இசை - மெலடி கிங் V குமார்
இசை
மெலடி கிங் V குமார்
மறைந்த இசையமைப்பாளர் வி.குமாரைப் பற்றி இந்த தலைமுறை இளைஞர்களுக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்காது.
ஆனால் அவருடைய பாடல்கள் பலவற்றை, பலசமயங்களில் இசை நிகழ்ச்சிகளில் ரசித்திருப்பார்கள். ரசிக்கும்போழுது அந்தப் பாடல்கள் வேறு ஒரு இசயமைப்பாளருடயது என்ற நினைவுடனேயே ரசித்திருப்பர்.
நானும் பலமுறை அவ்வாறு நினைத்துள்ளேன். பிறகு நான் நினைத்த இசையமைப்பாளரின் இசையில் அமைந்த பாடல் இது இல்லை, இது வேறு ஒருவர் என்று அறியும் போது ஆச்சரியப்பட்டுப் போயிருக்கிறேன்.
பெரும்பாலும் இவ்வாறு நான் MSV , இளையராஜா என்று நினைத்துக் கொண்டிருந்த பல பாடல்களுக்கு இசை அமைத்திருந்தவர் வி. குமார்.
எனக்குப் பிடித்த இரண்டாவது வரிசை இசையமைப்பாளர்களில் வி. குமார் பிரதானமானவர். (என்னுடைய பிற தேர்வுகள் – GK வெங்கடேஷ், விஜயபாஸ்கர், மரகதமணி (தெலுகில் கீரவாணி), தக்ஷிணாமூர்த்தி, தேவராஜன், ஷியாம், ரவீந்திரன், தேவேந்திரன் போன்றோர். மற்றும் சமீபத்தில் மறைந்த மகேஷ் (நம்மவர்).
வி குமார் - இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர். ஆரம்ப காலங்களில் கே. பாலசந்தர் மேடை நாடகங்களை இயக்கிக் கொண்டிருந்தபோது அவரின் நாடகங்களுக்கு இசை அமைத்து வந்தார். பின்னர் அவர் படங்களுக்கு ஆஸ்தான இசை அமைப்பாளர் ஆனார்.
மேற்கத்திய இசை கருவிகளை இந்திய சாஸ்திரீய இசையில் அற்புதமாக பயன்படுத்தும் உத்தி இவருக்கு கைவரப்பெற்றிருந்தது.
KJ.யேசுதாஸ், SP. பாலசுப்ரமணியன் போன்றோருக்கு ஆரம்ப நாட்களில் நிறைய வாய்ப்புகளை வாரி வழங்கி இளையராஜாவுக்கு முன்பே தமிழ்த் திரை இசை உலகில் ஒரு வெரைடியை உருவாக்க பெரு முயற்சி செய்து கொண்டிருந்தார்.
திரை இசையிலும் புதுமைகளை புகுத்தியவர் இவர். பொதுவாகவே உச்ச ஸ்தாயியில் பாடும் எல்.ஆர். ஈஸ்வரியை 'காதோடு தான் நான் பாடுவேன்' - என்று பாட வைத்தார். இசை குயில் சுசிலாவை 'நான் சத்தம் போட்டு தான் பாடுவேன்' - என்று அலற வைத்தார்.
1975 இல் வெளிவந்த 'தேன் சிந்துதே வானம்' படத்தில் இடம் பெற்ற 'உன்னிடம் மயங்குகிறேன்' பாடல். யேசுதாஸ் பாடியிருப்பார். வி. குமார் இசை. மிக அற்புதமான பாடல். இன்று கேட்டாலும் நம்மை மயக்கி வேறு உலகங்களுக்கு இட்டுச் செல்லும் சக்தி வாய்ந்த பாடல் அது. எனது பள்ளி நாட்களில் இலங்கை வானொலியில் தினந்தோறும் ஒளிபரப்பப்படும் பாடல் அது. ஒரு பேட்டியில் தனது மனைவிக்கு இன்றுவரை தான் பாடிய பாடல்களிலேயே மிகவும் பிடித்தமான பாடல் இது தான் என்று யேசுதாஸ் கூறியிருந்தார்.
'எல்லோரும் நல்லவரே' - என்னும் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த 'படைத்தானே பிரம்ம தேவன்' என்னும் பாடல் - SPB காட்சிக்கேற்ற உருக்கத்துடன் அப்பாடலை மிக அழகாக பாடியிருப்பார். அப்பாடலில் வரும் சரணம் மிக அற்புதமாக இருக்கும்.
“….உன்னை ரவிவர்மன் காணாமல் போனானடி
அந்த ரதிமாறன் கண்டாலும் தொலைந்தானடி
இது கோடியில் ஒருத்திக்கு வாய்க்கின்றது
அது கோடானு கோடியை ஏய்க்கின்றது
ஒரு அருள்வேண்டிக் நான் கேட்பேன் தேவனை
இனி தினந்தோறும் வரவேண்டும் சுகவேதனை…..”
இந்த வரிகள் பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் இன்னமும் என் மனதிலேயே நிற்கின்றன.
~
அந்த காலகட்டத்தில் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் மற்றும் திரை இசை திலகம் கே வி மகாதேவன் ஆகியோர் கோலோச்சிக் கொண்டிருந்த போது இவர்கள் பாணியை சாராமல் தனக்கென ஒரு ஸ்டைல் அமைத்துக் கொண்டு, குறிப்பாக மெலடியில் மென்மையாக பாடக்கூடிய பாடகர்களுக்கு பெரிய வாய்ப்புகள் வழங்கி பல மெலடிகளை உருவாக்கி ரசிகர்களால் 'மெலடி கிங்' என்று பாராட்டப்பட்டவர் வி. குமார்.
~
வி.குமாரின் அற்புதமான பாடல்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
காதோடு தான் நான் பாடுவேன் - வெள்ளி விழா
உன்னிடம் மயங்குகிறேன் - தேன் சிந்துதே வானம்
சிகப்பு கல்லு மூக்குத்தி - எல்லோரும் நல்லவரே
படைத்தானே பிரம்ம தேவன் - எல்லோரும் நல்லவரே
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் - இரு கோடுகள்
மதனோற்சவம் ரதியோடு தான் - சதுரங்கம்
உன்னை வாழ்த்தி பாடுகிறேன் - நூற்றுக்கு நூறு
தேவன் கீதமும் கண்ணன் கீதையும் - ராஜ நாகம்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா - நீர்க்குமிழி
அடுத்தாத்து அம்புஜத்தை - எதிர் நீச்சல்
உன்னை தொட்ட காற்று வந்து என்னை தொட்டது - நவக்ரஹம்
ஒரு நாள் யாரோ - மேஜர் சந்திரகாந்த்
மூத்தவள் நீ - அரங்கேற்றம்
சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன் - நாடகமே உலகம்
எங்கெல்லாம் வளையோசை - வெகுளிப்பெண்
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது - தூண்டில் மீன்
~
இந்த பாடல்களை ஒரு முறை கேட்டு தான் பாருங்களேன். திரும்ப திரும்ப காதுகளில் ரீங்காரமிடும்.
மனது 'மெலடி கிங்' இவர் தான் என்று சொல்லும்
❤️


Comments
Post a Comment