சம்பவம் ( II )

சம்பவம் ( II )


இப்போ, முந்தைய சம்பவம் 1 பதிவின் இடையில் நான் சொன்ன அந்த 'சம்பவ'த்தை பார்ப்போம்.
~

முன் போல இப்போது அடிக்கடி facebook பக்கம் என்னால் வர முடிவதில்லை.

துறை சார்ந்த என் அலுவலக நண்பர்களுக்கு அதன் காரணம் நன்கு புரிந்திருக்கும்.

நான் தற்போது பணியாற்றிக் கொண்டிருப்பது அத்தியாவசிய பணிகள் தொடர்புடைய ஒரு துறை.

அலுவலகத்திலும் முக்கியமான பொறுப்பில் இருந்து கொண்டிருப்பதால் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

நண்பர்கள் மட்டும் அல்ல. வீட்டிலும் கூட முன்பு போல் தங்களுடன் நான் நேரம் செலவழிப்பதில்லை என்று அதிருப்தியில் தான் இருக்கின்றனர்.

வீட்டில் இருக்கும் நேரங்களிலும் கூட அலுவல் தொடர்பான தொலைபேசி அழைப்புகள் தொடர்ச்சியாக இருந்து கொண்டே தான் இருக்கின்றன.

சில பொறுப்புகள் நாம் தட்டி கழிக்க முடியாதவை. அவை இருந்து கொண்டு தான் இருக்கும். அதனுடன் சேர்த்து பேலன்ஸ் செய்து கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை.

சம்பவத்திற்கு வருகிறேன்.
~
சம்பவம் நடந்தது அந்த அல்ஸைமர் டெஸ்ட் நடந்த ஓரிரு நாட்களுக்கு பின்.

சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்த ஒரு மழை நாள் அது.

வழக்கமாக ஆலந்தூர் மெட்ரோவில் இருந்து தான் நான் அலுவலகம் செல்ல வேண்டும்.

சாதாரண நாட்களில் டூ வீலரில் சென்று விடுவேன். மழை நாட்களில் work from home செய்து கொண்டிருக்கும் என் பசங்களில் யாராவது ஒருவர் காரில் என்னை ஆலந்தூரில் டிராப் செய்து விடுவார்.

அன்று அது போல் நல்ல மழையில் காலையில் என்னை சாய் டிராப் செய்தான்.

அலுவலகம் வந்து விட்டேன்.

ரெட் அலர்ட் கொடுத்திருந்தால் மதியம் சாப்பிட்டு விட்டு கூடுமானவரை சீக்கிரம் வீட்டிற்கு கிளம்பி விடவேண்டும் என்று பிளான் செய்திருந்தேன்.

ஆனால், அலுவலகம் வந்தது முதல் பரபரவென முக்கியமான வேலைகள் வரிசை கட்டி வந்தன.

எல்லாவற்றையும் ஒரு வழியாக முடித்துவிட்டு கொஞ்சம் சீக்கிரமாகவே அலுவலகத்தை விட்டு கிளம்பி மெட்ரோவில் ஏறினேன்.

மெட்ரோவில் ஏறியதும் அருணுக்கு போன் செய்து காரை எடுத்துக் கொண்டு ஆலந்தூர் மெட்ரோவுக்கு வர சொன்னேன். அவனும் ஓக்கே சொல்லிவிட்டான்.

பிறகு வந்தது பாருங்கள்... வரிசையாக தொலைபேசி அழைப்புகள்.

எல்லாமே முக்கியமான அலுவலக அழைப்புகள். எதையுமே தவிர்க்க முடியவில்லை.

நடுவே அருண் போன் செய்து எங்கிருக்கிறாய்...? என்று கேட்டான்.

டிஸ்பிளேயில் வண்டி சைதாப்பேட்டை கடந்து கொண்டிருப்பதை பார்த்து, அவனிடம் சைதாப்பேட்டை தாண்டிவிட்டேன்.. என்றேன்.

