நினைவுகள்

நினைவுகள்



பெண்களின் நினைவாற்றல் நிஜமாகவே பிரமிக்க வைக்கிறது.

இதுவரை நான் பார்த்த பெண்களிலேயே என் மனைவி தான் ஞாபக சக்தி நிறைந்த பெண்மணி என்று நினைத்திருந்தேன்.

ஆனால் அவரையும் விட ஞாபக சக்தி அதிகம் உள்ள இன்னொரு பெண்மணியை சில நாட்களுக்கு முன் சந்தித்தேன்.

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மன்னார்குடி தான். பின், வேலையின் பொருட்டு பல்வேறு ஊர்களில் வசிக்க நேர்ந்தது.

மன்னார்குடியை விட்டு கிளம்பி பல வருடங்கள் ஆன நிலையில் சில நாட்களுக்கு முன் மீண்டும் மன்னார்குடி செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

மிக மிக கொஞ்ச நேரம் மட்டுமே மன்னார்குடியில் இருக்க நேர்ந்தது.

நாங்கள் வசித்த பழைய ஏரியா பிருந்தாவன நகர் சென்று யாராவது தெரிந்த முகம் தென்படுகிறதா என்று பார்க்கும் ஆசை வந்தது.

ராஜகோபாலனை தரிசித்த பின் கார் பிருந்தாவன நகரை நோக்கி செல்ல ஆரம்பித்தது.

உப்புக்கார தெருவுக்குள் நுழைந்தது. காரின் வேகத்தை குறைத்து ஒவ்வொரு வீடாய் வரிசையாக பார்த்தபடி வந்தோம்.

கார், பிருந்தாவன நகரில் நுழையும் முன் உப்புக்கார்த் தெருவில் இடது பக்கம் திரும்ப எத்தனித்த போது தான் அந்த கார்னர் வீட்டின் ஹாலில் அவர் உட்கார்ந்திருந்ததை பார்த்தோம்.

யார் அந்த அவர் ?

அவர் தான் கஸ்தூரி அம்மா.

நானும் என் மனைவியும் காரில் வரும்போது தான் அவரைப் பற்றி பேசி கொண்டு வந்தோம்.

அவ்வளவு பாசமானவர். என் சிறுவயது முதல் அவரை நான் அறிவேன். என் அம்மாவின் நெருங்கிய தோழி. கிட்டத்தட்ட என் அம்மாவின் வயதொத்தவர்.

என் மனைவி திருமணம் முடிந்து மன்னார்குடி வந்த வேளையில் என் மனைவியுடன் கூடவே இருந்து தமிழில் பேசுவது முதல் ஹேண்டி வொர்க்ஸ் கற்றுத் தருவது வரை மிகவும் உதவிகரமாக இருந்தவர்.

கொஞ்ச காலமே என் மனைவி மன்னார்குடியில் இருந்தபோதும் இன்று வரை நினைவு கூறும் மனிதர்களில் முக்கியமானவர் கஸ்தூரி அம்மா.

அவரை பார்த்ததும் என் மனிவிக்கு மிக்க மகிழ்ச்சி. எனக்கும் தான்.

காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றோம்.

நாங்கள் உள்ளே நுழைவதை பார்த்து புருவம் சுருக்கி கூர்ந்து நோக்கினார்.

‘நான் யார் தெரிகிறதா..?’ என்று என் மனைவி கேட்டதும் உடன் முகம் மலர்ந்து சட்டென என் மனைவியின் பெயரை கூறினார்.

மை காட். ஷாக் ஆகிவிட்டேன் நான்.

என் மனைவி அப்போது மிகச் சிறிய வயதில் திருமணமாகி மன்னார்குடி வந்தவர்.சில பல மாதங்களே அங்கு இருந்தவர்.

ஆனாலும் என் மனைவியின் பெயரை அவர் அட்சரம் பிசகாமல் சொன்னது ஆச்சரியம் அளித்தது.

அடுத்து என்னை நோக்கி என் முழு பெயரையும் கூறியது அடுத்த ஆச்சரியம்.
என் முழுப்பெயர் அறிந்தவர்கள் ரொம்ப சிலரே.

வயது கூடியிருந்தாலும் பழைய உற்சாகம் குறையவில்லை. அன்புடன் உபசரித்து பழைய கதைகளை எல்லாம் பேச துவங்கினார்.

தன் மகனை மொபைலில் தொடர்புகொண்டு நாங்கள் வந்திருக்கும் விவரம் தெரிவித்து உடன் வீட்டுக்கு வரச் சொன்னார்.

மருமகள் பேரப்பிள்ளைகளை அறிமுகப்படுத்தினார்.

கஸ்தூரி அம்மாவும் என் மனைவியும் மாற்றி மாற்றி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

அவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டே நான் அவர்களை வெறிததபடி அமர்ந்திருந்தேன்.

நாம் தான் இறங்க வேண்டிய ஸ்டேஷனை தவறவிட்டு அடுத்த ஸ்டேஷனில் இறங்கிய அபார நினைவுத் திறன் கொண்ட ஆசாமியாயிற்றே.

ஹ்ம்…
~
அப்புறம் இன்னொரு தகவல்.

இந்த கஸ்தூரி அம்மா தான் ஏற்கனவே நான் என்னுடைய “அமானுஷ்யம்” தொடரில் குறிப்பிட்டிருந்த திண்டுக்கல் ரவியுடைய அம்மா. ரவியும் நானும் ஒரே மாதம் ஒரே ஆண்டில் சில நாட்கள் வித்தியாசத்தில் பிறந்தவர்கள். சிறு வயதில் என் உற்ற தோழன் அவன்.




Comments