தேவ கானங்கள்

இசை


தேவ கானங்கள் 


மன்னார்குடி வெஸ்டர்ன் பள்ளியில் படித்த நாட்கள் ஏனோ நினைவுக்கு வந்தது. ஒருவேளை இன்று கிரிஸ்த்துமஸ் என்பதனால் போலும்.

காலை 09:15 மணிக்கு பிரேயர். பைபிளிலில் இருந்து கொஞ்சம் வரிகள். பின் கிரிஸ்த்துவ ஸ்தோத்திரப் பாடல் ஒன்று. அதன் பின் ஒருமைப்பாட்டு உறுதிமொழி. கடைசியாக தேசியகீதம்.

ஸ்தோத்திரப் பாடல் பாடுவதற்கு துரைசாமி வாத்தியார் தலைமையில் நான்கு பசஙகள். துரைசாமி வாத்தியாருக்கு இசை ஞானம் உண்டு. பிற்காலத்தில் அவர் மகன்களுடன் இணைந்து ஆர்க்கெஸ்ட்ரா ஒன்றை சொந்தமாக வெற்றிகரமாக நடத்தி வந்தார்.

துரைசாமி வாத்தியார் பள்ளி பிரேயர் பாடல் பாடும் குழுவில் நானும் ஒரு நிரந்தர உறுப்பினர். என் தாயார் மற்றும் பாட்டி ஆகியோர் நல்ல சங்கீத ஞானம் உள்ள இசை குடும்பம் என்பதால் என்னையும் சேர்த்துக் கொண்டார் போலிருக்கிறது.

துரைசாமி வாத்தியார் ஒரு நாலைந்து பாட்டை எங்களுக்கு சொல்லி கொடுத்திருந்தார். அவற்றை தான் திரும்ப திரும்ப நாங்கள் பாடுவோம். அவை :
1. ஐயய்யா நான் வந்தேன் தேவ ஆட்டுக்குட்டி வந்தேன்....
2. தேவ பிதா எந்தன் மேய்ப்பனல்லோ....
3. சர்வலோகாதிப நமஸ்காரம்...
போன்றவை.

நிஜமாகவே ரொம்ப அற்புதமான பாடல்கள் அவை.

பாடிக்கொண்டிருக்கும்போது அவ்வப்போது கையை பிடித்து கிள்ளுவார். சில நேரங்களில் பலமாக கையை பிடித்து இழுப்பார். பாடும் குரலை கடுமையாக்கி கொள்வார்.

அதற்கு காரணம் நாங்கள் சுதி விலகி போகிறோமாம்.

ஒரு நாள் என் தாயார் எங்களை பள்ளியில் விட்டுவிட்டு ஓரமாக நின்று பிரேயரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அன்றும் துரைசாமி வாத்தியார் தன் சேஷ்டையை விடவில்லை. நான் கலக்கமாக அவ்வப்போது அம்மா முகத்தை பார்த்துக் கொண்டே பாடினேன்.

பிரேயர் முடிந்து கலைந்து சென்றுவிட்டோம். அம்மாவும் புறப்பட்டுவிட்டார்.

ஸ்கூல் முடிந்து மாலை வீடு சென்றேன். பிரேயரை பற்றி பேச்சு வந்தது.

சிரித்துக் கொண்டே அம்மா சொன்னார்,
நீங்க நல்லா தாண்டா பாடினீங்க துரைசாமி சார் குரல் தான் எங்கெங்கோ போயிட்டு வந்தது. சுதி சுத்தமா சேரலை என்றார்.
பாட்டியும் சேர்ந்து சிரித்தார்.

இருந்தாலும் துரைசாமி வாத்தியார் ரொம்ப நல்லவர். பசங்களை அடிக்கமாட்டார். அவை கூச்சம் இன்றி என்னால் ஓரளவு இன்றும் பாட முடிகிறது என்றால் அதற்கு அவர் தான் காரணம்.

அந்த நன்றி என்றும் என்னிடம் உண்டு.
~
இந்த மாத ஆரம்பத்தில் பெங்களூரு சென்றிருந்தபோது என் சகலர் மற்றும் அவர் பேரக்குழந்தைகளுடன் சேர்ந்து கரோக்கி பின்னனியில் மைக் வைத்துக் கொண்டு ரொம்ப நாள் கழித்து சில பாடல்கள் பாடினேன். அம்றைய தினம் மனதில் மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
~
துரைசாமி வாத்தியார் காலத்து நிகழ்வுகள் எல்லாம் பசுமையாய் நினைவில் இருக்கின்றன. ஆனால்,
ஸ்கூட்டரில் வீட்டுக்கு வரும் வழியில் தான் எந்த திருப்பத்தில் வண்டியை திரும்புவது என்பது அடிக்கடி மறந்து போய்விடுகிறது.
~



Comments