பேரன்பு
பேரன்பு
ஆனால் சில விஷயங்கள் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்ற காரணம் ரொம்ப முக்கியம் என்பதால் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்வொன்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
~
ஓய்வு பெற்ற கூட்டுறவு சார்பதிவாளர் திரு. சாம்பமூர்த்தி Sambamoorthy Muthian துறையில் நீண்ட நெடியகாலம் பணியாற்றிய சீனியர். தணிக்கை மற்றும் சட்ட விதிகளில் ஆழ்ந்த அறிவு மிக்கவர். 80 வயதை கடந்தவர். மனதிலும் உடல்நல பராமரிப்பிலும் இளைஞராகவே இருப்பவர்.
தன்னிடம் உள்ள துறை நடைமுறை ஞானம் மற்றும் சட்ட அறிவு ஆகியவற்றை பலருக்கும் பயன் தரத் தக்கவகையில் எல்லோருடனும் பகிர்ந்துகொண்டு வாழ்ந்து வருகிறார்.
இவருக்கு ஒரே மகன். அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
மனைவியை இழந்த சாம்பமூர்த்தி சார் தனியே மயிலாப்பூரில் வசித்து வருகிறார்.
சரி, இனி மேட்டர்.
~
யாரையுமே விட்டு வைக்காத சீன வைரஸ் சாம்பமூர்த்தி சாரையும் தொட்டுப் பார்த்தது.
RTPCR சோதனை கோவிட் பாஸிட்டிவ் என்ற ரிஸல்ட் வந்தது.
மனிதாபிமானம் மிக்க அலுவலரான Kumareswari Periyasamy இணப்பதிவாளர் அவர்களுக்கு தொலைபேசி மூலம் தகவலை சொல்கிறார் சாம்பமூர்த்தி சார்.
கொஞ்ச நேரத்தில் காரை எடுத்துக் கொண்டு மயிலாப்பூர் வந்த அவர் எனக்கு தொலைபேசியில் இத்தகவலை தெரிவித்து சாம்பமூர்த்தி சாரின் வீட்டு முகவரியை கேட்டார்.
நானும் அவருக்கு முகவரியை தெரிவித்தேன்.
உடனே சாம்பமூர்த்தி சார் வீட்டிற்கு சென்று அவர் நிலைமையை பார்த்துவிட்டு, ஆம்புலன்ஸை அழைக்கிறார்.
ஆம்புலன்ஸில் சாம்பமூர்த்தி சாரை ஏற்றிக் கொண்டு கிங் இன்ஸ்டிட்யூட் வந்த இணப்பதிவாளர் குமரேஸ்வரி மேடத்திற்கு அங்கு அட்மிஷன் கிடைக்க சிரமம் ஏற்பட்டுள்ளது.
துறையில் கூடுதல் பதிவாளராக, பால் கூட்டுறவு தணிக்கை துறை இயக்குநராக பணியாற்றும் திருமதி பிரமிளா மேடத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட அவரும் அங்கு வந்து சேர்ந்துவிடுகிறார்.
கடும் முயற்சிக்கு பின் அட்மிஷன் கிடைத்து கிங் இன்ஸ்டிட்யூட் டில் அனுமதிக்கப்பட்டார். சாம்பமூர்த்தி சார்.
அங்கு அவருக்கு ஸ்க்ரீனிங் டெஸ்ட் எடுக்கப்பட்டு கோவிட்டுக்கான சிகிச்சை ஆரம்பிக்கப்படுகிறது.
அவரை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை பால் தணிக்கை துறையில் பணியாற்றும் அன்பு தம்பி விஜய் ஏற்றுக் கொள்கிறார்.
அமெரிக்காவில் இருக்கும் சாம்பமூர்த்தி சார் மகன் இந்தியா வரமுடியாத கையறு நிலையில் இருக்கிறார்.
இந்நிலையில் கோவிட் தொற்றின் இரண்டாம் அலை சென்னையில் வேக வேகமாக உயர்ந்து கொண்டே சென்ற போது, ஓரளவு குணமடைந்த, வீட்டு தனிமையில் இருக்கக்கூடிய நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர். அவசரமாக அனுமதிக்கப்பட வேண்டிய புதிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் மருத்துவமனை நிர்வாகங்களுக்கு ஏற்படுகிறது.
சாம்பமூர்த்தி சார் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அவர் தனியராக இருப்பதால் வீட்டு தனிமையில் அவரால் இருக்கமுடியாத இக்கட்டான சூழ்நிலை. கண்டிப்பாக அவரை பார்த்துக் கொள்ள ஒரு கேர் டேக்கர் தேவை. இல்லையென்றால் கேர் செண்ட்டரிலாவது அவர் இருக்கவேண்டும்.
ஆனால் சூழ்நிலை அவருக்கு எதிராக இருந்தது. எல்லா இடங்களிலும் படுக்கைகள் நிரம்பி வழிந்தன.
இந்நிலையில் துறையில் கூடுதல் பதிவாளராக பணியாற்றி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த மதிப்பிற்குரிய திரு சிவன் அருள் IAS அவர்களிடம் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்படுகிறது.
சாம்பமூர்த்தி சாரின் மேல் மிக்க அன்பும் பெருமதிப்பும் கொண்டவர் ஆட்சியர் அவர்கள். தந்தை போல் சாம்பமூர்த்தி சாரிடம் அவர் பழகுவதை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்.
