ரிஷ்யசிருங்கர் - II

 ரிஷ்யசிருங்கர் - II


ரிஷ்யசிருங்கரை அங்க தேசத்திற்கு அழைத்து வர காட்டுக்குள் படைகளை அனுப்புவோம் என்று மன்னர் சொன்ன யோசனயை சாந்தா நிராகரிக்கிறாள்.

தனது காலடி பட்டாலே மழை பொழியக் கூடிய வல்லமை பெற்ற ஒருவரை படைகளை அனுப்பி இழுத்து வருவது ரிஷ்யசிருங்கருக்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாள்.

எனவே, ரிஷ்யசிருங்கரை சந்தித்து அவரை அழைத்துவர தானே அரண்மனை அந்தப்புற பெண்களுடன் சென்று வருவதாகவும் தந்தையிடம் சாந்தா கூறுகிறாள்.

சாந்தா காட்டுக்குள் சென்று ரிஷியசிருங்கரை அழைத்து வருவது ரோமபாதருக்கு ஒப்பவில்லை. மேலும் ரிஷ்யசிருங்கர் கோபத்தில் மகளை ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது என்ற பதைபதைப்பும் அவருக்கு இருந்தது.

இருப்பினும் நாட்டு மக்கள் படும் துயரை நினைத்து எந்த வகையிலாவது பஞ்சம் தீர்ந்து மழை பொழிந்து மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது முக்கியம் என்ற கடமை உணர்ச்சியின் காரணமாக மகள் கானகம் செல்ல அரை மனதுடன் சம்மதித்தார்.

அரண்மனை அந்தப்புற சேடிப் பெண்களுடன் சாந்தா கானகம் புறப்படுகிறாள். ரிஷ்யசிருங்கருக்காக நிறைய தின்பண்டங்கள், ஆடை அணிகலன்கள் ஆகியவைகளை சுமந்து கொண்டு பரிவாரங்கள் கூட வந்தன.

தன் தந்தையால் ஒரு ஆண்மகனுக்கு நிகராக வளர்க்கப்பட்ட சாந்தா தன் பிரிய யானையின் அம்பாரியில் அமர்ந்து கொண்டு கானகத்திற்கு செல்கிறாள்.

வழி நெடுக வறண்ட நிலப்பரப்புகளையும், பஞ்சத்தில் அடிபட்டு துன்ப நிலையில் வறுமையில் வாடும் மக்களையும் சந்தித்தவாறே செல்கிறாள். அவள் மனம் கலங்குகிறது.

மக்கள் வாழ்விட எல்லை முடிந்து கானகம் துவங்கும் எல்லை வந்தபோது ஆச்சரியப்படுகிறாள்.

அடர்ந்த கானகம். செழித்து வளர்ந்தோங்கிய மரங்கள். எங்கும் கண்ணை குளிர்விக்கும் பசுமை. சில்லென்ற சாரல் மழை. வேறொரு உலகிற்குள் நுழைவது போல் இருக்கிறது சாந்தாவுக்கு.

சிற்றோடை ஒன்று வழியில் குறுக்கிடுகிறது. அதன் இரண்டு கரைகளிலும் கொம்புகள் ஊன்றப்பட்டு ஓடையின் குறுக்காக கயிறு ஒன்று கட்டப்பட்டிருக்கிறது.

எங்கிருந்தோ மெல்லிய ஓம்.. என்னும் பிரணவ மந்திரம் மெல்லிதாக தொடர்ந்து அவள் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அம்பாரியில் இருந்து இறங்கிய சாந்தா தன் சேடிப் பெண்களை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு, கயிற்றைப் பிடித்தவாறு ஓடையை கடக்கிறாள்.

ஓங்கார நாதம் வந்து கொண்டிருந்த திசை நோக்கி அடி மேல் அடி எடுத்து வைத்தவாறு செல்கிறாள். அந்த ஒலி அவளை ஒரு குகைக்கு அழைத்துச் செல்கிறது.

அக்குகையின் வாயிலுக்கு வெளியே ஒற்றைக் கொம்புடன் திடகாத்திரமான ரிஷ்யசிருங்கன் பத்மாசனத்தில் தியானம் செய்து கொண்டிருக்கிறான். அவன் வாயிலிருந்து சீரான இடைவெளியில் தொடர்ச்சியான ஓம் எனும் நாதம் வந்து கொண்டிருக்கிறது.

ரிஷ்யசிருங்கனை சுற்றி பறவைகளும் மிருகங்களும் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றன. பறவைகள் இனிய குரலில் கீதம் இசைக்கின்றன. வேட்டையாடப்படக்கூடிய விலங்குகளும் வேட்டையாடும் விளங்குகளும் அன்புடன் இணைந்து விளையாடிக் கொண்டிருக்கின்றன.

