நண்பகல் நேரத்து மயக்கம்

 சினிமா



நண்பகல் நேரத்து மயக்கம் (2023)

சமூக ஊடகங்களில் பலர் ஆஹா ஓஹோ என்னும் ரகத்தில் புகழ்ந்த்து தள்ளியதை வைத்து சில நாட்களுக்கு முன் ஒரு வார இறுதி நாளில் 'நண்பகல் நேரத்து மயக்கம்' திரைப்படத்தை பார்க்க மதிய நேரத்தில் சாப்பிட்டு முடித்தபின் டிவி பெட்டி முன் அமர்ந்தேன்.

முதல் காட்சி வேளாங்கண்ணி சர்ச் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
நிமிர்ந்து உட்கார்ந்தேன். அட நம்ம பக்கத்து ஊர்...

கொஞ்ச நேரம் சுற்றி சுற்றி சர்ச் வளாகம். அது ஒரு கால் மணி நேரம்.

பின் ஒரு வீணாப் போன லாட்ஜ். அதில் ஒவ்வொரு அறக்கதவை தட்டியபடியே ஒருவர். அது ஒரு கால் மணி நேரம்.

அப்புறம் 407 வண்டியில் பாடி கட்டப்பட்ட ஒரு கேரள சுற்றுலா வேன். அதில் பயணிகள் ஏறுவது ஒரு கால் மணி நேரம்.

அந்த வேன் நெடுஞ்சாலையில் ஓடுவது ஒரு 10 நிமிஷம்.

சாலையோர உணவுக் கடையில் நிறுத்தி பயணிகள் குறிப்பாக பெண்கள் டாய்லட் முன் நின்று பேசிக் கொண்டிருப்பது ஒரு 10 நிமிடம்.

சாப்பாட்டுக் கடையில் ஒரு 10 நிமிடம்.
சாப்பிட்டு முடித்து அரட்டை ஒரு 10 நிமிடம்.
விரைத்த உடல்மொழியோடும் களைத்த கண்களோடும் ரோபோ போல மம்முட்டி.

பின் மீண்டும் வண்டி ஸ்டார்ட்.

அப்புறம் கொஞ்ச நேரம் வண்டி சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் ஷாட் ஒரு 10 நிமிடம்.

வண்டி பாதியில் நிற்கிறது. டிரைவர் முகம் கழுவுகிறார்.

நம்ம ரோபோ வண்டியில் இருந்து இறங்குகிறார்.

நடக்க ஆரம்பிக்கிறார். நடக்கிறார் நடக்கிறார் நடந்துகொண்டே இருக்கிறார்.

ரோடில் நடக்கிறார்.
வயலில் நடக்கிறார்.
தெருவில் நடக்கிறார்.
சந்து பொந்துகளில் நடக்கிறார்.

மிஸ்டர் பீன் படம் ஒன்றில் கர்ஸன் க்ளே என்று ஒரு காரெக்டர் வருவார். அது கேன்ஸ் திரைப்பட விழா பற்றிய படம். பெயர் ஞாபகத்தில் இல்லை.

அந்த பட க்ளைமாக்ஸில் போட்டியில் கலந்து கொள்ளும் அவர் படத்தில் கர்ஸன் க்ளே படம் முழுக்க நடந்து கொண்டே இருப்பார்.

அந்த படத்திற்கு தான் கேன்ஸ் விழா விருது கிடைக்கும்.

அனேகமாக 'நண்பகல் நேரத்து மயக்கம்' படத்துக்கும் கேன்ஸ் விருது கிடைக்கலாம்.

அப்புறம் என்ன தான் ஆயிற்று படத்தில் என்று கேட்கிறீர்களா?
அதற்கப்புறம் யார் பார்த்தார்கள் படத்தை.

ரொம்ப நாள் கழித்து ஒரு பகல் நேர தூக்கம் நல்லபடியாக வாய்த்தது எனக்கு.





Comments