 1989 களின் இறுதியில் இருந்து 90 களின் மத்தி வரை கஷ்மீர் பள்ளத்தாக்கை உலுக்கிய பயங்கரவாதிகளின் war cry அது.
இந்த மூன்று வார்த்தைகளின் ஊடாக கஷ்மீரில் நிற்கதியாக்கப்பட்ட பண்டிட்களின் அவலம் படம் முழுக்க சொல்லப்படுகிறது.
அந்த வார்த்தைகள் நம்மை என்னமோ செய்கின்றன.
சச்சின் சென்சுரி அடிப்பதை ரேடியோவில் கேட்டு குதூகலிக்கும் சிறுவன் தாக்கப்படுவதில் தொடங்குகிறது முதல் காட்சி.
முதல் காட்சியிலிருந்து விரிகிறது பண்டிட்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற கொலைவெறி தாக்குதலும் வன்முறை வெறியாட்டங்களும்.
Exodus என்று ஒற்றை வார்த்தையில் அன்று நம்மை கடத்திவிட்ட அந்த துயரம் உண்மையில் Exodus அல்ல. Genocide என்று அடுத்தடுத்து நகரும் காட்சிகள் மூலம் நமக்கு புரிய வருகிறது.
பல்கலைக்கழகங்களில் நாட்டிற்கு எதிரான நச்சுக் கருத்துகள் எவ்வாறு மெல்ல மெல்ல மாணவர்களின் மனதில் விதைக்கப்படுகின்றன என்பது படத்தின் மற்றுமொரு கிளை. இல்லை இல்லை. அது தான் மெயின். அதன் ஊடாக தான் கஷ்மீரில் நடத்தப்பட்ட இனப்படுகொலைகள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுகின்றன.
கல்வி போதிக்கவேண்டிய ஆசிரியர்கள் எவ்வாறு மாணவர்களின் தெளிந்த மனங்களில் நஞ்சை கலந்து 'ஆஸாதி…ஆஸாதி' என்று அவர்களை அர்பன் நக்ஸல்கள் ஆக்குகிறார்கள் என்பது நம்மை அதிர வைக்கிறது.
காஷ்மீரின் பெரிய தலைவன் யார் என்று பண்டிட் மாணவன் கிருஷ்ணாவிடம் கேட்டு ஒரு தலைவரின் பெயரை சொல்ல வைத்து, இல்லை ஹிந்து அரசன் லலிதாதித்யா தான் பெருந்தலைவன் என்று அம்மன்னனின் பெருமைகளை விளக்கி, அப்படியே கிருஷ்ணாவை ‘காஷ்மீருக்கு விடுதலை கொடு…’ என்று ஆஸாதி கோஷம் சொல்ல வைக்கும் லாவகம்,
ஆஹா.. பல்லவி ஜோஷி பசுந்தோல் போர்த்திய புலியாய் பேராசிரியர் ராதிகா மேனன் ரோலில் வெளுத்து வாங்குகிறார்.
கிருஷ்ணாவை வளர்க்கும் அவன் தாத்தாவாக அனுபம் கேர், புஷ்கர் நாத் பண்டிட் ஆக வருகிறார்.
1990 களில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்று பேரனிடம் சொல்லி அழும்போதும், மத்திய அமைச்சர் அகதிகள் முகாமுக்கு வரும்போது மற்றவரெல்லாம் அகதி முகாமில் வசதிகள் கேட்க அனுபம் கேர் மட்டும் ‘ஆர்டிகிள் 370 ஐ ரத்து செய்’ என்ற பதாகையை தூக்கி காட்டும்போதும் அவரின் அனுபவமிக்க நடிப்பு கலங்க வைக்கிறது நம்மை.
Article 370 ரத்து செய்யப்பட்டது தெரியாமலேயே அனுபம் கேர் இறப்பது நம்மையும் அழ வைத்துவிடுகிறது.
வசனங்கள் படத்தின் பலத்திற்கு பிரதான காரணமாய் இருக்கின்றன.
You may have the Govt. But we have the system.. என்று ராதிகா கொக்கரிப்பதும்,
இந்தியர்களுக்கு பேப்பர் பார்க்கும் பழக்கம் உண்டே தவிர படிக்கும் பழக்கம் இல்லை என்பதும்,
வசனத்தின் வீர்யத்திற்கு உதாரணம்.
காஷ்மீரின் பெரிய தலைவர் ஒருவர் பற்றி, 'அவர் 'டெல்லியில் nationalist ஜம்முவில் Communist காஷ்மீரில் Communalist' என்று கூறும்போது அரசியல்வாதிகள் பற்றிய சாமானியர்களின் கணிப்பு எவ்வளவு தூரம் எதார்த்தத்தை பிரதிபலிக்கிறது என்ற வியப்பை ஏற்படுகிறது.
ஒரு நாட்டை அழிக்க அதன் ஆன்மீகம், அறிவு, பண்பாடு, கலாச்சாரம் இவைகளை அழித்தால் போதும் என்னும் கிருஷ்ணாவின் குரல் எவ்வளவு சத்தியமான உண்மை.
க்ளைமேக்ஸில் பல்கலை மாணவ்ர்களின் மத்தியில் நிகழ்த்தப்படும் கிருஷ்ணாவின் உரை போலி முற்போக்கு மாயையிலிருந்து யதார்த்தத்தை நோக்கி மாணவர்களை திருப்ப உதவுகிறது.
இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி அந்த காட்சியில் மிளிகிறார்.
படத்தின் இறுதிக் காட்சி கல் நெஞ்சக்காரர்களை கூட கலங்கடித்துவிடும்.
முழு படத்தின் மையக்கருத்தையும் இந்த காட்சி சடாரென ஒரு நொடியில் நம் ஆன்மாவுக்குள் செலுத்தி இதயத்தை நெகிழ்த்தி மனதை கனக்க செய்துவிடுகிறது.
Exodus இல்லை, அது Genocide தான்.
படம் முடிந்து வெளியே வரும் ஒருவரேனும் கண்கள் கலங்காமல் இருந்தால் அவர் கல் நெஞ்சக்காரர் தான்.
பண்டிட்கள் காஷ்மீரில் மீள் குடியமர்த்தம் செய்யப்படுவதே அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி களுக்கு பிராயச்சித்தமாய் இருக்கும்.
Schindlers List, The Pianist பட வரிசையில் சேர எல்லா தகுதியும் உள்ள படம் தான் The Kashmir Files.



Comments
Post a Comment