ரிஷ்யசிருங்கர் - I

ரிஷ்யசிருங்கர் - I



பெயரே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா ? அவர் பற்றிய தகவல்களும் அவர் வரலாறும் இன்னும் கூடுதல் சுவாரஸ்யம் ஏற்படுத்தும்.
~
கதைக்குள் போவதற்கு முன் :

சிறுவயது முதல் பள்ளிப்படிப்பு வரை என் பாட்டியிடம் தான் நான் வளர்ந்தேன்.

என் கொள்ளுப்பாட்டி, அதாவது என் பாட்டியின் அம்மா, ஆச்சி என்று அவரை அழைப்போம், அவர் என்னை தன் மடியில் உட்காரவைத்து உணவு ஊட்டிக் கொண்டே நிறைய கதைகளையும், தமிழ் ஆத்திச்சூடி, ஆங்கில ஆல்ஃபபேட், ஒன்று முதலான எண்ணிக்கைகள், தமிழ் ஆங்கில மாதங்களின் பெயர்கள் என பலவற்றையும் எனக்கு சொல்லிக் கொடுப்பார்.

அவர் தான் என் முதல் ஆசான்.

அவர் அன்று சொல்லிய கதைகளில் ஒன்று ரிஷ்யசிருங்கர் கதை.
இனி ரிஷ்யசிருங்கர்.
~
ரிஷ்யர்சிருங்கர் நினைத்தால், அவர் காலடி பட்டால், மழை பெய்யும் என்பது ஒரு ஆச்சரியம் என்றால், அவர் பிறந்தது முதல் தன் இளமைக்காலம் வரை பெண்களையே பார்த்தறியாது வளர்ந்தவர் என்பது மற்றொரு ஆச்சரியம்.

யார் இந்த ரிஷ்யசிருங்கர் ? அவரைப் பற்றி ஏன் ராமாயணம், மகாபாரதம் ஆகிய இருபெரும் இதிகாசங்களிலும் புத்த ஜாதக கதைகளிலும் சிலாகித்து கூறப்பட்டுள்ளது ?

பார்க்கலாம்.
~
விபாண்டகர் என்னும் கோபக்கார முனிவர் அடர்ந்த கானகத்தில் கடும் தவம் மேற்கொள்கிறார். அவர் தவத்தை கண்டு தேவேந்திரன் அஞ்சுகிறான். தவ வலிமையால் கூடுதல் சக்தி பெற்று தன் தேவேந்திர பதவிக்கு விபாண்டகர் ஊறு விளைவித்துவிடுவாரோ என்று அஞ்சுகிறான்.

வழக்கம்போல் தவத்தை கலைக்க தேவலோக மங்கையான ஊர்வசியை அனுப்புகிறான்.

மின்னல் போல் வெட்டிய ஒரு வெளிச்ச மழையில் விபாண்டகரின் தவம் கலைந்தது. கண்விழிக்கிறார்.

தேவமங்கை ஊர்வசியை பார்க்கிறார். அவள் அழகிலும் ஆடல் பாடலிலும் மயங்குகிறார். அவள் மீது மையல் கொள்கிறார். அதன் விளைவாக அவர் ஜீவசக்தி தளும்பி வழிந்து அருகிலிருக்கும் சிற்றோடையில் கலக்கிறது.

தாகம் தணிக்க அங்கு வந்த கலைமான் ஒன்று ஓடையின் நீரைப் பருகுகிறது. தண்ணீருடன் சேர்ந்து விபாண்டகரின் ஜீவ அணுக்களும் கலைமானின் வயிற்றில் சேர்கிறது.

தேவலோக அப்சரஸ் ஆக இருந்து ஒரு சாபத்தில் மானாக மாறிய அந்த கலைமானின் வயிற்றிலிருந்து தலையில் கொம்புடன் அழகான குழந்தை ஒன்று பிறக்கிறது.