ஓக்கே.. நான் ஆலந்தூர் மெட்ரோ இரண்டாம் கேட்டில் இப்போது நிற்கிறேன்.. என்றான்.

சரிடா.. இன்னும் பத்து நிமிடங்களில் ஆலந்தூர் வந்து விடுவேன்.. என்று அவனிடம் கூறிவிட்டு மொபைலை ஆப் செய்தால், மறுபடியும் அலுவல் அழைப்புகள். தவிர்க்க முடியாதவை.

தொடர்ச்சியாக மேலும் சில அழைப்புகள்.

பேசிக்கொண்டே ஜன்னலை பார்த்தால் நேர் எதிரே பரங்கி மலை தெரிகிறது.

மை காட்.

கம்பார்ட்மெண்ட்டில் ரொம்ப கொஞ்சம் பேரே அமர்ந்திருந்தனர். ஆலந்தூரை தாண்டி வண்டி போய்க்கொண்டிருக்கிறதை உணர்ந்தேன். அடுத்த மெட்ரோ ஸ்டேஷன் நங்கநல்லூர் ரோடு.

மொபைல் அழைப்பை உடனடியாக கட் செய்து, சீட்டை விட்டு தாவி டோர் அருகே வந்தேன். நங்கநல்லூர் ரோடு நிறுத்தம் வந்தது.

தாவி இறங்கினால்,.... வெளியே ஹோ.. வென பேரிரைச்சலுடன் மழை.

சுற்றுமுற்றும் பார்த்தேன். ஸ்டேஷனலில் ஒரு ஆள் கூட இல்லை.

எப்படி மிஸ் பண்ணினேன் ஆலந்தூரை..? சே... என்று வாய் விட்டு புலம்பியபடி அருணை அழைத்து விவரம் சொன்னேன்.

சூப்பரு... என்று கேலியாக சொன்னவன்..,

நீ எக்சிட் பண்ணிவிட்டு ஸ்டேஷனுக்கு வெளியே நில்.. நானே அங்கு வருகிறேன்... என்றான்.

ரொம்ப குழப்பமாய், எக்சிட் செய்துவிட்டு வாசலுக்கு வந்தேன்.

அருணை எதிர்பார்த்து காத்திருந்தேன்.

சென்னையில் மெட்ரோ வந்த ஆரம்ப காலம் முதல் தொடர்ச்சியாக மெட்ரோவில் பயணிக்கிறேன். ஒருமுறை கூட இப்படி ஸ்டேஷனை மிஸ் செய்ததில்லை.

சே... ஏன் இப்படி ஆச்சு..? என்று யோசித்து கொண்டிருக்கும் போதே அருண் வந்துவிட்டான். காரில் ஏறி உட்கார்ந்ததுமே கேலியாக ஒரு புன்னகை செய்தான்.

என்ன டாடி.... அல்ஸைமர் டெஸ்டுல மூன்று லெவல் பாஸ் செய்ததாய் சொன்னாயே..? என்று கண்ணடித்தபடி கேட்டான்.

போடா... என்று அவனை செல்லமாய் கடித்துக்கொண்டு விதியை நினைத்து நொந்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.

மல்டி டாஸ்கிங் கில் எப்பவாவது இப்படி நடப்பது இயல்பு தான் என்று என்னையே தேற்றிக் கொண்டேன்.

மறுநாள்.

ஊரில் இருந்து வந்திருந்த நெருங்கிய உறவினர், சில நாட்களுக்கு முன்பு ஊரில் தான் வழக்கமாய் இறங்கும் பஸ் ஸ்டாப்பை மிஸ் செய்து விட்டு அடுத்த ஸ்டாப்பில் இறங்கிய கதையை எதேச்சையாக சொல்ல....

நானும் அருணும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்து கொண்டோம்.

'என்னை போல் ஒருவன்'.






Comments