சினிமா ஜகமேதந்திரம்
சினிமா
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தனுஷ் படம்.
அசுரன், கர்ணன் போன்ற படங்களில் வெயிட்டான உணர்ச்சிபூர்வ கேரக்டர்களில் நடித்திருந்த தனுஷ், வித்தியாசமான கெட் அப்புகளில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கில் காணப்பட்டதால் இது கொஞ்சம் ஜாலியான படமாக இருக்கப்போகிறது என்ற எண்ணம் ஏற்பட்டிருந்தது.
போதாதற்கு 'ரகிட ரகிட' பாடல் வேறு தாறுமாறாக ஹிட் ஆகி எல்லோரையும் தாளம் போட்டு ஆட வேறு வைத்தது.
இந்த எதிர்பார்ப்புகளை இப்படம் நிறைவேற்றியதா ...
பார்க்கலாம்.
~
அட்டகாசமான ஆரம்ப காட்சிகளுடன் லண்டன் பின்னனியில் படம் துவங்குகிறது.
பீட்டர் மற்றும் சிவதாஸ் ஆகிய இரண்டு கேங்ஸ்டர்கள் மாற்றி மாற்றி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு ஒருவர் ஆட்களை மற்றவர் போட்டுத்தள்ளிக் கொண்டு இருக்கின்றனர்.
அதே நேரத்தில் மதுரையில் சுருளி (தனுஷ்) கேங்க், சர்வசாதாரணமாக எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி அதில் பயணம் செய்துகொண்டிருக்கும் மார்வாடி இளைஞரை போட்டுத் தள்ளுகிறது.
சுருளியை கொஞ்ச நாள் வெளியூர் சென்று ஒளிந்துகொள்ளுமாறு நண்பர்கள் அறிவுறுத்தவே அந்த நேரத்தில் லண்டன் அசைன்மெண்ட் ஒன்று சுருளிக்கு கிடைக்கிறது.
சுருளி லண்டன் வருகிறார். பீட்டர் கேங்கில் சேர்கிறார். சிவதாஸுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கிறார்.
ரெஸ்ட்டாரண்ட்டில் தமிழ் பாட்டு பாடும் அடில்லா என்னும் இலங்கை தமிழ்ப் பெண்ணை கண்டதும் காதலிக்க துவங்குகிறார்.
அசைண்மெண்ட்டில் ஒரு பகுதியாக சிவதாசையும் போட்டு தள்ளுகிறார்.
இலங்கை தமிழ்ப்பெண்ணான அடிலா சுருளியுடன் பழகியவாறே சுருளியை சிவதாஸ் கேங்க்குக்கு காட்டிக் கொடுக்கிறார்.
அவர்களிடமிருந்து தப்பிக்கும் சுருளியை தானே கொல்லப் பார்க்கிறார். அவளிடமிருந்து தப்பிக்கும் சுருளிக்கு தன் கண்ணீர் பிளாஷ்பேக்கை அட்டில்லா கூறுகிறாள்.
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் குடியேறும் அகதிகளின் சோகவாழ்வும், அவர்களை வைத்து அங்கு நடைபெறும் அரசியலையும் சொல்கிறாள்.
சிவதாஸ் எப்படி அவர்களுக்கெல்லாம் காட் பாதராக இருந்தார் என்றும் விளக்குகிறாள்.
அதன் பின் சுருளி என்ன செய்கிறார், அவர் சந்திக்கும் விளைவுகள் என்னென்ன என்பது தான் மீதிப் படம்.
ஆரம்ப காட்சிகள் தவிர, படம் பார்த்து முடிக்கும் வரை நிறைய இடங்களில் கொட்டாவிகள் வருகிறன.
எங்கேயோ ஆரம்பித்து இலக்கின்றி பயணம் செய்து ஏனோ தானோவென்று படம் முடிகிறது.
பல இடங்களில் படத்தில் லாஜிக்கே இல்லை. ஆளாளுக்கு துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொள்கிறார்கள
இவ்வளவு கொலைகள் நடக்கும் லண்டன் மாநகரில் ஒரு போலீஸ் கூடவா இருக்க மாட்டார் ?
இவ்வளவு வீக்கான ஒரு கதையை தனுஷ் போன்ற ஒரு நடிப்பு அசுரனுக்கு எவ்வாறு கார்த்திக்கால் படமாக்க முடிந்தது ?
கார்த்திக் சுப்புராஜ் ரஜினி ரசிகனாக இருக்கலாம். ஆனால் அதற்காக தனுஷை ரஜினி இடத்திற்கு கொண்டு வர முயற்சி செய்திருப்பது படு அபத்தம்.
ரஜினியின் மேனரிசங்களில் தனுஷை பார்ப்பது கொடுமையாக இருக்கிறது.
வெறும் கேங்ஸ்டர் படமாகவே இருந்திருக்கலாம். சட்டவிரோத அகதிகள் குடியேற்றம் என்னும் ஒரு கனமான சப்ஜெக்டை படத்திற்குள் திணித்திருக்கவே வேண்டாம்.
எந்தவித ஹோம் ஒர்க்கும் இல்லாமல் இல்லீகல் இம்மிக்ரேஷன் பற்றிய புரிதல்களும் இல்லாமல், ஈழப்பிரச்சினை பற்றிய ஆழ்ந்த அறிவும் இல்லாமல் ஏதோ மசாலா பிளேவரை போல் அப்பிரச்சினையை இப்படத்தில் தூவியிருப்பது இயக்குனர் மேல் கோபத்தை ஏற்படுத்துகிறது.
'தீபன்' படத்தை ஒருமுறை பார்த்திருக்கலாம் கார்த்திக். அப்பிரச்சினை பற்றிய தெளிவு கிடைத்திருக்கும்.
க்ளைமாக்ஸ் காட்சி படத்தின் உட்சபட்ச காமெடி.
படம் முடிந்த பின்னரும் மனதில் நிற்பது 'ரகிட ரகிட..' பாடல் மட்டும் தான்.
ஜகமேதந்திரம் - மிகப்பெரிய ஏமாற்றம்.



Comments
Post a Comment