அவர் ஆலோசனையின் பேரில் சாம்பமூர்த்தி சார் ஒரு கேப் மூலம் திருப்பத்தூர் அழைத்து செல்லப்படுகிறார்.
அங்கு ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஏலகிரி ஹவுஸில் இயங்கும் கொரானா கேர் செண்ட்டரில் அனுமதிக்கப்படுகிறார்.
சாம்பமூர்த்தி சாருக்கு அங்கு வழங்கப்பட்ட சிறப்பான சிகிச்சையும், அந்த கேர் செண்ட்டர் அமைந்துள்ள இயற்கை எழில் மிக்க சூழலும் அவரை பூரணமாக குணமாக்குகிறது.
அங்கிருந்தபடி சில முறை என்னிடம் தொலைபேசியில் பேசிய அவரிடம் உற்சாகம் மிகுந்து காணப்பட்டதை அறிந்து மகிழ்ந்தேன்.
ஏலகிரி ஹவுஸில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சாம்பமூர்த்தி சார் நேராக மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு அழைத்து செல்லப்படுகிறார்.
அங்கு அவருக்கு தனி அறை ஒதுக்கி நோயில் இருந்து மீண்ட அவருக்கு தேவைப்படும் ஓய்விற்கு ஆவன செய்கிறார் ஆட்சியர் அவர்கள்.
தன் வீட்டிலிருந்தே அவருக்கு தேவைப்படும் சத்தான மற்றும் டயட் உணவுகளையும் நேரம் தவறாமல் வழங்குகிறார்.
உற்சாகமான மனநிலையில் என்னிடம் பேசிய சாம்பமூர்த்தி சார் மிக்க நன்றியுடனும் நெகிழ்ச்சியுடனும் மாவட்ட ஆட்சியர் தன்னிடம் காட்டும் பேரன்பை விவரித்தார்.
ஆட்சியர் அவர்களிடம் பேசும்போது ஒருமுறை 'தன் மீது காட்டும் அன்புக்கு என்ன கைம்மாறு செய்யமுடியும்' என்று தான் நெகிழ்ந்தபோது, "மகன் தந்தைக்கு செய்யும் கடமைக்கு கைம்மாறு எதிர்பார்க்கலாமா" என்று ஆட்சியர் பதிலளித்ததாக சாம்பமூர்த்தி சார் தெரிவித்தார்.
அவர் குரல் தழுதழுத்தது அப்போது.
சில நாட்கள் அங்கு தங்கியிருந்து உடலுக்கும் மனதிற்கும் தேவையான நிறைய புத்துணர்வை நிரப்பிக் கொண்டு அங்கிருந்து சென்னை திரும்பினார் சாம்பமூர்த்தி சார்.
'தாங்களும் தங்கள் குடும்பமும் உடல் நலனில் எச்சரிக்கையாக இருங்கள்' என்று தான் சென்னை கிளம்பும்போது ஆட்சியருக்கு சாம்பமூர்த்தி சார் கூறியபோது, 'திருப்பத்தூர் போன்ற இயற்கை வளம் சூழ்ந்த இடத்தில் பணியாற்றும்போது எந்த நோயும் கிட்டே வராது' என்று ஆட்சியர் சொன்னாராம்.
~
சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் ஆட்சியர் பணியில் இருந்து திரு சிவன் அருள் IAS அவர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டு பத்திரப் பதிவுத் துறையின் தலைவராக சென்னையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
~
வேலையை மட்டும் சக்கையாக பிழிந்து வாங்கும் நிறைய அலுவலர்களுக்கு மத்தியில் அன்பும், கருணையும், துயருற்றோருக்கு உதவும் மனித நேயமும் நிரம்பப் பெற்ற திரு. சிவன் அருள் அவர்களைப் போன்ற நிர்வாக அதிகாரிகள் கிடைத்திருப்பது எங்கள் காலத்தின் நற்பயன்.
அவருக்கு கீழும், அவரைப் போன்ற நற்பண்புகள் நிறைந்த மேலும் சில அலுவலர்களின் கீழும் பணியாற்றக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தமைக்காக நான் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.
என் குருநாதர், பீஷ்ம பிதாமகர் திரு. சாம்பமூர்த்தி சார் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டுகள் வாழ்ந்து துறைக்கும், என்னைப்போன்ற சிறியோருக்கும் கலங்கரை விளக்காக என்றும் திகழ இறைவனை வேண்டுகிறேன்.
~
திரு சிவன் அருள் IAS சார் அவர்கள் தன் நேர்மை, பணியில் ஒருமை, கூர்மையான அறிவு, பணியாளர்களை அரவணைத்து வேலை வாங்கும் திறன், அதே சமயம் அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை தீர்த்து வைக்கும் மனித நேயம், இவை எல்லாவற்றையும் விட மேலாக, எளிய மக்களுக்கு ஓடிச் சென்று உதவும் அவரின் பிறவிப் பண்பு ஆகியவற்றால் பத்திரப் பதிவுத் துறையில் முத்திரை பதித்து சாதிப்பார்.
குடும்பத்துடன் அவர் நலமாய் நூறாண்டுகள் வாழ அன்னை காளியை வணங்கி வேண்டுகிறேன்.



Comments
Post a Comment