பிரசவித்தவுடன் இறக்கும் அந்த மான் உருவில் இருந்த அப்சரஸ், தன் சாபம் நீங்கி அப்சரஸ் ஆக மீண்டும் மாறி தேவலோகம் செல்கிறாள்.

குழந்தையின் அழுகுரல் விபாண்டகரின் கவனத்தை ஈர்க்கிறது. தனித்து விடப்பட்ட குழந்தையை தன் கரங்களில் ஏந்திக் கொண்டு ஆசிரமத்திற்கு வருகிறார்.

அந்தக் குழந்தையை வளர்க்க ஆரம்பிக்கிறார். ரிஷ்யசிருங்கர் என்று குழந்தைக்கு பெயர் சூட்டுகிறார்.

ரிஷ்யசிருங்கன் வளர ஆரம்பிக்கிறான். அடர்ந்த வனமும் பறவைகளும் மிருகங்களும் தந்தையும் மட்டுமே அவன் அறிந்த உலகம்.

பெண் என்னும் படைப்பையே பார்த்தறியாமல் வளர்கிறான் ரிஷ்யசிருங்கன்.

தந்தை விபாண்டகர் அவனுக்கு குருவாக இருந்து மந்திரங்களையும் வேதங்களையும் உபதேசிக்கிறார். தவ வாழ்க்கைக்கு அவனை தயார் செய்கிறார்.

மெல்ல வளரும் ரிஷ்யசிருங்கனுக்கு, அவன் மேற்கொள்ளும் தவ வாழ்க்கை உடலில் வலுவும், மேனியில் எழிலும் முகத்தில் தேஜஸையும் கொடுக்கிறது.

இயற்கை அவனுடன் இசைந்து நடைபோடுகிறது. அவன் காலடி படும் இடம் எல்லாம் செழிக்கிறது. வருணன் அவனுக்கு குடையாகிறான். ரிஷ்யசிருங்கன் தியானித்தால் அங்கு வருணன் மழையை பொழிவிக்கிறான்.
~

இந்நிலையில் அக்கானகத்திற்கு அருகிலுள்ள அங்க தேசத்தை பஞ்சம் சூழ்ந்து கொள்கிறது. பனிரெண்டு ஆண்டுகளாக மழையே அங்கு பொழியவில்லை. கடும் பஞ்சத்தில் மக்கள் கொத்து கொத்தாக சாகிறார்கள். அமைச்சர்கள் கூறும் எந்த யோசனையும் பலிக்கவில்லை. செய்வதறியாது திகைத்து நிற்கிறான் அங்க தேச அரசன் ரோமபாதன்.

அப்போது ரோமபாதனை சந்திக்க வரும் முனிவர் ஒருவர் விபாண்டகர் பற்றியும் அவர் மகன் ரிஷ்யசிருங்கனைப் பற்றியும் அரசனிடம் கூறுகிறார்.

ரிஷ்யசிருங்கனின் காலடி பட்டால் மழை பொழியும் என்று அவர் கூறும் யோசனை அரசனை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. முனிவரை தக்க மரியாதை செய்து அனுப்பி வைக்கிறார் ரோமபாதர்.

ரோமபாதரின் மகள் சாந்தா. மிக அழகானவாள். அதைவிட மிக அறிவானவள். மதியூகம் நிரம்பிய சாந்தாவிடம் முனிவர் கூறிய விவரங்களை தெரிவித்து ஆலோசனை கேட்கிறார் ரோமபாதன்.

சாந்தாவைப் பற்றிய மிக சுவாரஸ்யமான ஃபிளாஷ்பேக் ஒன்று உள்ளது. கதையின் இறுதியில் அதைப் பார்க்கலாம்.

சாந்தா கூறிய ஆலோசனை என்ன ? மன்னர் அதை செயல்படுத்தினாரா ? ரிஷ்யசிருங்கன் அங்க நாட்டிற்குள் காலடி எடுத்து வைத்தாரா ? மழை பொழிந்ததா ? பஞ்சம் தீர்ந்ததா ?

வரும் பதிவில் பார்க்கலாம்.

(தொடரும்..)




Comments