ரிஷ்யசிருங்கர் - III
ரிஷ்யசிருங்கர் - III
சாந்தா ரிஷ்யசிருங்கனை அழைத்துக் கொண்டு அங்க தேச எல்லையை அடைகிறாள்.
ரிஷ்யசிருங்கனின் கால் பட்டவுடன் வருணன் மழையை பொழிவிக்கிறான். பூமகள் குளிர்கிறாள்.
ரோமபாதர் அங்க தேச எல்லைக்கு வந்து ரிஷ்யசிருங்கரை பணிகிறார்.
அரண்மனைக்கு ரிஷ்யசிருங்கர் மாலை மரியாதைகளுடன் அழைத்துச் செல்லப்படுகிறார்.
மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ரிஷ்யசிருங்கரை பணிகிறார்கள்.
தன் நாட்டையும் நாட்டு மக்களையும் பஞ்சம் மற்றும் பேரழிவிலிருந்து காப்பாற்றிய ரிஷ்யசிருங்கரை தன் மகள் சாந்தாவின் விருப்பப்படியே அவளுக்கு திருமணம் செய்து வைக்கிறார் ரோமபாதர்.
சாந்தாவை மணந்த ரிஷ்யசிருங்கர் தன் வாழ்வில் தவற விட்ட பெண்மையின் கொடையான தாய்மை, அன்பு, பாசம், ஆசை, காதல், காமம் போன்ற அனைத்து உணர்வுகளையும் சாந்தாவிடம் பெறுகிறார்.
ரோமபாதர் ரிஷ்யசிருங்கருக்கு முடிசூட்டி அங்க தேச மன்னனாக அவரை பிரகடனப் படுத்துகிறார்.
~
இவ்வாறு ரிஷ்யசிருங்கர் கதையை தசரதனுக்கு கூறிய சுமந்திரர் தசரதனிடம் ரிஷ்யசிருங்கரை அழைத்து வந்து அஸ்வமேத யாகம் செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும் என்று கூறுகிறார்.
அதன்படியே ரிஷ்யசிருங்கர் தசரதனுக்காக அஸ்வமேத யாகம் செய்து ஸ்ரீராம, லட்சுமண, பரத சத்ருக்னர்கள் அவதரிக்கின்றனர் என்பது ராமாயணம் தரும் செய்தி.
~
மஹாபாரதத்திலும் ரிஷ்யசிருங்கரின் கதை வனபர்வத்தில் லோமசர் எனும் முனிவரால் தருமருக்கு சொல்லப்படுகிறது.
~
பௌத்த இதிகாசமான புத்த ஜாதக கதையிலும் ரிஷ்யசிருங்கரின் வரலாறு சிற்சில மாற்றங்களுடன் கூறப்படுகிறது.
போதிசத்வரின் முந்தைய அவதாரங்களில் ஒருவராக ரிஷ்யசிருங்கர் அக்கதையில் விளிக்கப்படுகிறார். சாந்தாவிற்கு பதிலாக நளினி என்னும் பெயர் இக்கதையில் காணப்படுகிறது. யசோதராவின் முந்தைய அவதாரமாக நளினி குறிப்பிடப்படுகிறார்.
~
ரிஷ்யசிருங்கரை காதலால் கவர்ந்து அங்க தேசத்திற்கு அழைத்து வந்தது இளவரசி சாந்தா என்று சில கதைகளில் கூறப்படுகிறது.
வேறு சிலவற்றில் வைசாலி எனும் தாசி இப்பணியினை செய்ததாகவும், ஆனால் அவளை புறக்கணித்து, இளவரசி சாந்தாவை ரிஷ்யசிருங்கருக்கு அரசர் ரோமபாதர் மணமுடித்ததாகவும் கதை செல்கிறது.
~
ரிஷ்யசிருங்கர் கதை இந்தியாவில் பலமொழிகளில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளன.
தமிழிலேயே குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இரண்டு முறை இக்கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
ஆனாலும் மலையாளத்தில் 1988ல் தசரதன் இயக்கத்தில் வெளிவந்த 'வைசாலி' என்னும் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பெரும் வெற்றி பெற்றதுடன் இரண்டு பிரிவுகளில் தேசிய விருதுகளைப் பெற்றது.
~
ஹிமாச்சல பிரதேசத்தில் குலு மாவட்டத்தில் ரிஷ்யசிருங்கருக்கென ஒரு கோயில் அமைந்துள்ளது. சிருங்கரிஷி என்றழைக்கப்படும் மூலவர் மனைவி சாந்தா தேவியுடன் அருள்பாலிக்கிறார்.
சிருங்க ரிஷி எனும் ரிஷ்யசிருங்கர் தவம் செய்த வனாந்திரம் தான் சிருங்கேரி என்று தென்னிந்திய மக்களால் வணங்கப்பட்டு வருகிறது. ஆதிசங்கரர் இந்த சிருங்கேரியில் தான் சாரதா பீடத்தை நிறுவினார்.
~
சரி, இத்தொடரின் இறுதிப் பகுதிக்கு இப்போது வருவோம்.
ரிஷ்யசிருங்கரை தன் அன்பால் கவர்ந்து அங்க தேச மக்களை பேரழிவில் இருந்து காப்பாற்றிய சாந்தா தசரதனின் மூத்த மகள் என்றும், தசரதனின் நண்பரான ரோமபாதருக்கு, அவர் விரும்பி கேட்டவாறு தசரதனால் தத்து கொடுக்கப்பட்டார் என்றும் இராமயணத்தின் சில பதிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
எனவே, இதன்படி இளவரசி சாந்தா ஸ்ரீராமபிரானின் மூத்த சகோதரி ஆகிறார்.
சாந்தாவின் பிறப்பும், வளர்ப்பும், ரோமபாதரின் வளர்ப்பு மகளாய் அவள் சுவிகரிக்கப்பட்டதும், அதன் பின்னர் தசரதனுக்கு புத்திர பாக்கியமின்மை ஏற்பட்டதால் தனக்கு மருமகனாக இருக்கக் கூடிய ரிஷ்யசிருங்கரை வைத்து யாகங்கள் செய்து அவதார புருஷனை பெற்றெடுத்ததும் சுவாரஸ்யமான தனிக்கதை.
புருஷோத்தமரான ஸ்ரீராமபிரான் அருள் இருந்தால் பின்னொரு சமயம் அக்கதையையும் தொடராக வடிக்கலாம் என்பது அடியேனின் சித்தம். ஜெய் ஸ்ரீராம்.
~
சுபம்



Comments
Post a Comment