அமைதி தவழும் ரிஷ்யசிருங்கனின் முகத்தை சாந்தா உற்று நோக்குகிறாள். முகத்தில் ததும்பி வழியும் அன்பை காண்கிறாள். அவன் உடல் பொலிவும், தினவும் அவளை ஈர்க்கின்றன.

முன் தலையில் இருக்கும் அந்த ஒற்றைக் கொம்பும் அவனுக்கு அழகாக தான் இருக்கிறது.

தான் நினைத்ததை விட ரிஷ்யசிருங்கன் இளமையாக இருப்பதை கண்டு மகிழ்கிறாள். அவன் இளமை அவள் ஆசைக்கு தூண்டில் போடுகிறது.

அவன் கண் திறக்கும் வரை காத்திருக்க முடிவு செய்து தியான நிலையில் இருக்கும் அவன் முன் மண்டியிடுகிறாள் சாந்தா.

ரிஷ்யசிருங்கன் மெல்ல கண் திறக்கிறான். தன் முன் மண்டியிட்டிருக்கும் சாந்தாவை பார்த்து புன்னகைக்கிறான்.

அவன் ஒற்றை புன்னகையில் காதல்வயப்பட்டு விடுகிறாள் சாந்தா. தான் வந்த வேலையை மறந்துவிடுகிறாள். வாழ்நாள் முழுக்க அவன் அருகிலேயே இருக்க பிரியப்படுகிறாள்.

இதுவரையிலான தன் வாழ்நாளில் பார்க்காத பெண்மையின் முழு வடிவத்தை உற்று நோக்குகிறான்.

தந்தை தன் உபதேசங்களில் அடிக்கடி குறிப்பிடும் அப்சரஸ் தான் தன் எதிரில் இருப்பவளோ என வியக்கிறான் ரிஷ்யசிருங்கன்.

காதல் மயக்கத்தில் இருந்து மீண்ட சாந்தாவுக்கு தான் வந்த நோக்கம் நினைவுக்கு வருகிறது.

காதல் உணர்வோ, சீட உறவோ, பக்தி எண்ணமோ இல்லாது பெண்மையின் உண்மை நிலையில் மெல்ல ரிஷ்யசிருங்கனை பார்த்து புன்னகைக்கிறாள்.

உத்தமரே... அங்க தேசம் உங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது.. என்று மெல்ல கூறிய சாந்தா திரும்பி பார்க்காமல் ஓடையை நோக்கி நடக்கிறாள்.

மென்மையான குரலிமையில் மயங்கி கிறங்கிவிட்டான் ரிஷ்யசிருங்கன். தன் நிலைக்கு திரும்பியபோது அந்த அப்சரஸை காணவில்லை.

தவித்த ரிஷ்யசிருங்கன் எழுந்து சுற்றுமுற்றும் பார்க்கிறான். சாந்தாவின் காலடி சுவடுகள் தெரிகின்றன. அதை தொடர்ந்தவாறு செல்கிறான்.

ஓடைக்கரையில் சாந்தா அமர்ந்திருப்பதை காண்கிறான். அவள் முகம் எங்கோ தூரத்து திசையை நோக்கி கொண்டிருக்கிறது.

அருகிலிருந்த மரத்தின் பின் ஒளிந்துகொண்டு அவளையே உற்று நோக்கலானான் ரிஷ்யசிருங்கன். அவன் இளமை விழித்தெழுகிறது. இதுவரை அறியாத ஒரு உணர்வு அவன் உடல் முழுதும் பரவி அவனை மென்மையாக்குகிறது.

மெல்ல எழுந்த சாந்தா ஆடைகளை களைந்து நிர்வாணமாய் ஓடைக்குள் இறங்குகிறாள்.

ஓடையின் சில்லென்ற குளிர்ந்த நீர் ஏற்படுத்திய சிலிர்ப்புடன் மூழ்கி எழுகிறாள்.

உடலிலும் மனதிலும் ஏற்பட்ட சூடு தணிகிறது.

கரைக்கு வந்த சாந்தா ஓடையை நோக்கியவாறு மல்லாந்து படுக்கிறாள்.மனதில் காதலும் கடமையும் மாறி மாறி வந்து செல்கின்றன. மெல்ல கண் அயர்கிறாள்.

கண்மலர்ந்த போது அருகே மண்டியிட்டவாறு அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் ரிஷ்யசிருங்கனை காண்கிறாள்.

அவன் கையை பற்றுகிறாள். ஓடையின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் கயிற்றை மற்றொரு கையால் பிடித்துக் கொண்டு ஓடைக்குள் இறங்குகிறாள்.

அவள் பின்னால் பசுவை தொடரும் கன்றைப் போல் ரிஷ்யசிருங்கன்....

(தொடரும்...)





Comments