அஞ்சலி
காலை தூங்கி எழுந்ததுமே ஒரு ஷாக்கிங் நியூஸ். அதிலிருந்து மீள்வதற்குள் மற்றுமொரு அதிர்ச்சி செய்தி.
விருத்தாச்சலம் சரக துணப்பதிவாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு ஜீவானந்தன் இன்று அதிகாலை இயற்கை எய்திவிட்டார்.
1980 களின் பிற்பகுதியில் இருந்து அவரை நன்கு அறிவேன். வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர். பழகுவதற்கு இனியவர். மென்மையான இதயம் கொண்டவர்.
அவருடனான எனது பயணம் துறை தாண்டியும் தொடர்ந்து கொண்டிருந்தது. அவர் எங்கள் குடும்பத்தின் நல்ல நண்பர். நலம் விரும்பி. அனைத்து குடும்ப விஷயங்களும் அவரிடம் பகிர்ந்து கொள்வேன்.
அவ்வப்போது அவருடன் சேர்ந்து பணியாற்றும் நல்வாய்ப்பு அதிர்ஷ்டவசமாய் வாய்த்து அவருடனான நட்பை மேலும் மேலும் இறுக்கமாக்கி வைத்திருந்தது.
நான் சென்னைக்கு பணிமாறுதலில் வந்தபின்பும் அவருடன் குறைந்தது வாரம் ஒரு முறை பேசும் வாய்ப்பை தவற விடவில்லை.
கோடைக் காலங்களில் வேட்டைக்காரன் இருப்பில் (அவரின் ஊர்) உள்ள அவர் தோப்பில் காய்க்கும் மாங்கனிகளை சென்னை வரும் பேருந்தில் எனக்காக கொடுத்தனுப்புவார். குறைந்தது 50 மாங்கனிகளாவது இருக்கும்.
அவரின் அன்பு அலாதியானது.
சில மாதங்களாக துறை ரீதியாக சில பிரச்சினைகளை சந்தித்து வந்தார். அவரின் நேர்மை பிடிக்காதவர்கள் அவருக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தினர்.
அவர் மனதை வெகுவாக அப்பிரச்சினைகள் அழுத்திக் கொண்டிருப்பதாக என்னிடம் பேசும்போது தெரிவித்தார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் அவர் தாயாரின் மரணம் அவரை பாதித்தது. உடல்ரீதியாகவும் பிரச்சினைகள் ஜீவாவுக்கு ஏற்பட்டது.
மன அழுத்தங்களும் அதனால் ஏற்பட்ட உடல் நலக்குறைவும் அவரை நிலை சாய வைத்தது.
மென்மையான இதயம் கொண்ட இந்த நல்லவன் இந்த பொல்லாத உலகில் வாழ்ந்தது போதும் என்று ஆண்டவன் தன்னிடம் அழைத்துக் கொண்டான் போல் இருக்கிறது.
ஜீவாவை இழந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கு ஒருசகோதரனாய் என் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜீவாவின் ஆன்மா இறவனின் திருவடிகளில் அமைதியாக இளப்பாற பிரார்த்திக்கிறேன்.



Comments
Post a Comment