நேர்மை

நேர்மை


"நேர்மையாய் இருப்பதற்கு முதல் படி நேர்மையாய் இருப்பதைப் போல் நடிப்பது".


துறையில் என்னுடைய ஆசான் சொல்லிக் கொடுத்தது இது. முதலில் இது என்னை கொஞ்சம் குழப்பியது. அப்புறம் தான் விளங்கியது.

நேர்மையாய் இருப்பதாக காட்டிக் கொள்வதன் மூலம் நேர்மை பண்பு உள்ளுக்குள் inherit ஆகும். நம்மை நேர்மையாளராக பிறர் பார்க்க தொடங்குவர். பெரும்பாலானோரின் மனதில் நம்முடைய நேர்மை இமேஜ் பதிய தொடங்கும்.

அதன் பின்னர் நாம் செய்யும் காரியங்களுக்கு பிரதிபலனாய் ஏதாவது கேட்டால் கூட 'போங்க சார்.. விளையாடாதீங்க. உங்களைப்பற்றி நன்கு தெரியும் சார். உங்கள் உதவிக்கு நன்றி சார்..' என்று போய்விடுவார்கள்.

ஒரு ஷீல்ட் நம்மை சுற்றி உருவாகியிருக்கும். நேர்மையாளனாய் பரிணமிக்க தொடங்கிவிடுவோம்.

என் ஆசான் அன்று கூறிய இந்த விளக்கம் எவ்வளவு நிஜமானது.

என் அரசுப்பணி வாழ்வை நேர்மையுடன் இன்று வரை தொடர அஸ்திவாரம் இட்டது அவருடைய இந்த கருத்து.

என்னைப்போல் மிக மிகச்சிலருக்கே துறையின் மாறுபட்ட கிளைகளில்/பிரிவுகளில் பணிசெய்ய வாய்ப்பு கிடைத்திருக்கும்.

டெல்டா மாவட்டங்களில் சாதாரண தொடக்க நிலை கூட்டுறவு சங்கங்களின் தனி அலுவலர் முதல் மாநிலத்திலேயே மிகப்பெரிய பால் கூட்டுறவு சங்கத்தின் தனி அலுவலர் வரை பணியாற்றக்கூடிய வாய்ப்பு ஆண்டவனால் எனக்கு வழங்கப்பட்டது.

அது போல் கூட்டுறவுத் துறையில் சரக அலுவலகம் முதல் மாவட்ட/மண்டல அலுவலகங்கள் மற்றும் மாநில தலைமை அலுவலகம் வரை பல்வேறு நிலையிலான அலுவலகங்களில் பணி செய்யும் வாய்ப்பும் கிடைத்தது.

ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டம் போன்ற மத்திய அரசின் ப்ராஜக்ட் ஒன்றுடன் நான்கு ஆண்டுகள் இணைந்து பணியாற்றினேன்.

Functional Registrars என்று சொல்லப்படும், கூட்டுறவு செயல் துறைகளில் ஒன்றான பால்வளத் துறையில் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றும் நல்வாய்ப்பும் கிட்டியது.

அதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரும் கூட்டுறவு இயக்கமான பால் கூட்டுறவுகளில் (Milk Coops) ஒரு அங்கமாக, நாட்டின் அடித்தள மக்களுடன் இணைந்து அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு துணையாய் நிற்கும் பேறு கிடைத்தது.

அதே பால் கூட்டுறவுகளுக்கான தணிக்கைத் துறையிலும் உதவி இயக்குனராக மூன்றாண்டு காலம் தமிழகம் முழுக்க சுற்றி சுழன்று பணிசெய்யும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பின்பு எனக்கு கிடைத்தது தான் இதுவரையிலான என் கேரியரில் மிகச்சிறந்த பணியாக நான் கருதும் பணி.

அது, பல் மாநில கூட்டுறவு சங்கம் எனப்படும் Multi State Coops. ஒன்றில் செயல் அலுவலராக பணியாற்றக்கூடிய வாய்ப்பு.

அந்த அனுபவம் வித்தியாசமானது. சங்க உறுப்பினர்கள் மத்திய அரசின் அங்கமாக பணியாற்றி வருபவர்கள். தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்கள் சங்க செயல் எல்லைக்குள் வருகின்றன.

