எமர்ஜென்ஸி

எமர்ஜென்ஸி

~

எமர்ஜென்ஸியை ஆதரித்த பிரபலங்களில் நடிகர் திலகம் சிவாஜியும் ஒருவர்.

20 அம்ச திட்ட பிரச்சார படங்களான அவன் ஒரு சரித்திரம், இளைய தலைமுறை போன்ற படங்களை மாயவரம் சுந்தரம் தியேட்டரில் பார்த்த ஞாபகம் இன்றும் உள்ளது. இவைகளில் ஏதோ ஒன்றுக்கு வரிவிலக்கு கூட வழங்கப்பட்டது.

ஏழாவது படித்துக் கொண்டிருந்த என் மனதில் எமர்ஜென்ஸிக்கு எதிரான கருத்துகளை ஆல்பர்ட், சாம்பமூர்த்தி போன்ற எங்கள் நகராட்சி உயர் நிலைப் பள்ளி ஆசிரியர்கள் விதைத்தனர். இதனால் நான் எமர்ஜென்ஸி எதிர்ப்பாளர் ஆனேன்.

பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராட்டை சின்னத்தில் போட்டியிட்ட பழைய காங்கிரஸ் வேட்பாளருக்காக பிரச்சார ஊர்வலத்தில் மாணவர்கள் நாங்கள் சென்றோம்.

ஆனாலும் அதிமுக ஆதரவில் பசுவும் கன்றும் சின்னத்தில் போட்டியிட்ட குடந்தை ராமலிங்கம் வென்றார்.

எனக்கு தெரிந்த வட்டாரத்தில் என் மாயவரம் சித்தப்பா மற்றும் சி ஆர் சி யில் வேலை செய்த வரதராஜ் நைனா இருவர் மட்டும் எமர்ஜென்ஸியின் கடும் ஆதரவாளராய் இருந்தனர்.

ஆனால் வரதராஜ் நைனா திமுக வின் பயங்கர விஸ்வாசி என்பது தான் நகைமுரண்.



Comments