சம்பவம் - I

 சம்பவம் - I



அல்ஸைமர்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக தான் யார் என்பதையே மறந்து இறுதியில் இறந்து போகும் மோகன்லாலின் அற்புதமான நடிப்பை 'தன்மாத்ரா' வில் பலர் பார்த்திருக்கலாம்.

பார்க்காதவர்கள் கண்டிப்பாக பார்க்கவும். மிக அற்புதமான மலையாள படம் அது.

இந்த அல்ஸைமர்ஸ் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நமக்கெல்லாம் வராது..., நான் நல்ல நினைவாற்றல் கொண்டவன்... என்றெல்லாம் இடது கையால் அதை தள்ளிவிட முடியாதது.

முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன், மெக்கன்னாஸ் கோல்ட், லாரன்ஸ் ஆப் அரேபியா போன்ற காலத்தால் அழியாத காவிய படங்களில் நடித்த ஒமர் ஷெரிப் போன்று பலருக்கும் அது வந்திருக்கிறது.

சரி. இப்போது மேட்டருக்கு வருவோம்.

கடந்த வாரத்தில் ஒரு நாள் எங்கள் குடும்ப நண்பர் மோகன் ராவ் அவர்கள் வாட்ஸாப்பில் நமக்கு அல்ஸைமர்ஸ் இருக்கிறதா என்று சோதித்து கொள்ளும் வகையில் ஒரு சின்ன டெஸ்ட் ஒன்றை பகிர்ந்திருந்தார்.

அந்த டெஸ்டில் ஒன்று முதல் மூன்று லெவல்கள் இருந்தன. ஒவ்வொன்றாய் க்ளியர் செயதேன். அதுவும் டெஸ்டில் குறிப்பிடப்பட்டிருந்த நேரம் முடிவதற்கு முன்பே மூன்றையும் முடித்தேன்.

இரவு டின்னரின் போது டெஸ்ட் பற்றிய தகவலையும் அதை விரைந்து முடித்ததையும் மகிழ்ச்சியாக பசங்களிடம் சொன்னேன்.

ஒரு மாதிரியாக என்னை பார்த்த சிரித்த மூத்தவன் சாய், நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். அப்போ தான் நீ சொன்ன மேட்டரில் உள்ள சீரியஸ்னெஸ்ஸை நம்புவேன் என்றான்.

கேளுடா... என்றேன்.

கால வரிசையை மாற்றி மாற்றி குடும்பம், அலுவலகம், வாழிடம், வரலாறு, அரசியல் என்று பலதரப்பட்ட கேள்விகளை கேட்டான்.

பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் சொன்னேன். அவற்றில் நிறைய சரியான பதில்கள்.

கடினமான சில கேள்விகளுக்கு நிஜமாகவே பதில்கள் தெரியவில்லை. அது ஒன்றும் பெரிய அளவில் இல்லை.

ஸோ, நினைவாற்றலில் பெரிய குறைபாடு இல்லை, ஞாபகம் குறித்த மூளை செயல்பாடுகள் நமக்கு ஓக்கே தான் என்று சந்தோஷப்பட்டேன்.

அப்படியெல்லாம் நாம் மகிழ்ச்சியாக இருந்து விட முடியுமா ? அப்புறம் நம் ஜாதக ராசி என்னாவது..?

சில நாட்கள் கழித்து தான் அந்த 'சம்பவம்' நடந்தது.

என்ன சம்பவம் என்று கேட்கிறீர்களா ?

சொல்கிறேன்.

அதற்கு முன் தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் 'இன்று ஒரு தகவலில்' கேட்ட ஒரு கதையை சொல்கிறேன்.

இரண்டு நண்பர்கள் ரயில் நிலையத்திற்கு வந்தார்கள். அவர்களில் ஒருவர் ஊர் செல்ல வேண்டியவர். மற்றொருவர் அவரை வழியனுப்ப வந்தவர்.

மிக மிக அன்பாகவும் நட்பாகவும் மகிழ்ச்சியாகவும் பேசிக் கொண்டிருந்தனர் இருவரும்.

இரயில் வந்தது. ஒருவர் வண்டியில் ஏறினார். மற்றவர் அழுதுகொண்டே அவரை வழியனுப்பினார். ரயில் கிளம்பியது.

வழியனுப்பிய நண்பர் கண்ககளை துடைத்தபடி வண்டியில் ஏறிய நண்பருக்கு 'பை' சொன்னார். ரயில் வேகமெடுத்தது.

துக்கம் தாளாத நண்பர் பிளாட்பாரத்தில் இருந்த பெஞ்சில் அமர்ந்தார். குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்.

ரயிலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டு தன் அறைக்கு திரும்பி கொண்டிருந்த ஸ்டேஷன் மாஸ்டர் நம் நண்பர் அழுவதை கவனித்து விட்டார்.

அழும் நண்பரின் அருகில் வந்து அவர் முதுகில் கை வைத்து அவரை தேற்ற ஆரம்பித்தார்.

'கவலைப்படாதீங்க சார் ... மறுபடியும் அவரை நீங்க சீக்கிரமா சந்திப்பீங்க.. பிரிவுகள் எல்லாம் நிரந்தரம் இல்லை... அமைதியாக வீட்டுக்கு போங்க..' என்றார்.

ஸ்டேஷன் மாஸ்டரை வெறித்து நோக்கிய நம் நண்பர், அவரை நோக்கி சொல்ல ஆரம்பித்தார்...

ட்ரெயினில் ஏறி ஊருக்கு போக வேண்டியவன் நான் தான் சார். அவன் என்னை வழியனுப்ப வந்தவன்..' என்றார்.

ஸ்டேஷன் மாஸ்டர் மயங்கி சரிந்தார்.
~
இப்போ, பதிவின் இடையில் நான் சொன்ன அந்த 'சம்பவ'த்தை பார்ப்போம்.

(தொடரும்...)




Comments