சங்கப் பணியாளர்களின் work culture வித்தியாசமானது. கார்பொரேட் ஸ்டைல். அலுவலகமே கார்பொரேட் அலுவலகம் போன்றிருக்கும். அன்றாட நடவடிக்கைகள் முழுக்க கணினி, online மயமாக்கப்பட்டவை.

தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குனர் குழு, அறிவிற் சிறந்தவர்கள். படிப்பாளிகள். சமூக சிந்தனை, அக்கறை மிக்கவர்கள். அதே நேரம் விளிம்பு நிலை மக்களின் துயர் துடைக்க ஓடிவந்து கரம் நீட்டுபவர்கள்.

சங்கப்பணிகள் முழுக்க முழுக்க online.

ஐந்து மாநிலங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள், தினசரி தாங்கள் சார்ந்த மாநில உறுப்பினர்களின் தேவைகளுக்காக உரையாடுவார்கள்.

செயல் அலுவலர் பணி கடினமானது. தினசரி நடவடிக்கைகளுக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டிய அலுவலர் அவரே. கடுமையான பணி தான். ஆனாலும் அனைவரின் அன்பான ஒத்துழைபுடன் சிறப்பாக பணியாற்ற முடிந்தது.

இதற்கு நடுவே இயக்குனர்கள் குழுவிற்கான தேர்தல் நடத்தவேண்டிய பொறுப்பு. கிட்டத்தட்ட மினி பொதுத் தேர்தல் போல் இருந்தது அது. 5 மாநிலங்களில் 15 செண்ட்டர்கள்.

இயக்குனர் பதவிகளுக்கு கடுமையான போட்டி. இரு அணியாக பிரிந்து தேர்தலை சந்தித்தனர்.

கடந்த தேர்தல்களில் கசப்பான சில நிகழ்வுகள் நடந்திருந்தன. அதனால் பாரபட்சமின்றி நடத்த வேண்டிய பெரும் பொறுப்பு எனக்கு இருந்தது.

ஆண்டவன் அருளால் மிக அமைதியாக, கிட்டத்தட்ட பிரச்சினைகள் ஏதுமின்றி சுமுகமாக முடிந்தது தேர்தல். தோற்றோர் வென்றோர் இரு அணியினரும் தேர்தல் நடத்தப்பட்ட விதத்தை பாரட்டினர்.

இன்றுவரை என் கேரியரில் மறக்க முடியாத தேர்தல் அது.

பணியாளர்கள் சகோதரர்களாக பழகினார்கள். நிர்வாகிகள் தோழர்களாய் இருந்தனர். உறுப்பினர்கள் உறவினர்கள் போல் ஆனார்கள்.

இதுவரை நான் வகித்த பதவிகளிலேயே என் மனம் நிறைந்த பதவியாய் அமைந்தது அது.

நான் வேண்டாம் என்று மூன்று மாதங்களாக அன்பாய் தவிர்த்து வந்த பிரிவு உபச்சார விழா அவர்களின் பேரன்பின் காரணமாக நேற்று நடைபெற்றது.

என் மீது அவர்கள் காட்டிவரும் அன்பு மகத்தானது. என்றென்றும் அந்த அன்புக்கு நான் அடிமை.

நேர்மை ஒரு கவசமாய் எல்லா இடங்களிலும் என்னை காத்து வருகிறது. மனிதர்களின் மனங்களில் மறக்க முடியாத ஒரு இடத்தையும் அது பெற்றுத் தருகிறது.

வகிக்கும் பதவியால் நமக்கு பெருமை கிடைக்க நேர்மையுடன் கூடிய கடின உழைப்பு ஒன்று போதும். அது நம்மை மேன்மேலும் உயர்ந்த இடங்களுக்கு இட்டுச் செல்லும். நற்பெயரை ஈட்டித் தரும்.

~
பிகு : இது சுய தம்பட்டம் அல்ல. இந்த 'நேர்மை' எனும் சொல் சில தினங்களாக என்னை சுற்றி சுற்றி வருவதால் இந்த நீண்ட பதிவு.




Comments